புதுடெல்லி: பீகாரில் வரும் அக்டோபர் மாதம் சட்டப்பேரவை தேர்தல் நடக்க உள்ளது. அதையொட்டி, அம்மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகளை தேர்தல் ஆணையம் மேற்கொண்டுள்ளது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படாமல் இருப்பதை உறுதிசெய்ய, தீவிர திருத்தத்தில் கூடுதல் நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த செய்முறை, அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெற உள்ள அசாம், கேரளா, புதுச்சேரி, தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காளத்தில் மேற்கொள்ளப்பட இருப்பதையும் இந்தியா கூட்டணி கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்நிலையில், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக தலைமை தேர்தல் ஆணையருடன் இந்தியா கூட்டணி கட்சி தலைவர்களின் அவசர சந்திப்பு டெல்லியில் நேற்று நடந்தது. இதில், காங்கிரஸ், ஆர்ஜேடி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், சிபிஐ (எம்எல்), தேசியவாத காங்கிரஸ், சமாஜ்வாடி உள்ளிட்ட 11 கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை சந்தித்து பேசினர். அப்போது பீகாரில் நடக்கும் சிறப்பு தீவிர திருத்தத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய சிபிஐ எம்எல் விடுதலை கட்சி தலைவர் தீபங்கர் பட்டாசார்யா, ‘‘பீகாரில் 20 சதவீத மக்கள் வேலைக்காக வெளிமாநிலத்திற்கு குடிபெயர்கின்றனர். ஆனால், தேர்தல் ஆணையம் வாக்காளர்கள் சாதாரண குடியிருப்பாளர்களாக இருக்க வேண்டுமென கூறுகிறது. எனவே புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் பீகாரில் தேர்தலில் வாக்களிக்க முடியாத நிலை ஏற்படும். தேர்தல் ஆணையத்தின் கணக்குபடி அவர்கள் வாக்காளர்களாக இருக்க முடியாது’’ என்றார்.
காங்கிரஸ் மூத்த தலைவர் அபிஷேக் சிங்வி கூறுகையில், ‘‘பீகாரில் 8 கோடி வாக்காளர்கள் இருக்கும் நிலையில் சிறப்பு தீவிர திருத்தத்தை தொடங்கியது ஏன்? இதுவரை எல்லாவற்றுக்கும் ஆதார் அட்டை கேட்கப்பட்ட நிலையில் இம்முறை பிறப்பு சான்றிதழ் கட்டாயம் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. பீகாரில் இருப்பது ஏழை, அடித்தட்டு மக்கள். அவர்கள் செல்லுமிடம் எல்லாம் இந்த ஆவணங்களை கொண்டு சென்று இருப்பார்களா?’’ என்றார்.
பூத் ஏஜென்டுகளை அதிகரிக்கும் கட்சிகள்;
வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்கள் பெயரை சேர்த்தல், நீக்குதல் முடிவுகளை தேர்தல் அதிகாரிகள் தன்னிசையாக எடுப்பதை தடுக்கக் கூடியவர்கள் அரசியல் கட்சிகளின் பூத் ஏஜென்ட்கள். இதனால், பீகாரில் வாக்காளர் திருத்த பட்டியலை தேர்தல் ஆணையம் தயாரித்து வரும் நிலையில் பல்வேறு அரசியல் கட்சிகளும் பூத் ஏஜென்ட்களின் எண்ணிக்கையை பெருமளவில் அதிகரித்து வருகின்றன. பாஜவில் 51,964 பூத் ஏஜென்ட்கள் இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை 52,698 ஆக அதிகரித்துள்ளது. மார்க்சிஸ்ட் கட்சியில் வெறும் 76 பூத் ஏஜென்ட்கள் இருந்த நிலையில், 578 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. காங்கிரசில் 8,586ல் இருந்து 16,500 ஆக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.