புதுடெல்லி: பீகார் மாநிலத்தில் அரசு வேலைகள் மற்றும் உயர்கல்வி நிறுவனங்களில் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், பட்டியல் சமூகத்தை சேர்ந்தவர்கள் மற்றும் பழங்குடியினருக்கான இட ஒதுக்கீட்டு வரம்பை 50 சதவீதத்திலிருந்து 65 சதவீதமாக உயர்த்தி கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அரசாணை வெளியிடப்பட்டது. இந்த அரசாணையில் இதர பிரிவினருக்கான இட ஒதுக்கீடு வரம்பு உயர்த்தப்பட்டதுடன் சேர்த்து பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கான 10 சதவிகித இட ஒதுக்கீட்டையும் சேர்த்து அந்த மாநிலத்தில் மொத்த இட ஒதுக்கீடு வரம்பு 75 சதவீதமாக மாற்றப்பட்டது. பீகார் மாநிலத்தில் மேற்கொள்ளப்பட்ட சாதி வாரி கணக்கெடுப்பின் அடிப்படையில் இந்த இட ஒதுக்கீடு வரம்பு உயர்த்தப்பட்டது.
இந்நிலையில் பீகார் அரசின் அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், இட ஒதுக்கீட்டு வரம்பை உயர்த்திய பீகார் அரசின் அரசாணையை ரத்து செய்து தீர்ப்பு வழங்கியது. இதனையடுத்து மேற்கண்ட உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எதிராக கடந்த ஜூன் மாதம் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தபோது, இந்த விவகாரத்தில் பாட்னா உயர்நீதிமன்றம் வழங்கிய உத்தரவுக்கு எந்தவித இடைக்கால தடையும் விதிக்க முடியாது. அதே போன்று வழக்கு தொடர்பாக நோட்டீஸ் பிறப்பிக்கவும் முடியாது என உத்தரவிட்ட நீதிபதிகள், வழக்கை பட்டியிலிடப்படும் தேதியை கூட தற்போது தெரிவிக்க முடியாது என திட்டவட்டமாக தெரிவித்து உத்தரவிட்டனர்.