அண்ணாநகர்: சென்னையில் நள்ளிரவில் நடைபெறும் பைக் ரேஸ் தடுக்க போக்குவரத்து போலீசார் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதன்காரணமாக பைக் ரேஸ் குறைந்துள்ள நிலையில், சில இடங்களில் மீண்டும் பைக் ரேஸ் தலைதூக்கி வருகிறது. கோயம்பேடு பகுதியில் சமீபகாலமாக பைக் ரேசில் இளைஞர்கள் அதிகமாக ஈடுபட்டு வருகின்றனர். அவர்களை போக்குவரத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர். கோயம்பேடு மேம்பாலம் உள்பட பல பகுதிகளில் நள்ளிரவில் பைக் ரேஸ் நடப்பதாக மக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதன்காரணமாக கோயம்பேடு, திருமங்கலம் மற்றும் வில்லிவாக்கம் மேம்பாலங்கள் இரவு நேரத்தில் இரும்பு தடுப்பு வைத்து மூடப்பட்டு வருகிறது. அத்துடன் வாகன சோதனையையும் தீவிரப்படுத்தி வந்ததால் இரவு நேரங்களில் பைக் ரேசை கட்டுப்படுத்த முடிந்தது.
இந்தநிலையில், போலீசாரின் கட்டுப்பாட்டை மீறி நேற்றுமுன்தினம் நள்ளிரவு கோயம்பேடு மேம்பாலத்தில் உள்ள இரும்பு தடுப்பை மீறி ஏராளமான இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டனர். அவர்கள் ஏராளமான பைக்குகளில் சாலையில் படுவேகத்துடன் வரிசையாக கூச்சலிட்டப்படி சென்றனர். அவற்றை வீடியோ எடுத்துஇன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் வெளியிட்டு வருகின்றனர். அதில், ‘’அடுத்த வாரம் பைக் ரேஸ் பந்தயம் 20 ஆயிரம்’ என்று பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இந்த காட்சிகள் அனைத்தும் சமூகவலைதள பக்கத்தில் வைரலானதால் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று நள்ளிரவில், கோயம்பேடு, அண்ணாநகர் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் போலீசார் வாகன சோதனையை தீவிரப்படுத்தினர்.
அந்த சமயத்தில் அண்ணாநகர் வழியாக ரேஸ் பைக்கில் வந்த 2 பேர், போலீசாரை கண்டதும் தப்பிக்க முயன்றபோது போலீசார் விரட்டிச்சென்று இருவரை பிடித்து விசாரித்தபோது, அம்பத்தூர் பகுதியை சேர்ந்த 18 வயது சிறுவர்கள் என்பது தெரிந்தது. இவர்களிடம் இருந்து ரேஸ் பைக்கை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து சமூகநல ஆர்வலர்கள் கூறியதாவது; கோயம்பேடு மேம்பாலத்தின் மீது இளைஞர்கள் பைக் ரேஸ் நடத்துவது தொடர்ந்து அதிகரித்து வந்ததால் இரவு நேரங்களில் சாலையில் செல்வதற்கு பொதுமக்கள் அச்சப்பட்டனர். குறிப்பாக, பெண்கள் மிகவும் பயந்துபோய் இருந்தனர்.
பொதுமக்களின் நலன்கருதி போக்குவரத்து போலீசார், இரவு நேரங்களில் மேம்பாலங்களை இரும்பு தடுப்பு அமைத்து அடைத்தனர். இதனால் பைக் ரேஸ் குறைந்து பொதுமக்கள் நிம்மதி அடைந்தனர். தற்போது மீண்டும் கோயம்பேடு மேம்பாலத்தில் ஏராளமான இளைஞர்கள் பைக் ரேசில் ஈடுபட்டுள்ளனர். எனவே, இதற்கு போலீசார் முற்றுப்புள்ளி வைக்கவேண்டும். இவ்வாறு கூறினர்.