Saturday, June 10, 2023
Home » பிதுர் தோஷம் போக்கும் பாஸ்கரேஸ்வரர்

பிதுர் தோஷம் போக்கும் பாஸ்கரேஸ்வரர்

by Kalaivani Saravanan

‘‘சூரியன்’’ – உலக உயிர்கள் பிறப்பதற்குக் காரணமாக விளங்குபவர் இவரே. அதனால் இவருக்கு ஆத்மகாரகன் என்று பெயர். அதுமட்டுமல்ல, நீத்தார் என்று சொல்லப்படும் நமது இறந்த முன்னோர்களுக்கும் இவரே காரகர் ஆவார். ஒருவரது ஜாதகத்தில் சூரியனின் நிலையைக் கொண்டு அவரது முன்னோர்கள் செய்த பாவ – புண்ணியங்களையும், அவர்களின் பலம் மற்றும் பலவீனத்தையும் நன்கு அறிந்து கொள்ளலாம். அப்படிப்பட்ட சூரியன்… பரிதி, பாஸ்கரன், இரவி, தினகரன், கதிரவன், பகலவன் எனப் பல பெயர்களாலும் போற்றப்படுகின்றார்.

அந்த சூரியனுக்கு உகந்த தெய்வமாக, அதிபதியாக விளங்குபவர் சிவபெருமான். சிவனை மதியாது, அவருக்கு எதிராக நடத்தப்பட்ட தக்ஷயாகத்தில் பங்குபெற்ற சூரியன், குன்ம நோயால் கடுந்துன்பத்திற்கு ஆளானார். சிவ அபராதத்தினால் உழன்ற சூரியதேவர், இப்பூவுலகில் 16 சிவத்தலங்களில் சிவலிங்கப் பிரதிஷ்டை செய்து, ஆத்மார்த்தமாக வழிபட்டார். அவற்றுள் பஞ்ச (ஐந்து) பாஸ்கர க்ஷேத்திரங்களுள் ஒன்றாகத் திகழ்கிறது பருதியப்பர் கோவில்.

ஆதியில் அரசவனமாகத் திகழ்ந்த இத்தலம் பாஸ்கர க்ஷேத்ரம் என்றும், பரிதிநியமம் என்றும் அழைக்கப்பட்டுள்ளது. பிதுர்தோஷ நிவர்த்தி தலமாகப் போற்றப்படும் இந்த திருத்தலம் சூரியன் நெறிமுறையோடு வழிபட்ட முதன்மையான தலம் என்றே சொல்லலாம். சூரியனின் பரிபூரண வழிபாட்டால் மகிழ்ந்த பரமன், சூரியன் முன் தோன்றி, வேண்டும் வரம் கேட்கின்றார். அதற்கு சூரியன்…. அஷ்ட மூர்த்திகளுள் ஒருவனாகத் தான் இடம்பெற வேண்டும் என்றும், ஆகம தீக்ஷா வழிபாட்டில் தனக்கும் பூஜை நடைபெற வேண்டும் என்றும் வரம் வேண்டினார்.

அவ்வாறே வரமருளிய சிவபெருமான்…. ‘‘இத்தலம் கயிலைபோல் பிரகாசித்து, ஊழிக்காலத்திலும் அழியாது நிலைபெற்றிடவும், இங்கு தீர்த்த நீராடி எம்மை வழிபடுவோர் சகல நன்மைகளையும் அடைவார் என மேலும் அருள்புரிந்து மறைந்தார். புறாவுக்காக தன் சதையையே தந்த சூரியகுலத் தோன்றலான சிபி சக்கரவர்த்தி, சில காலம் இங்கு தங்கியிருந்தார். அப்போது சிபி மன்னனின் குதிரைப் பாகன், குதிரைக்கு புல் அரிந்து கொண்டிருந்தபோது, அவனது வாள் பூமியில் புதையுண்டிருந்த சிவலிங்கத்தின் மீது பட்டு, இரத்தம் பீறிட்டது.

இதையறிந்த சிபி சக்கரவர்த்தி இரத்தம் வெளிப்பட்ட இடத்தைச் சுற்றிலும் இருந்த செடி – கொடிகளைக் களைந்திட சிவலிங்கம் தென்பட்டது. அந்த லிங்கமே சூரியன் ஸ்தாபித்து வழிபட்ட லிங்கமாகும். பின்னர் அங்கு ஆலயம் எழுப்பி, நித்திய – நைமித்திய பூஜைகளை நடத்தினார் சிபி மன்னர். தனது மூதாதையர் கால லிங்கத்தை உலகிற்கு தெரிவித்ததில் பெருமகிழ்ச்சி அடைந்தார். சாபத்தின் காரணமாக பிரம்ம சர்மா என்ற வேதியன் பருந்தாகவும், அவனது மனைவி சுசீலை கிளியாகவும் மாறினர்.

