புழல்: புழலில், வாலிபரை அரிவாளால் மரம் நபர்கள் வெட்டினர். புழல் அடுத்த டீச்சர்ஸ் காலனி பகுதியை சேர்ந்தவர் ஜோஸ்வா(20). இவர் சென்னை எம்ஜிஆர் பல்கலைக்கழகத்தில் பி.காம் 3ம் ஆண்டு படித்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு 9 மணி அளவில் புழல் சைக்கிள் ஷாப் மேம்பாலம் அருகே தனது நண்பர்களுக்காக மோட்டார் சைக்கிளுடன் நின்று கொண்டு இருந்தார். அப்போது ஒரே மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் ஜோஸ்வாவை சந்தித்து முகவரி கேட்பது போல் கேட்டு அவர் வைத்திருந்த வண்டி சாவி கேட்டுள்ளனர்.
அவர் சாவியை கொடுக்க மறுத்தார். இந்நிலையில், மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவர் மறைத்து வைத்திருந்த அரிவாளால் ஜோஸ்வா தலையில் வெட்டிவிட்டு மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர். பின்னர், அங்கு வந்த நண்பர்கள் ஜோஸ்வாவை மீட்டு, அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சேர்த்தனர். புகாரின்பேரில் புழல் போலீசார் வழக்கு பதிவு செய்து, மோட்டார் சைக்கிள் வந்த மூன்று பேரை தேடி வருகின்றனர்.