புதுச்சேரி: ரூ.60 கோடி கிரிப்டோ கரன்சி மோசடியில் தொடர்பு இருப்பதாக வெளியான தகவலுக்கு நடிகை தமன்னா விளக்கமளித்து உள்ளார். இந்த வழக்கை, அமலாக்கத்துறைக்கு மாற்ற புதுச்சேரி மாநில போலீஸ் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர். புதுச்சேரி லாஸ்பேட்டையை சேர்ந்தவர் ஓய்வுபெற்ற அரசு அதிகாரி அசோகன் (70). இவரை மர்ம நபர் தொடர்பு கொண்டு, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என கூறியுள்ளார். இதனை நம்பி அவர், பல்வேறு தவணைகளில் ரூ.98 லட்சத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து ஏமாந்துள்ளார்.
இதுகுறித்து அசோகன் அளித்த புகாரின் பேரில், சைபர் க்ரைம் போலீசார் வழக்குபதிந்து, மோசடி சம்பவத்தில் ஈடுபட்ட கோவையை சேர்ந்த நித்திஷ்குமார் ஜெயின் (36), அரவிந்த்குமார் (40) ஆகிய 2 பேரை கடந்த 26ம் தேதி கோவையில் கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில், கடந்த 2022ம் ஆண்டு கோவையில் ஆஷ் பே எனும் பெயரில் நிறுவனம் தொடங்கியபோது, பிரபல நடிகைகளை அழைத்து வந்து, விளம்பரப்படுத்தி முதலீடுகளை ஈர்த்துள்ளனர். முதலீடு செய்த 100 பேருக்கு நடிகைகளை வைத்து கார்களை பரிசாக வழங்கியுள்ளனர். இதற்காக ஒரு நடிகைக்கு ரூ.25 லட்சமும், மற்றொரு நடிகைக்கு ரூ.18 லட்சமும் லட்சக்கணக்கில் பணம் தரப்பட்டுள்ளது தெரியவந்து உள்ளது.
இந்த மோசடியில் தலைமறைவாக உள்ள முக்கிய குற்றவாளிகளான இம்ரான் பாஷா, சையத் உஸ்மான் உள்ளிட்ட 10 பேரை பிடிக்க தமிழகம், தெலங்கானா மற்றும் அண்டை மாநில போலீசின் உதவியை நாடி உள்ளனர். இந்நிலையில், இந்த மோசடி நிறுவனத்துக்காக நடிகைகள் செய்த விளம்பர வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனால், இந்த மோசடி கும்பலுக்கும், நடிகைகளுக்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள 2 நடிகைகளுக்கு சம்மன் அனுப்பி விசாரிக்க போலீசார் முடிவு செய்துள்ளனர். இதற்காக சட்ட வல்லுனர்களுடன் போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
அதே நேரத்தில் ஆஷ்ேப நிறுவனத்தில் முதலீடு செய்து ஏமாந்ததாக ஏற்கனவே 9 புகார்கள் இருந்த நிலையில், தற்போது மேலும் 2 புகார்கள் புதுச்சேரி சைபர் க்ரைம் காவல் நிலையத்துக்கு வந்துள்ளது. இவ்வழக்கில் பிரபல நடிகைகள், முக்கிய பிரமுகர்கள் தொடர்பு என முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறி வருவதால், இவ்வழக்கை அமலாக்கத்துறைக்கு மாற்ற, புதுச்சேரி மாநில போலீசார் ஆலோசித்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் தனக்கு தொடர்பில்லை என்று நடிகை தமன்னா விளக்கமளித்து உள்ளார். இதுகுறித்து தமன்னா கூறுகையில், ‘என் மீது சுமத்தப்படும் கிரிப்டோகரன்சி மோசடி குற்றச்சாட்டு பொய்யானது, ஆதாரமற்ற புரளிகளை சில ஊடகங்கள், பொதுமக்கள் பரப்ப வேண்டாம். இந்த செய்தி என் கவனத்திற்கு வந்தது, அதனை தொடர்ந்து ஊடகங்களில் இருக்கும் எனது நண்பர்களிடம் இந்த பொய்யான தகவலை பரப்ப வேண்டாம் என தெரிவித்துள்ளேன். மேலும், எனது பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் பொய்களை, புரளிகளை பரப்பியவர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கையை எடுக்க போகிறேன்’ என்றார்.
அழகிகளுடன் உல்லாசமாக இருந்தபோது கைது
வழக்கை விசாரிக்கும் சைபர் க்ரைம் போலீசார் கூறுகையில், மோசடி கும்பலில் கைதான அரவிந்த்குமார், நித்தீஷ் ஜெயின் ஆகியோர் மோசடி செய்த பணத்தில் நட்சத்திர ஓட்டல்களில் அழகிகளுடன் உல்லாச வாழ்க்கை வாழ்ந்து வந்தனர். 2 பேரும் கோவையில் நட்சத்திர ஓட்டலில் அழகிகளுடன், உல்லாசத்தில் இருந்தபோதுதான் புதுவை சைபர் க்ரைம் போலீசார் அவர்களை கைது செய்துள்ளனர் என்றனர்.