இத்தலத்தின் மகிமைகளை கேள்வியுற்று, இங்கு வந்து பாஸ்கர லிங்கத்தை வழிபட்டு, சாப விமோசனம் அடைந்து, சுய உருவம் அடைந்தனர். தனதத்தன் என்ற வணிகன் தனது அனைத்து செல்வங்களையும் இழந்து, வறுமை நிலையை அடைந்தான். பின்னர், இத்தல மகிமையை அறிந்து, இத்தலமடைந்து, புனித நீராடி, பரிதீசரை மனமுருகி வழிபட்டான். ஈசனருளால் இழந்த செல்வங்களை மீண்டும் பெற்று மகிழ்ந்தான். சேரமன்னனின் அமைச்சர் மகனான பத்மலோசனன் என்பவன் தீய வழியில் சென்று, பஞ்ச மகாபாதகங்களைப் புரிந்தான்.

இதன் விளைவாகத் தீராத கருங்குஷ்டநோய் பீடித்து துன்புற்றான். பின், தனது தவறுகளை உணர்ந்து, மனம் வருந்தி, பருதியப்பர் கோவிலுக்கு வந்து, தீர்த்தத்தில் நீராடி, சூரியன் வழிபட்ட இத்தல ஈசனை வணங்கி, வழிபட்டு நோய் நீங்கப்பெற்றான். உலகோரைப் புனிதப்படுத்தும் அன்னை கங்காதேவி பிரம்மதேவனின் ஆலோசனைப்படி கடகராசியில் குரு இணைந்திருக்கும் ஒரு வருட காலம் சூரிய புஷ்கரணியில் நீராடி, இங்கு பரமனை வழிபட்டு, பாவங்கள் தீர்ந்து, பரமனருள் பெற்றுள்ளாள்.

அதோடு, ஸ்ரீமார்கண்டேயரும் இந்த பெருமானைப் பூஜித்து புண்ணியம் பெற்றுள்ளார். திருஞானசம்பந்தரால் தேவாரம் பாடப்பெற்ற இத்தலம் காவிரித் தென்கரை தேவாரத் தலங்கள் 128 இல் 101 வது திருத்தலமாக வணங்கப்படுகின்றது. வள்ளல் இராமலிங்கரும் இத்தலத்தைப் போற்றியுள்ளார். கீழ்வேங்கை நாட்டில் அமைந்த ஊரிது. கிழக்கு நோக்கிய 5 நிலை இராஜகோபுரத்துடன் மூடுதளமாக அமையப்பெற்றுள்ளது. கோயிலைச் சுற்றிலும் நாற்புறமும் தேரோடும் வீதிகள்.

ஆலயத்தின் நேர் எதிரே சூரியன் உண்டுபண்ணிய சூரிய தீர்த்தமும், மேற்கில் சந்திரன் உற்பத்தி செய்த சந்திர தீர்த்தமும், மற்றும் தேவர்களால் உண்டான தேவ தீர்த்தமும் அமைந்துள்ளன. உள்ளே… முதலில் கணபதி தரிசனம். பின் பலிபீடம், கொடிமரம் மற்றும் நந்தியம் பெருமான். இது வெளிப் பிராகாரம். வெளிப் பிராகாரச் சுற்றில் வசந்த மண்டபமும், அதன் அருகில் தெற்கு நோக்கியவாறு அம்பாள் சந்நதியும் அமைந்துள்ளது. கருவறையுள் கருணை மழை பொழிகின்றாள் அன்னை ஸ்ரீமங்களாம்பிகை.

வடகிழக்கு மூலையில் யாகசாலையும், தென்கிழக்கில் மடப்பள்ளியும், அதனையடுத்து ஆலய தீர்த்தக் கிணறும் அமைந்துள்ளன. கன்னிமூலை எனப்படும் நிருர்தியில் கணபதி சந்நதியும், மேற்கில் வள்ளி – தெய்வானையுடனான கந்தன் சந்நதியும், வாயு மூலையில் கஜலட்சுமி சந்நதியும் அமைந்துள்ளன. மேற்குத் திருமாளிகைப் பத்தியில் திருமால், அனுமன் சிலாரூபங்கள் காணப்படுகின்றன. கோஷ்ட தெய்வங்களோடு கிழக்குத் திருமாளிகைப்பத்தியில் பைரவர், தனி சனீஸ்வரர், நவகிரகங்கள் மற்றும் சந்திரன் காணப்படுகின்றனர்.

வழக்கத்திற்கு மாறாக த்வனிஸ் (சிவ) சண்டிகேஸ்வரரோடு, தேஜஸ் (சூரியன்) சண்டரும் அபூர்வமாகக் காட்சி தருகின்றார். கொடிமரத்தின் நேராக மகாமண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என்கிற அமைப்பில் ஸ்வாமி சந்நதி அமைந்துள்ளது. மகாமண்டபத்தில் நடராஜர் சபையுள்ளது.
கருவறையுள் பிரம்மாண்டமான லிங்கத் திருமேனி கொண்டு பேரருள்புரிகின்றார் ஸ்ரீபாஸ்கரேஸ்வரர். தன்னை நாடி வந்து வழிபடுபவரது சகல விதமான தோஷங்களையும் போக்கி, நல்லருள் புரிந்திட காத்திருக்கின்றார்.

