திருமலை: பைக்கில் எடுத்துச்சென்ற ரூ.5 கோடி மதிப்புள்ள தங்க கட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து வருமான வரித்துறையினரிடம் ஒப்படைத்தனர். ஆந்திர மாநிலம் கடப்பா நகர போலீசாருக்கு கள்ளச்சந்தையில் விற்பதற்காக தங்கம் கடத்தப்படுகிறது என்று தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் நேற்று இரண்டாவது காந்தி சிலை அருகே வாகனங்களை சோதனை செய்து கொண்டிருந்தனர். அப்போது ஒரு பையுடன் பைக்கில் சந்தேகப்படும் வகையில் வந்த ஒருவரை தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில் அவர் கடப்பாவில் உள்ள பி.கே.எம். தெருவை சேர்ந்த தேஷ்முக் பாரதிராஜாராவ் (41) என்பது தெரிய வந்தது. அவர் வைத்திருந்த பையை சோதனை செய்தபோது அதில் தங்க கட்டிகள் இருந்தது. ஆனால் அதற்குரிய ஆவணங்கள் இல்லை. அதற்கு தேஷ்முக் பாரதிராஜாராவ், தான் தங்க வியாபாரி என்றும், இதை கடைக்கு எடுத்துச்செல்வதாகவும் பில் போட்டால் அதற்கு ஜிஎஸ்டி வரி கட்ட வேண்டும் என்பதற்காக பில் போடாமல் எடுத்துச்செல்வதாக கூறியுள்ளார்.
இதையடுத்து அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அவை ரூ.5 கோடி மதிப்புள்ள 1 கிலோ 560 கிராம் எடையுள்ள தங்க கட்டிகள் என்பது தெரியவந்தது. இதையடுத்து பறிமுதல் செய்த தங்க கட்டிகளையும் தேஷ்முக் பாரதிராஜாராவையும் போலீசார் திருப்பதி வருமான வரித்துறையினர் ஒப்படைத்தனர். அவர்கள், இந்த தங்க கட்டிகள் எப்படி கிடைத்தது. இதை கொடுத்தவர்கள் யார், எங்கு கொண்டு செல்லப்படுகிறது, வியாபாரி என்றால் ஆவணங்கள் இல்லாமல் எடுத்துச்சென்றதற்கான உண்மையாக காரணம் என்ன? விசாரித்து வருகின்றனர்.