கடலூர் மாவட்டத்தின் சிறு நகரங்களில் ஒன்று புவனகிரி. மகான் ராகவேந்திரர் அவதரித்த ஊர், காஞ்சிபுரம், விழுப்புரம் சிறுவந்தாடு போல பட்டுக்கு பேர் போன ஊர், எப்போதும் நீர் நிறைந்திருக்கும் வெள்ளாற்றங்கரையில் அமைந்த அழகான ஊர் என சில சிறப்புகள் இந்த ஊருக்கு உண்டு. இப்போது மேலும் ஒரு சிறப்பு சேரவிருக்கிறது. இந்த ஊரின் பெயரில் புவிசார் குறியீடு கிடைக்கப் போகிறது. அது மிதி பாகற்காய் எனும் சிறிய அளவிலான பாகற்காயால் கிடைக்கப் போகிறது.சித்திரை மாதம் பிறந்துவிட்டால் போதும். புவனகிரியைச் சுற்றியுள்ள கிராமங்களில் மிதி பாகற்காய் மயம்தான். இங்கு விளையும் மிதி பாகற்காய்க்கு தமிழகம் முழுக்க மவுசு இருக்கிறது. அந்தளவுக்கு ருசியும், மருத்துவக் குணமும் மிகுந்தது புவனகிரி மிதி பாகற்காய். இதனால்தான் இந்த ஆண்டின் தொடக்கத்தில் தமிழக அரசு தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டில் புவனகிரி மிதி பாகற்காய்க்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்படும் என்ற இனிப்பான அறிவிப்பு பிறந்தது. இது மிதி பாகற்காய் சீசன். பலரது நிலங்கள் மிதி பாகற்காய்க் கொடிகளால் பசுமை கண்டிருக்கின்றன. இப்படியொரு அழகிய சூழலில் புவனகிரியை ஒட்டிய கிராமங்களில் வலம் வந்தோம். புவனகிரியில் இருந்து குறிஞ்சிப்பாடி செல்லும் சாலையில் இருபுறமும் மிதி பாகற்காய் சாகுபடி களைகட்டுகிறது. அங்கு அறுவடை செய்யப்படும் காய்கள் சாலையோரம் குவித்து விற்பனை செய்யப்படுகிறது. இதை வாங்க சாலையில் செல்வோர் மிகுந்த ஆர்வம் காட்டுகிறார்கள். நாம் நமது பயணத்தின் இடையே தெற்குத்திட்டை கிராமத்தைச் சேர்ந்த முன்னோடி விவசாயி குமார் என்பவரை சந்தித்தோம்.
“ இங்க பல வருசமா மிதி பாகற்காய் சாகுபடி செஞ்சிக்கிட்டு வரோம். அத்தியாநல்லூர், வேளக்குடி, புளியங்குடி, நத்தமேடு, சாத்தப்பாடி, சொக்கன்கொல்லை, சித்தேரி, கீழ மணக்குடி, பூராம்பேட்டைன்னு புவனகிரியைச் சுத்தி இருக்குற பல கிராமங்கள்ல மிதி பாகற்காய் சாகுபடி பண்றாங்க. சித்திரை மாசம் வந்துட்டா பல பேரு இந்த சாகுபடியிலதான் இறங்குவாங்க. ஏன்னா இதுல அதிக வேலை இருக்காது, அதிக செலவு இருக்காது. ஆனா நல்லா விளைச்சல் கொடுக்கும். அதுக்கு நல்ல விலையும் கிடைக்கும். எனக்கு சொந்தமா 3 ஏக்கர் நிலம் இருக்கு. அதுல நெல், உளுந்து, பச்சைப்பயறு, வெள்ளரின்னு பயிர் பண்ணுவேன். சித்திரை மாசத்துல மட்டும் மிதி பாவக்காய் போடுவோம். அந்த சமயத்துல மழை இருக்காது. அதனாலதான் சித்திரை மாசத்துல பண்றோம். மற்ற மாதங்கள்ல மழை இருக்கும்ங்குறதால இதைப் பயிர் பண்ண மாட்டோம். மழை இருந்தா இதுக்கு ஆகாது. தண்ணி தேங்கி நின்னா செடி அழுகிடும்’’ என தன்னைப் பற்றியும், மிதி பாகற்காய் பற்றியும் சுருக்கமாக பேசிய குமார், அதன் சாகுபடி விபரங்கள் குறித்து பேச ஆரம்பித்தார்.
“ சித்திரை மாசத்துல நல்லா 3 சால் ஏர் ஓட்டுவோம். 3வது சால் ஏர் ஓட்டும்போது கம்பு விதைக்குற மாதிரி மிதி பாகற்காய் விதைகளைத் தூவுவோம். பரங்கிப்பேட்டையில் இருக்குற விவசாய ஆபிஸ்ல விதை வாங்குவோம். நான் பெரும்பாலும் போன வருசம் கிடைச்ச விதைகளை எடுத்து வச்சி பயன்படுத்திக்குவேன். ஒரு ஏக்கருக்கு விதைக்கிறதுக்கு 7 கிலோ விதை தேவைப்படும். காசு கொடுத்து வாங்கணும்னா ஒரு கிலோவுக்கு 300 ரூவா கொடுத்து வாங்கணும். விதைச்ச பிறகு 4 நாள் கழிச்சி தண்ணி பாய்ச்சுவோம். விதைச்ச உடனே தண்ணி பாய்ச்சக் கூடாது. உடனே பாய்ச்சுனா ஏர் ஓட்டும்போது வெளிய வந்த புல்லுங்க மறுபடி முளைச்சி களை அதிகமாகிடும். விதைச்சதுல இருந்து 8வது நாள்ல 2வது முறையா பாசனம் பண்ணுவோம். 15வது நாள்ல களையெடுப்போம்.