அற்புத தரிசனம். பெரியதொரு நாகாபரணராக ஒளி வீசுகின்றார். பரிதியப்பர், இரவீஸ்வரர் போன்ற பெயர்களாலும் அழைக்கப்படுகின்றார். கருவறையுள்ளே மூலவருக்கு அருகில் சுரங்கவழி ஒன்று உள்ளது. இந்த சுரங்க வழி தஞ்சை பெரிய கோவில் வரை செல்வதாகவும் கூறுகின்றனர். மூலவருக்கு நேரே நந்தியின் முன்புறம் சூரியன் நின்ற நிலையில் சிவபெருமானை வழிபடுகின்றார். பிற திருத்தலங்களில் இதைக் காண இயலாது. இத்தலத்தின் விருக்ஷமாக மரங்களுக்கெல்லாம் இராஜாவான அரசமரம் திகழ்கிறது.

இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட இவ்வாலயம் தஞ்சை மாவட்டம், கீழ்வேங்கை நாடார்களுக்கு சொந்தமானதாகும். இங்கு பங்குனி உத்திர பிரம்மோற்சவம் பத்து நாட்கள் வெகு விமரிசையாக நடைபெறுகின்றது. சித்திரையில் அக்ஷய திருதியை, மாசியில் ரதசப்தமி. இவற்றோடு ஏனைய சிவாலய விசேடங்களும் சிறப்புற நடத்தப்படுகின்றன. பிரதி வருடம் பங்குனி மாதம் 19 ஆம் தேதி காலை 6 மணியளவில் சூரியனின் ஒளிக்கதிர்கள் சிவனின் மீது படரும் சூரியபூஜை விழா விசேஷமாக நடக்கின்றது.

தினமும் நான்கு கால பூஜைகள் நடந்திடும் இவ்வாலயம், தினமும் காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மாலை 5 மணி முதல் 8.30 மணி வரையும் திறந்திருக்கும். ஜாதக ரீதியாக பிதுர்காரகனான சூரியன்…. சனி – இராகு – கேது – மாந்தி ஆகிய பாப கிரகங்களுடன் சேர்ந்தோ, அந்த பாப கிரகங்களின் பார்வை பட்டோ இருந்தாலும், சூரியன் அசுப ஸ்தானங்களில் மறைந்தாலும், அந்த ஜாதகருக்கோ அல்லது அந்த பரம்பரையினருக்கோ பிதுர் தோஷம் ஏற்படும்.

அப்படிப்பட்ட நிலையில் அந்த ஜாதகர், பிரதி தமிழ் மாதம் வளர்பிறையில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் சூரிய -சந்திர தீர்த்தங்களில் நீராடி, பஞ்சமூர்த்திகள் மற்றும் சூரியனுக்கும் சேர்த்து அபிஷேகம் செய்து, புது வஸ்திரம் சாற்றி, தயிர்சாதம் நிவேதனம் செய்து, பிராமணர்களுக்கு முடிந்த தானங்களைச் செய்ய அருள் கிட்டும்.

சித்தபிரம்மை, மன உளைச்சல் போன்றவற்றுக்கும் இத்தல வழிபாடு சிறந்ததாகும். அதோடு…. கார்த்திகை, உத்திரம், உத்திராடம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும், சிம்ம லக்னம் மற்றும் சிம்ம இராசியில் பிறந்தவர்களுக்கும், சூரியன் ஜாதகத்தில் ஆட்சி – உச்சம் – நீசம் பெற்றவர்களுக்கும், சூரிய தசை நடப்பவர்களுக்கும், பிரதி தமிழ் மாதம் முதல் தேதியில் பிறந்தவர்களுக்கும் கூட மேற்சொன்ன பிரார்த்தனை நல்ல பலனைத் தரும் என்பதில் சந்தேகமில்லை.

மஹாலயத்தில் இங்கு பித்ருகடன் தீர்ப்பவர்களுக்கு போகமான வாழ்வும், சிறந்த வாரிசும், தெய்வ கடாக்ஷமும் கிடைக்கப் பெறுவர் என்பது ஐதீகம். இங்கு இறந்த முன்னோர்களுக்கு சூரிய தீர்த்தக்கரையில் நீத்தார் கடன் செய்வது, காசி – இராமேஸ்வரத்தில் செய்த பலனைத் தரும் என்பது உறுதி.
தஞ்சாவூரிலிருந்து ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை செல்லும் வழியில் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேலஉளூருக்கு கிழக்கே இரண்டு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது பரிதியப்பர் கோயில்.

தொகுப்பு: பழங்காமூர் மோ.கணேஷ்

You might be intrested in

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi