சென்னை: ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தர்மேந்திர பிரதான் தமிழ்நாடு கல்வி குறித்து சில கருத்துகளை தெரிவித்துள்ள நிலையில் அதற்கு பதிலளிக்கும் விதமாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி நேற்று அளித்த பேட்டி: தமிழ்நாட்டில் 58,779 பள்ளிகளில் 1.09 கோடி மாணவர்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் பயில்கின்றனர்.தமிழ்நாட்டு மாணவர்கள், எந்த பாடத்திட்டத்தில் படிக்க விரும்புகின்றனர் என்பதை ஒன்றிய அமைச்சர் புரிந்துகொள்ள வேண்டும். இருமொழிக் கொள்கையை கொண்ட மாநில பாடத்திட்டத்தையே தமிழ்நாட்டு மக்கள் விரும்புகின்றனர்.
மக்களின் விருப்பங்களை புரிந்துகொண்டு செயல்படுங்கள்.வலுவான இருமொழிக்கொள்கை அடித்தளத்துடன் சிறந்து விளங்கும் போது, தமிழ்நாட்டிற்கு 3வது மொழி தேவையில்லை. தேசிய கல்விக்கொள்கையைவிட சிறந்த கல்விக்கொள்கையை கொண்டுள்ளது தமிழ்நாடு. உடையாததை ஒட்ட வைக்க முயற்சிக்காதீர்கள். இருமொழிக் கொள்கையையே தமிழ்நாடு விரும்புகிறது. கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் தமிழ்நாட்டின் பாடத்திட்டம் மிகச்சிறந்த பலனை அளித்து வருகிறது. தமிழ்நாடு, தனது மாணவர்களுக்கு எது சிறந்தது என்பதில் ஒருபோதும் சமரசம் செய்ய விரும்பாது. தமிழ்நாடு மாணவர்களுக்கு எது தேவை, தேவையில்லை என்பதை நாங்களும் மக்களும் புரிந்து வைத்துள்ளனர்.
இருமொழிக் கொள்கையில் படித்தவர்கள் பலர் அறிஞர்களாவும், உயர்ந்த பதவிகளிலும், ஆராய்ச்சி மற்றும் தொழில் நுட்ப பணிகளில் சிறந்து விளங்குகின்றனர் என்பதை ஒன்றிய அரசு தெரிந்து கொள்ள வேண்டும். தமிழ்நாட்டில் மாநிலப்பாடத்திட்டத்தின் கீழ் 59779 பள்ளிகள் இயங்குகின்றன. அவற்றில் 1 கோடியே 9 லட்சம் மாணவ மாணவியர் மாநில பாடத்திட்டத்தின் கீழ் உள்ள கல்வியை தேர்வு செய்துள்ளனர். 1635 சிபிஎஸ்இ பள்ளிகளில் 15 லட்சத்து 2 ஆயிரம் மாணவ மாணவியர் மட்டுமே மும்மொழியை படிக்கின்றனர். அப்படி இருக்க இங்கு புதிய கல்விக் கொள்கையை விட கல்வி நிலை நன்றாக இருக்கும் போது, அதை ஏன் ஒன்றிய அரசு சீர்குலைக்க நினைக்கிறது. இருமொழி அடித்தளத்துடன் தமிழ்நாடு சிறந்து விளங்குகிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.