புதுடெல்லி: பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு ரூ.16லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளதாவும் இதற்காக நாடு அவரை மன்னிக்காது என்றும் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி குற்றம்சாட்டியுள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தனது எக்ஸ் பதிவில் ‘‘பிரதமர் மோடி தனது கோடீஸ்வர நண்பர்களுக்கு ரூ.16லட்சம் கோடி கடனை தள்ளுபடி செய்துள்ளார். இவ்வளவு பணத்தில் 16கோடி இளைஞர்களுக்கு ஆண்டுக்கு ஒரு லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்திருக்கும், 16கோடி பெண்களுக்கு ஆண்டுக்கு ரூ.1லட்சம் கொடுத்து அவர்களின் குடும்ப வாழ்க்கையை மாற்றி இருக்கலாம். 10கோடி விவசாய குடும்பங்களின் கடனை தள்ளுபடி செய்வதன் மூலம் எண்ணற்ற தற்கொலைகளை தடுத்திருக்கலாம். 20 ஆண்டுகளுக்கு ரூ.400க்கு சமையல் எரிவாயு சிலிண்டர்களை வழங்கி இருக்கலாம்.
இந்திய ராணுவத்தின் மொத்த செலவையும் 3 ஆண்டுகளுக்கு ஏற்று இருக்கலாம். தலீத், பழங்குடியினர் மற்றும் பின்தங்கிய சமூகத்தை சேர்ந்த ஒவ்வொரு இளைஞருக்கும் பட்டப்படிப்பு வரையிலான கல்வியை இலவசமாக வழங்கியிருக்கலாம். இந்தியர்களின் வலியை குணப்படுத்தவதற்காக பயன்பட்டிருக்க வேண்டிய பணமானது அதானி போன்றவர்களுக்காக செலவழிக்கப்பட்டுள்ளது. பிரதமர் மோடியின் இந்த குற்றத்தை நாடு ஒருபோதும் மன்னிக்காது. இந் நிலை மாறும். ஒவ்வொரு இந்தியனின் முன்னேற்றத்துக்காக காங்கிரஸ் தனது அரசை நடத்தும். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.