எல்லா நிலத்திற்கும்,
எல்லா காலத்திற்கும்
ஏற்ற பாரம்பரிய நெற்பயிர்
இந்தியாவில் சராசரியாக ஒவ்வொரு இருபது கிலோ மீட்டருக்குள்ளும் நிலத்தின் தன்மை மாறுபடும். நம் முன்னோர்கள் இதைக் கருத்தில்கொண்டே ஒவ்வொரு பிரதேசத்திற்கும் ஏற்ற வகையில் பல லட்சம் நெல் ரகங்களைப் பாதுகாத்து வந்திருக்கிறார்கள். உவர் நிலத்துக்கு என ஒரு ரகம், மேட்டுப்பாங்கான நிலத்துக்கு ஒரு ரகம், வண்டலுக்கு ஒரு ரகம், செம்மண்ணுக்கு ஒரு ரகம், காற்றை எதிர்க்க ஒரு ரகம், பனியில் தளிர்க்க ஒரு ரகம், வாட்டும் வெயிலுக்கு ஒரு ரகம், கொட்டும் பேய் மழைக்கு ஒரு ரகம், உணவுக்கு ஒரு ரகம், மருந்துக்கு ஒரு ரகம், பதார்த்தத்துக்கு ஒரு ரகம் என சூழல் அறிந்து, தேவை அறிந்து பயிரிட்டார்கள். எல்லாவற்றையும் நவீனக் கலப்பு ரகங்களையும், ரசாயன உரங்களையும் நம்பி இழந்து நிற்கிறோம். சமீப காலமாய் நம்மாழ்வார், நெல் ஜெயராமன் போன்றோரின் முன்முயற்சியால் பல வகையான பாரம்பரிய நெல் ரகங்கள் மீட்கப்பட்டு பரவலாக்கம் செய்யப்பட்டு வருகிறது.அவற்றுள் ஒரு ரகம்தான் பிசினி. உணவே மருந்து என்பார்களே அதற்கு உதாரணம்தான் இந்த ரகம். பிசின் போல் ஒட்டும்தன்மை கொண்ட ரகம் என்பதால் இதற்கு பிசினி என்று பெயர். அரிசிகளில் சிவப்புஅரிசி விசேஷமானது என்கிறார்கள் உணவியல் நிபுணர்கள். சாதாரண வெள்ளைப்பழுப்பு அரிசியில் உள்ளதை விட அதிகமான தாதுப் பொருட்கள் இதில் நிறைந்திருக்கின்றன. இரும்புச்சத்தும் மக்னீசியமும் சிறப்பான விகிதத்தில் இதில் கலந்திருக்கின்றன. பொதுவாகவே அரிசியை விட உமியில்தான் அதிக சத்துக்கள் இருக்கும். அரிசியின் உட்புறம் உள்ள மாவுப்பொருள் வரை இந்தச் சத்துக்கள் ஊடுருவி இருக்கும் என்பதுதான் சிவப்புஅரிசியின் சிறப்பே. பிசினி நல்ல தடிமனான, மோட்ட ரகமான, தரமான சிவப்பு அரிசி.
இதில் உள்ள கார்போஹைட்ரேட்டின் அயானிக் சத்துகள் உடலை வலுவாக்குவதில் சிறப்பாகச் செயல்படும். நார்ச்சத்து செரிமானத்தை எளிதாக்கி வயிற்றைக் காக்கும். பிசினியில் உள்ள இரும்புச்சத்து பெண்களுக்கு மிகவும் ஏற்றது. கர்ப்பிணிகள் பிசினி அரிசிக் கஞ்சி உண்டு வந்தால் பிரசவம் மிக எளிதாகும். கர்ப்பப்பையின் உற்ற தோழி என்றே பிசினியைச் சொல்லலாம். பிசினி அரிசியின் கிளைசெமிக் இண்டக்ஸ் விகிதம் குறைவு. ரத்தத்தில் மெதுவாகவே சர்க்கரையைச் சேர்க்கும் என்பதால் சர்க்கரை நோயாளிகளும் சாப்பிட ஏற்றது. உடலில் உள்ள தேவையற்ற கொழுப்பைக் குறைக்கும். எடைக் குறைப்புக்கு முயல்பவர்கள் பிசினி அரிசியில் கஞ்சி வைத்துச் சாப்பிட நல்ல பலன் கிடைக்கும். மேலும், பிசினி அரிசிக் கஞ்சியை உடல் பலவீனமானவர்கள், ரத்தசோகை பிரச்னை உடையவர்களும் சாப்பிடலாம்.பிசினி எல்லா வகையான மண் வளத்துக்கும் ஏற்றது என்பதால் அந்தந்த நிலத்தின் இயல்புக்கு ஏற்ப நேரடி விதைப்பாக நடவு செய்யலாம். பிசினியை ஒற்றை நாற்று முறையிலும் வளர்க்கலாம். ஒரு ஏக்கர் நிலத்தில் பயிரிடுவது என்றால் 40 கிலோ விதை நெல் தேவைப்படும். பயிரை நாசப்படுத்தும் பூச்சித் தாக்குதலைத் தடுக்க விதைக்கும் முன்பே விதைகளை விதை நேர்த்தி செய்ய வேண்டும். ஒரு ஏக்கர் நாற்றுகளை உற்பத்தி செய்ய 5 சென்ட் நிலத்தில் நாற்றங்கால் அமைக்கலாம். 50 கிலோ தொழுவுரத்தைப் போட்டு இரண்டு சால் சேற்று உழவில் நிலத்தைச் சமப்படுத்திக்கொள்ள வேண்டும்.
