சென்னை: சுதந்திர தினத்தையொட்டி தமிழகம் முழுவதும் பாஜ சார்பில் இரு சக்கர வாகன பேரணிக்கு அனுமதி வழங்க கோரிய வழக்கில் காவல்துறை பதில் அளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சுதந்திர தினத்தை முன்னிட்டு பாஜ சார்பில் தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் தேசிய கொடியுடன் இரு சக்கர வாகன பேரணி நடத்த அனுமதி கோரி கடந்த 10ம் தேதி அளித்த மனுவை காவல்துறை நிராகரித்தது.
இதையடுத்து, தேசிய கொடியுடன் இரு சக்கர வாகன பேரணிக்கு அனுமதி அளிக்க கோரி பாஜ கோவை மாவட்ட செயலாளர் கிருஷ்ண பிரசாத் சார்பில் ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கு நீதிபதி ஜெயச்சந்திரன் முன்பு விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.சி.பால்கனகராஜ், குறுகலான சாலை மற்றும் மேம்பால கட்டுமான பணி ஆகியவற்றை காரணமாக கூறி அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
வழக்கை விசாரித்த நீதிபதி, யார் வேண்டுமானலும் தேசிய கொடியை ஏந்தி செல்லலாம். எந்தெந்த இடங்களில் பேரணி செல்கிறார்கள் என்ற விவரங்களை காவல்துறை அறிந்து, வாகன நெரிசல் மற்றும் சட்ட ஒழுங்கு பிரச்னை ஏற்படாமல் பார்த்துக் கொள்ளலாம். ஆனால் முழுவதுமாக பேரணிக்கு அனுமதி மறுக்க முடியாது. இந்த மனுவுக்கு நாளை (இன்று) காவல்துறை தரப்பில் பதில் தரவேண்டும் என்று உத்தரவிட்டார்.