கோவை: கோவை ரயில் நிலையம் அருகே ‘போச்சே புட் எக்ஸ்பிரஸ்’ என்ற ரயில் பெட்டி உணவகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கடந்த 28ம் தேதி பிரியாணி சாப்பிடும் போட்டி நடைபெற்றது. 6 பிளேட் பிரியாணி சாப்பிட்டால் ரூ.1 லட்சம், 4 பிளேட் சாப்பிட்டால் ரூ.50 ஆயிரம், 3 பிளேட் சாப்பிட்டால் ரூ.25 ஆயிரம் என பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது. இதனை அறிந்த ஏராளமான பிரியாணி பிரியர்கள் வந்து போட்டியில் கலந்துகொண்டனர். போட்டியில் கலந்துகொள்ள ஏராளமானவர்கள் குவிந்ததாலும், வாகனங்களை சாலை ஓரத்தில் நிறுத்தியதாலும் அங்கு கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால் அனுமதியின்றி கூட்டம் கூட்டியது, இடையூறு ஏற்படுத்தியது ஆகிய பிரிவுகளில் ரேஸ்கோர்ஸ் போலீசார் ஓட்டல் மேலாளர் கணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.