சென்னை: தனக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்த அத்தனை நல்லுள்ளங்களுக்கும் என் அன்பும், நன்றியும் என துணை முதல்வர் உதயநிதிஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது;
“எனது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலையில் இருந்து மட்டுமல்ல, கடந்த சில நாட்களாகவே கழக உடன்பிறப்புகள் மற்றும் பொதுமக்களின் வாழ்த்து மழையில் நனைந்து கொண்டிருக்கிறேன்.
நீங்கள் என் மீது காட்டும் அன்பு, தனிப்பட்ட உதயநிதிக்கானது என்பதை விட, நூற்றாண்டு கடந்த திராவிட இயக்கத்தின் மீதும், பவள விழா கண்டிருக்கும் நம்முடைய உயிருக்கும் மேலான திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீதும், நீங்கள் வைத்திருக்கும் நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதாகவே நான் புரிந்து கொள்கிறேன்.
தமிழினத்தையும் நம் பண்பாட்டு அடையாளங்களையும் அழித்தொழிக்க. எப்போது சந்தர்ப்பம் கிடைக்கும் என்று காத்திருக்கும் பாசிச பருந்துகளிடம் இருந்து, ஒரு தாய்க்கோழியாக நம்மைக் காத்து நிற்கும் நம்முடைய கழகத் தலைவர் – மாண்புமிகு முதலமைச்சர் அவர்களின், படை வரிசையில் முன்னணியில் நிற்கும் ஒரு படை வீரன் என்பதில், எந்நாளும் பெருமை கொள்கிறேன்.
காலையில் நம்முடைய கழகத் தலைவர் – திராவிட மாடல் அரசின் முதலமைச்சர் அவர்களிடமும், எனது அன்புத் தாயாரிடமும் பிறந்தநாள் வாழ்த்துகளைப் பெற்று, புத்துணர்ச்சியோடும் பெரும் ஊக்கத்தோடும் எனது புதிய ஆண்டைத் தொடங்குகிறேன். சென்னை கடற்கரையில், பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் ஆகியோரின் நினைவிடங்களில் மரியாதை செலுத்திய பின்னர், வேப்பேரி, பெரியார் திடலில் அமைந்திருக்கும் ‘பகுத்தறிவுப் பகலவன்’ தந்தை பெரியாரின் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினேன். அங்கே, திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அய்யா அவர்களின் வாழ்த்துகளைப் பெற்றேன்.
பிறகு, இனமான பேராசிரியர் தாத்தா அவர்களின் இல்லத்திற்குச் சென்று, அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். எங்கள் தொட்டில் பிரதேசமாம் கோபாலபுரம் இல்லத்தில், கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செய்த பிறகு, சி.ஐ.டி. காலனியில் உள்ள கலைஞர் அவர்களின் இல்லத்திற்குச் சென்று, கலைஞர் அவர்களின் திருவுருவப்படத்திற்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினேன்.
இதற்கிடையில், சென்னை கிழக்கு மாவட்டம் சார்பில், கழக மூத்த முன்னோடிகள் மாணவர்கள் மகளிர் மாற்றுத்திறனாளிகள் – திருநங்கையர்கள் சுமார் 1,400 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினோம்.
சென்னையில் மட்டுமல்ல. தமிழ்நாடெங்கும் இப்படிப் பல்வேறு பகுதிகளிலும் கழகத்தின் சார்பிலும் இளைஞர் அணியின் சார்பிலும் ஏராளமான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது அறிந்து நெகிழ்ச்சியுற்றேன். என் பிறந்த நாளை, மக்களுக்குப் பயனுள்ள வகையில் கொண்டாடிட வேண்டும் என்ற என் அன்பு வேண்டுகோளை ஏற்று, தமிழ்நாடெங்கும் மாவட்டக் கழகம் இளைஞர் அணி உள்ளிட்டவை சார்பில், மக்கள் நலத்திட்டங்களை வாரி வழங்கி என் பிறந்த நாளைக் கொண்டாடிய நீங்கள் அத்தனை பேரும் போற்றுதலுக்குரியவர்கள்.
இந்த நேரத்தில், அமைச்சர் பெருமக்கள் சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தலைமைக் கழக நிர்வாகிகள் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் – மாவட்டக்கழகச் செயலாளர்கள் ஒன்றிய நகர பேரூர் – பகுதிக் கழக நிர்வாகிகள் இளைஞர் அணி மாநில துணைச் செயலாளர்கள் மாவட்ட அமைப்பாளர் துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட இளைஞர் அணி நிர்வாகிகள் மற்றும் தம்பிமார்கள் பிற சார்பு அணிகளின் நிர்வாகிகள், உறுப்பினர்கள் சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி தொகுதி மக்கள் – தோழமை இயக்கத் தலைவர்கள் சமூக வலைத்தள தன்னார்வலர்கள்- சமூகச் செயற்பாட்டாளர்கள் விளையாட்டு வீரர், வீராங்கனைகள்- அரசு அதிகாரிகள் – காவல்துறை உயர் அதிகாரிகள் திரையுலக முன்னணியினர் அனைவருக்கும்.
அதே போல, விடியற்காலை முதல் ‘குறிஞ்சி’ முகாம் அலுவலகத்தின் வாயிலில், சாரை சாரையாகக் குவிந்து வாழ்த்து மழை பொழிந்த முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகள் – குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் சிறப்பான முறையில் பிறந்த நாள் விழாவை, ஒருங்கிணைத்த சென்னை தென் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர் அண்ணன் மயிலை த.வேலு அவர்கள் உள்ளிட்ட நிர்வாகிகள் – அத்தனை பேருக்கும் என்னுடைய கோடானு கோடி நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய பிறந்த நாளுக்கு நீங்கள் அளிக்கும் பரிசுகளிலேயே மிகப் பெரியது என்று நான் கருதுவது, எதிர்வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 200-க்கும் அதிகமான இடங்களில் வெல்ல வேண்டும் என்ற நம் தலைவர் அவர்களின் இலட்சியத்தை நிறைவேற்றி, அந்த மாபெரும் வெற்றியை நாம் அனைவரும் நம் கழகத் தலைவர் அவர்களின் கரங்களில் கொண்டு சேர்ப்பதுதான். இரண்டாம் முறையாக நம் தலைவர் அவர்களை முதலமைச்சராக அரியணையேற்றிடவும். ஏழாவது முறையாக கழகம் ஆட்சியை அமைத்திடவும், அடுத்து வரும் ஒவ்வொரு நாளும் உழைத்திட உறுதியேற்போம்” என தெரிவித்துள்ளார்.