லக்னோ: உத்தரப் பிரதேச மாநிலம் சாந்த் கபீர் நகரில் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர் வருணேஷ் துபே மீது அவரது மனைவி சிம்பி பாண்டே திடுக்கிடும் குற்றச்சாட்டுகளை காவல் நிலையத்தில் அளித்துள்ளார். அவர் அளித்த புகாரில், ‘எனது கணவர் பெண் அணியும் ஆடைகள் மற்றும் பிகினி உடைகளை அணிந்து கொண்டும், திருநங்கையாக வேடமிட்டு ஆபாச வீடியோக்களை பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இந்த வீடியோக்கள் அவர் தங்கியிருக்கும் அரசு குடியிருப்பில் பதிவு செய்யப்பட்டவை.
அந்த வீடியோவில் இருந்த மோதிரம், திரைச்சீலைகள் மற்றும் அலங்காரப் பொருட்கள், நான் தங்கியிருக்கும் வீட்டில் இருந்து எடுத்து சென்றுள்ளார். இந்த விசயம், சமூக வலைதளங்களில் அவரது திருநங்கை வீடியோ வைரலான பிறகு தான் எனக்கு தெரிந்தது. இதுகுறித்து எனது கணவரிடம் கேட்ட போது, அவர் என்னை தாக்கினார். எனவே அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்று கூறியுள்ளார். அதேநேரம் டாக்டர் வருணேஷ் துபே, தன் மீது தனது மனைவி கூறிய குற்றச்சாட்டுகளை மறுத்தார். மேலும் அவர் கூறுகையில், ‘எனது மனைவி காட்டும் வீடியோக்கள் டீப்ஃபேக் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டவை. என்னை அவமானப்படுத்த வேண்டும் என்ற நோக்கில், எனது மனைவியின் குடும்பத்தினர் செய்துள்ள சதி வேலையாகும். காவல்துறை இந்த விவகாரத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து, டாக்டரின் அரசு இல்லத்தை சீல் வைத்து விசாரணை நடத்தி வருகிறது.
மாவட்ட ஆட்சியர், விசாரணைக் குழுவை அமைத்து, மேற்கண்ட புகார்களை விசாரிக்க உத்தரவிட்டுள்ளார். இந்தச் சம்பவம் உள்ளூர் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் பாலியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான பிரச்னைகளில் டிஜிட்டல் மோசடிகள் மற்றும் தவறான குற்றச்சாட்டுகள் குறித்த விவாதங்களை மீண்டும் எழுப்பியுள்ளது.