நூறு லிட்டர் தண்ணீருக்கு ஐந்து லிட்டர் அமுதக்கரைசல் கலந்து அதில் விதை நெல்லை சணல் சாக்கில் போட்டுக் கட்ட வேண்டும். 12 மணி நேரத்துக்குப் பிறகு தண்ணீரை நன்கு வடித்து மீண்டும் 12 மணி நேரம் இருட்டறையில் வைத்திருக்க வேண்டும். நான்கு அங்குல உயரத்துக்கு நாற்றங்கால் அமைத்த பின் நீர்ப் பாய்ச்சி விதைக்க வேண்டும். அடுத்த 12 மணி நேரத்தில் நாற்றங்காலில் உள்ள தண்ணீரை வடித்துவிட வேண்டும். இப்படித் தொடர்ந்து நான்கைந்து நாட்கள் செய்தால் விதைநெல் முளைத்து வரும். பத்தாவது நாளின்போது, பத்து லிட்டர் தண்ணீருக்கு ஒரு லிட்டர் வடிகட்டிய மாட்டுக் கோமியத்தைக் கலந்து தெளித்தால், பூச்சி-நோய் தாக்குதல் இருக்காது. நாற்றும் நன்றாக வளரும். ஒரே மாதத்துக்குள் நடவுக்குத் தயாராகிவிடும். நாற்றங்கால் அமைக்கும் சமயத்திலேயே நடவு வயலையும், தயார் செய்ய வேண்டும். இரண்டு சால் சேற்று உழவு ஓட்டி நிலத்தைச் சமப்படுத்தி, ஒரு ஏக்கருக்கு இருநூறு கிலோ தொழுவுரம் இட்டு சாதாரண முறையில் அரையடி இடைவெளியில் குத்துக்கு, இரண்டு மூன்று நாற்றுக்களாக நடவு செய்யவேண்டும். நடவு முடிந்த 15ம் நாளில் தொழுவுரமிட வேண்டும். 20ம் நாள் களை எடுக்க வேண்டும். அமிர்தக் கரைசல், மூலிகைப் பூச்சி விரட்டி ஆகியவற்றைக் கொடுப்பதன் மூலம் பூச்சிப்பெருக்கத்தைக் கட்டுப் படுத்தலாம். நல்ல போராட்டக் குணம் மிக்க பயிர் இது என்பதால் காய்ச்சலும் பாய்ச்சலுமான நீர்வளமே போதுமானது. கதிர் நன்றாக முற்றத் தொடங்கும்போது நீர் பாய்ச்சுவதை நிறுத்திவிட்டு அறுவடை செய்யலாம்.பிசினி 130 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். ஐந்தடி உயரம் வரை வளரும். இந்த ரகத்தின் நெல்மணிகள் கூராக இருக்கும். தானியத்தைப் பிரித்தெடுக்கும்போது கவனமாக இருக்க வேண்டும். கடும் வறட்சியையும் தாங்கும். அதுபோலவே, பெரும் வெள்ளத்தையும் எதிர்கொண்டு சிறப்பாக வளரும். ஒரு ஏக்கருக்கு சுமார் 28 மூட்டை வரை மகசூல் கொடுக்கும். இதனை விவசாயிகள் பயிரிட்டு பயன்பெறலாம்.