புதுடெல்லி : தமிழ்நாட்டின் சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த கிராம அதிகாரி ஒருவர் இறப்பு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.1200 லஞ்சம் கேட்டது தொடர்பாக புகாரில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி கீழமை நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. இதை எதிர்த்து தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை விசாரித்து சென்னை உயர்நீதிமன்றம் குற்றம் நடந்து 18 ஆண்டுகளுக்கு மேலாகிவிட்டது. மேலும் குற்றவாளி தற்போது 78 வயது நபராக இருக்கிறார் எனவே மனிதாபிமான அடிப்படையில் அவரது சிறை தண்டனையை ஓராண்டாக குறைத்து தீர்ப்பு வழங்கியது.
இந்த நிலையில் உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக புகார்தாரர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்ற நீதிபதி ரவீந்தர் பட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, சிறை தண்டனை குறைக்கப்பட்டது விவகாரம் தொடர்பாக எதிர் மனுதாரருக்கு நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் வழங்குவதில் காலதாமதம் குறைபாடுகள் ஆகியவை இருக்கின்றது. அவற்றை சரி செய்யும் வகையில் டிஜிட்டல் முறையில் இத்தகைய சான்றிதழ்களை வழங்கலாமா. அதற்கென்று தனி வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்க முடியுமா என்பது குறித்து ஒன்றிய அரசு நான்கு வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து வழக்கை ஒத்திவைத்தனர்.