பாட்னா: பீகார் அரசு மருந்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த சடலத்தின் இடது கண் மாயமானது. கண்ணை எலி கடித்திருக்கும் என்று மருத்துவர் கூறினார். பீகார் மாநிலம் பாட்னாவை சேர்ந்த பன்துஷ் குமார் மர்ம ஆசாமிகளால் துப்பாக்கியால் கடந்த 15ம் தேதி சுடப்பட்டார். வயிற்றில் தோட்டா பாய்ந்த நிலையில் நாளந்தா மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஆனால், சிகிச்சை பலனின்றி அன்றிரவே பன்துஷ் குமார் உயிரிழந்தார். பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடலை பெற்றுக்கொண்ட உறவினர்கள், பன்துஷ் குமாரின் இடது கண் மாயமாகி இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். மருத்துவமனை நிர்வாகத்தினர் பன்துஷ் குமாரின் கண்ணை அகற்றியதாக குடும்பத்தினர் குற்றம்சாட்டினர்.
இதுகுறித்து மருத்துவமனையின் கண்காணிப்பாளர் டாக்டர் பினோத் குமார் சிங் கூறுகையில், ‘இறந்த நபரின் கண் அகற்றப்பட்டதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டிருந்த போது சடலத்தின் கண்ணை எலிகள் கடித்திருக்கலாம். இருந்தாலும் இதுகுறித்து விசாரித்து வருகிறோம். பிரேத பரிசோதனை அறிக்கை வந்ததும் உண்மையான காரணம் தெரியும்’ என்று அலட்சியமாக கூறினார். மருத்துவமனை அளித்த புகாரின் அடிப்படையில் போலீசாரும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.