திருச்சி: திருச்சி அருகே வீட்டு மனைக்கு வரி நிர்ணயம் செய்ய ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டரை லஞ்சஒழிப்பு துறையினர் நேற்று அதிரடியாக கைது செய்தனர். திருச்சி கே.கே.நகரை சேர்ந்தவர் கதிர்வேல் (60). சொந்தமாக தொழில் செய்து வரும் இவர், துவாக்குடி நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வீடு கட்டுவதற்காக வீட்டுமனை வாங்கியுள்ளார். இந்த வீட்டு மனைக்கு வரி நிர்ணயம் செய்ய வேண்டி கதிர்வேல் 15 தினங்களுக்கு முன்பு துவாக்குடி நகராட்சி அலுவலகத்திற்கு சென்று, அங்கிருந்த பில் கலெக்டர் சவுந்தரபாண்டியனிடம் (31) தனது விண்ணப்பத்தை கொடுத்தார்.
இதற்கு, பில் கலெக்டர் ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுத்தால் மட்டுமே காலி மனைக்கு வரி நிர்ணயம் செய்து தர முடியும் என்று கூறியுள்ளார். இதுதொடர்பாக கதிர்வேல், திருச்சி மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி மணிகண்டனிடம் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ஆலோசனையின் பேரில் ரூ.50ஆயிரம் லஞ்ச பணத்துடன் கதிர்வேல் நேற்று காலை துவாக்குடி நகராட்சி அலுவலகம் வந்தார். அப்போது அங்கிருந்த சவுந்தரபாண்டியனிடம் பணம் கொடுக்கும் போது அங்கு மறைந்திருந்த டிஎஸ்பி மணிகண்டன், ஆய்வாளர்கள் சக்திவேல், பிரசன்னா வெங்கடேஷ், சேவியர் ராணி மற்றும் லஞ்ச ஒழிப்பு போலீசார், சவுந்தரபாண்டியனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.