டெல்லி: பீமா கோரேகான் வழக்கில் வெர்னான் கொன்சால்வேஸ், அருண் ஃபெரேரா ஆகியோருக்கு ஜாமின் உச்சநீதிமன்றம் வழங்கியது. 2018 ஜனவரி 1 ஆம் தேதி, கிழக்கிந்திய கம்பெனி மற்றும் மராட்டியர்களுக்கு இடையிலான போரின் 200-வது ஆண்டு நினைவு நிகழ்ச்சி நடந்தபோது, பீமா கோரேகானில் வன்முறை வெடித்தது. வெற்றித் தூண் அருகே ஆயிரக்கணக்கான பட்டியலினத்தவர் கூடியிருந்தனர். அப்போது ஏற்பட்ட கலவரம் மற்றும் கல்வீச்சில் பல வாகனங்கள் உடைக்கப்பட்டன. வன்முறையில் ஒருவர் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவத்திற்கு ஒருநாள் முன்னதாக, 2017 டிசம்பர் 31 ஆம் தேதி, வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சனிவர் வாடாவில் எல்கார் பரிஷத் நடத்தப்பட்டது. பிரகாஷ் அம்பேத்கர், ஜிக்னேஷ் மேவானி, உமர் காலித், சோனி சோரி, பி.ஜி. கோல்சே பாட்டீல் உள்ளிட்ட முக்கிய தலைவர்கள் அந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில், பீமா கோரேகான் வன்முறைக்கு இந்தக் கூட்டத்திற்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி ஆனந்த் டெல்டும்ப்டே, கௌதம் நவ்லகா, கவிஞர் வரவர ராவ், ஸ்டான் சுவாமி, சுதா பரத்வாஜ், வெர்னோன் கன்சால்வஸ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இந்த வழக்கு ஆரம்பத்தில் போலீஸாரால் விசாரிக்கப்பட்டாலும் பின்னர் தேசிய புலனாய்வு முகமைக்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் 2020ல் ஆனந்த் டெல்டும்டே கைது செய்யப்பட்டார். இந்நிலையில், இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் கடந்த நவம்பர் 17 ஆம் தேதி மும்பை உயர் நீதிமன்றம் ஆன்ந்த் டெல்டும்டேவுக்கு ஜாமீன் வழங்கியது. அவருக்கு தடை செய்யப்பட்ட மாவோயிஸ்டு அமைப்புகளுக்கு தொடர்பு இருப்பதாக முதன்முறையாக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மேலும், அவர் இரண்டு ஆண்டுகள் ஏற்கெனவே சிறையில் இருந்துவிட்டார்.
இந்த வழக்கில் குற்றம் நிரூபணம் ஆனால் 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை கிடைத்திருக்கும் என்று கூறி ஜாமீன் வழங்கியது. இந்நிலையில் இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வெர்னான் கொன்சால்வேஸ், அருண் ஃபெரேரா ஆகியோருக்கு உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியது. மேலும் 2018-ம் ஆண்டு முதல் 5 ஆண்டுகளாக இருவரும் சிறையில் இருந்த நிலையில் உச்சநீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.