30 நாள்ல கொடி படர்ந்து காய்கள் காய்க்க ஆரம்பிக்கும். இந்த சமயத்துல முதல் அறுவடை பண்ணுவோம். இதை நாங்க குழிக்காய்னு சொல்வோம். அப்ப செடிக்கு 4,5 காய் இருக்கும். மொத்தமா 15 கிலோ காய் கிடைக்கும். இந்த சமயத்துல அறுவடை பண்ற காய்களுக்கு நல்ல ரேட் கிடைக்கும். காய்கள் குறைவாக கிடைக்கும்ங்குறதால விலை அதிகமா இருக்கும். 150 லிருந்து 250 வரை கூட விலை கிடைக்கும். 50 நாள்ல நல்ல காய்ப்பு இருக்கும். அதுல இருந்து 3 நாளுக்கு ஒருமுறை காய் பறிப்போம். 3 நாளுக்கு ஒருமுறை கண்டிப்பா காய் பறிக்கணும். இல்லன்னா காய்கள் பழமா மாறிடும். மிதி பாகற்காய் கொடிகள் நிலம் முழுசும் படர்ந்து இருக்கும். அதுல உட்கார்ந்து கையால தடவி தடவி காய்களைக் கண்டுபிடிச்சி பறிப்போம். இது அளவுல சின்னதாவும் இலை நிறத்துலயே இருக்குறதாலயும் சரியா தெரியாது. இதனால தடவிப் பார்த்து பறிக்கிறோம். காலைத் தரையில வச்சி, செடிங்கள மிதிச்சிக்கிட்டு பறிக்கிறதால இதை மிதி பாகற்காய்னு சொல்றோம்.
3 பறிப்பு பறிச்ச பிறகு ஏக்கருக்கு 15 கிலோ யூரியா தெளிப்போம். அதைப் பாசனம் செஞ்ச பிறகு தெளிப்போம். யூரியா போட்ட பிறகு காய்ப்பு அதிகமாகும். காய்களோட அளவும் அதிகமாகும். ஆனி மாசம் தொடங்குற காய்ப்பு புரட்டாசி வரைக்கும் இருக்கும். கார்த்திகை மாசம் வரைக்கும் காய் பறிக்கலாம். ஆனால் புரட்டாசி மாசத்துல இந்தப் பகுதியில வாய்க்கால் தண்ணி வந்துடும். அந்த சமயத்துல நெல் சாகுபடி செய்ய ஆரம்பிச்சிடுவோம். தண்ணி தேங்காத மேட்டு நிலமா இருந்தா புரட்டாசி வரைக்கும் காய் பறிக்கலாம். 3 நாளுக்கு ஒருமுறை காய் பறிக்கும்போது காலையிலும், மாலையிலும் பறிப்போம். வாரத்துக்கு 2 பறிப்புன்னு மாசத்துக்கு 8 பறிப்பு பறிப்போம். இந்த 8 பறிப்பு மூலமா 40 மூட்டை காய் கிடைக்கும். இந்த மூட்டை 50 கிலோ எடை கொண்டதா இருக்கும். 3 மாசத்துக்கு 120 மூட்டை காய் கிடைக்கும். ஒரு கிலோ காய்க்கு 80 ரூவாய்ல இருந்து 150 ரூவாய் வரைக்கும் விலை கிடைக்கும். நாங்க மொத்த வியாபாரிக்கு மூட்டையா வித்துடுவோம்.
1 மூட்டை காய்களை 4 ஆயிரத்துல இருந்து 5 ஆயிரம் ரூவா வரைக்கும் வித்துடுவோம். குறைஞ்சபட்சம் மூட்டைக்கு 4 ஆயிரம் கிடைச்சா கூட 120 மூட்டைக்கும் 4 லட்சத்து 80 ஆயிரம் ரூவா வருமானமா கிடைக்கும். இதுல தினமும் ஆள் வச்சிதான் காய் பறிக்க முடியும். அவங்களுக்கு தினமும் சம்பளம் கொடுத்தாகணும். இந்த நிலத்தை குத்தகை முறையிலதான் பயிர் பண்றேன். அதுக்கு குத்தகை பணம் கொடுக்கணும். பறிப்பு கூலி, மற்ற பராமரிப்புன்னு அதிகபட்சமா 1 லட்சம் செலவானாலும் 3 லட்சத்து 80 ஆயிரம் ரூவா லாபமா கிடைக்கும்’’ என மகிழ்ச்சி பொங்க கூறுகிறார்.
தொடர்புக்கு:
குமார்: 73739 75937.
குறிப்பிட்ட பகுதியில் விசேஷத்தன்மையுடன் விளங்கும் பொருட்களுக்கு புவிசார் குறியீடு வழங்கப்படுகிறது. அதன்படி தமிழகத்தின் மதுரை மல்லி, கன்னியாகுமரி மட்டி வாழை போன்றவற்றுக்கு ஏற்கனவே புவிசார் குறியீடு கிடைத்திருக்கிறது.
இந்த ஆண்டில் புவனகிரி மிதி பாகற்காயோடு ஓடைப்பட்டி விதையில்லா திராட்சை, திருநெல்வேலி அவுரி இலை உள்ளிட்ட 10 பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெற்றுத்தர நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
மிதி பாகற்காய் தமிழகத்தின் வேறுசில இடங்களில் விளைந்தாலும் புவனகிரி பாகற்காய் ரொம்பவே விசேசம். இதனால் இது மதுரை உள்ளிட்ட பகுதிகளுக்கு இங்குள்ள வியாபாரிகளால் அனுப்பி வைக்கப்படுகிறது.