வேளச்சேரி: மேடவாக்கத்தில் வீட்டு வாசலில் நிறுத்தி வைத்திருந்த 2 பைக்குகள் எரிந்து நாசமான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேடவாக்கம், அன்னப்பூரணி தெருவைச் சேர்ந்தவர் பாலசுப்பிரமணியன் (77). மனைவி, மகள் ஆகியோருடன் வசித்து வரும் இவர், வீட்டின் கார் பார்க்கிங்கில் தனது 2 பைக்குகளை நிறுத்தி வைத்திருந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் நள்ளிரவு பாலசுப்பிரமணியத்தின் 2 பைக்குகள் திடீரென்று எரிந்து கொண்டிருந்தன. சத்தம் கேட்டு வெளியே வந்து பார்த்தபோது பைக்குகள் முழுவதுமாக எரிந்து கிடந்தன. இதனைகண்டு, அதிர்ச்சியடைந்த அவர், இதுகுறித்து பள்ளிக்கரணை போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.