பாட்னா: இருபுறமும் வரிசையாக மரங்கள் இருக்கும் சூழலில் சாலைப்பயணம் இனிமையாக இருக்கும். ஆனால் சாலையின் நடுவே மரங்கள் இருந்தால்.. இது என்ன கேள்வி. சாலைகளின் நடுவே எப்படி மரங்கள் இருக்கும் என்று கேட்கலாம். ஆனால் பீகாரில் சாலை அப்படித்தான் போடப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவிலிருந்து 50 கி.மீ தொலைவில் உள்ள ஜெகனாபாத்தில் இது உண்மையாகிவிட்டது. அங்கு ரூ.100 கோடி சாலை விரிவாக்கத் திட்டம் மிகவும் தவறான முறையில் நடந்துள்ளது.
பாட்னா-கயா பிரதான சாலையில் ஜெகனாபாத் பகுதியில் சுமார் 7.48 கி.மீ நீளமுள்ள சாலை அமைக்கும் பணியில் மரங்களை வெட்டாமல், அப்படியே சாலையை அமைத்துள்ளனர். இந்த மரங்களை அகற்ற அனுமதி கோரி பீகார் அரசு சார்பில் வனத்துறையை அணுகினர். ஆனால் அவர்களின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. மரங்களை வெட்டுவதற்கு வனத்துறை 14 ஹெக்டேர் வன நிலத்தை இழப்பீடு கோரியது. இருப்பினும், மாவட்ட நிர்வாகத்தால் அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற முடியாததால் மரங்களின் நடுவிலே சாலையை அமைத்து விட்டனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.