திருவனந்தபுரம்: கடந்த சில மாதங்களுக்கு முன் திருவனந்தபுரத்தை சேர்ந்த சங்கு என்ற ஒரு மூன்று வயது சிறுவனின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த சிறுவன் அவனுடைய வீட்டுக்கு அருகிலுள்ள ஒரு அங்கன்வாடியில் படித்து வருகிறான். கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த சிறுவன் வீட்டில் இருந்தபோது தனக்கு அங்கன்வாடியில் பிரியாணி தரவில்லை என்றும், தனக்கு உப்புமா வேண்டாம்… பிரியாணி தந்தால் தான் அங்கன்வாடிக்கு செல்வேன் என்றும் கூறினான். அந்த சிறுவன் கூறுவதை அவனது தாய் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தார். அந்த வீடியோ வைரலானது. அதைப் பார்த்த கேரள சுகாதாரம், மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டுத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், சங்குவின் கோரிக்கை தீவிரமாக பரிசீலிக்கப்படும் என்றும், விரைவில் அங்கன்வாடி உணவு முறையில் உரிய மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என்றும் தெரிவித்தார்.
இதன்படி கேரளாவில் அங்கன்வாடி குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவில் புதிய மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பத்தனம்திட்டாவில் நேற்று நடந்த அங்கன்வாடி குழந்தைகள் சேர்க்கை திருவிழாவில் இதை அமைச்சர் வீணா ஜார்ஜ் அறிவித்தார். சங்குவின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளதாகவும் வாரத்தில் ஒரு நாள் முட்டை பிரியாணி மற்றும் புலாவ் வழங்கப்படும் என்றும் அவர் கூறினார். வாரத்தில் 2 நாட்கள் வழங்கப்பட்டு வந்த பால், முட்டை இனி முதல் 3 நாட்கள் வழங்கப்படும். அங்கன்வாடியில் பிரியாணி தரப்போவதாக அறிந்த சங்குவுக்கு இப்போது மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது. அமைச்சர் வீணா ஜார்ஜுக்கு நன்றி சொல்லவும் இந்த சிறுவன் மறக்கவில்லை.