புதுடெல்லி: அடுத்த ஆண்டு மக்களவை தேர்தலில் ஒன்றிணைந்து போட்டியிடுவது தொடர்பாக 26 எதிர்க்கட்சிகள் பெங்களூருவில் இன்று கூட்டம் நடத்த உள்ள நிலையில், ஆளும் பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் போட்டி கூட்டம் பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் இன்று நடக்க உள்ளது. இதில் 38 கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். அடுத்த ஆண்டு நடக்க உள்ள மக்களவை தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கி உள்ளது. பாஜவை எதிர்க்கும் ஒத்த கருத்துடைய எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரள்வதற்காக பீகார் தலைநகர் பாட்னாவில் கடந்த மாதம் கூட்டம் நடத்தப்பட்டதைத் தொடர்ந்து, 2வது முறையாக பெங்களூருவில் இன்று எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட 26 எதிர்க்கட்சிகள் பங்கேற்க உள்ளன. இதற்கு போட்டியாக பாஜ தனது பலத்தை காட்டும் வகையில் தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளுடன் டெல்லியில் இன்று ஆலோசனை நடத்த ஏற்பாடு செய்துள்ளது. இக்கூட்டத்தில் அனைத்து பிராந்தியங்களின் பிரதிநிதிகளும் இருப்பார்கள் என்றும் பாஜ தனது கூட்டணி கட்சிகளுக்கு உரிய மதிப்பு அளிப்பதில்லை என்ற விமர்சனங்களுக்கு பதிலளிக்கும் விதமாக தனது பலத்தை காட்டப் போவதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. எனவே, எதிர்க்கட்சிகள் கூட்டத்தை விட அதிகமாக 38 கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பார்கள் என பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா தெரிவித்துள்ளார். 38 கட்சி தலைவர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்க அழைப்பில் அனுப்பப்பட்டுள்ளது.
ஐக்கிய ஜனதா தளம், உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா, அகாலிதளம் போன்ற பாரம்பரிய கட்சிகளுடனான கூட்டணியை பாஜ இழந்த நிலையில், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் போன்ற பிளவுபட்ட கட்சிகளையும், உபியில் ராஜ்பார் தலைமையிலான எஸ்பிஎஸ்பி, ஜிதன் ராம் மஞ்சி தலைமையிலான இந்துஸ்தானி அவாம் மோர்ச்சா, உபேந்திர குஷ்வாகா தலைமையிலான ஆர்எல்எஸ்பி போன்ற கட்சிகளையும் தன்னுடன் இணைத்துக் கொண்டுள்ளது. எனவே பிரதமர் மோடி தலைமையில் இன்று நடக்கும் கூட்டத்திற்கு பங்கேற்க வருமாறு இதுபோன்ற கூட்டணி கட்சிகளுக்கு பாஜ தேசிய தலைவர் ஜேபி நட்டா அழைப்பிதழ் அனுப்பி உள்ளார். கடந்த 2019ல் மக்களவை தேர்தல் வெற்றிக்கு பிறகு பாஜ உடன் கூட்டணி அமைத்த பல கட்சிகள் கூட்டணியை முறித்துக் கொண்டன. கூட்டணியில் உரிய மதிப்பு கிடைப்பதில்லை என பல முக்கிய கட்சிகள் குற்றம்சாட்டின. இந்த குற்றச்சாட்டிற்கு பதிலளிக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் நாட்டின் பிற பகுதிகளில் உள்ள பல உதிரிக் கட்சிகளையும் பாஜ தன்னுடன் இணைத்து பலத்தை காட்ட உள்ளது. 2024 மக்களவை தேர்தலில் 3வது முறையாக ஆட்சியை தக்க வைக்க தனது பிரசாரத்தை தீவிரப்படுத்தும் முன்பாக, பாஜவின் இந்த கூட்டணி கட்சிகள் ஆலோசனை கூட்டம் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டமாக பார்க்கப்படுகிறது. மேலும், 2019 மக்களவை தேர்தல் வெற்றிக்குப் பிறகு முதல் முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆலோசனை கூட்டம் நடத்தப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது.