பாட்னா: பீகார் மாநிலத்தில் இந்த ஆண்டு இறுதியில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையிலான அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முந்தைய கடைசி விரிவாக்கமாக இந்த நடவடிக்கை அமைந்துள்ளது. புதிதாக 7 அமைச்சர்கள் நியமிக்கப்பட்டதை அடுத்து மொத்த அமைச்சர்களின் எண்ணிக்கை 36ஆக அதிகரித்துள்ளது. இது 243 சட்டமன்ற உறுப்பினர்களை கொண்ட மாநிலத்தில் அனுமதிக்கப்படும் அமைச்சர்களின் அதிகபட்ச எண்ணிக்கையாகும். ஆளுநர் ஆரிப் முகமது கான் புதிய அமைச்சர்களுக்கு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ள 7 பேரும் ஐக்கிய ஜனதா தளத்தின் கூட்டணியான பாஜவை சேர்ந்த எம்எல்ஏக்கள். பாஜ மாநில தலைவர் திலீப் ஜெய்ஸ்வால் கட்சியின் ஒருவருக்கு ஒரு பதவி கொள்கையை காரணம் காட்டி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த நிலையில் இந்த அமைச்சரவை விரிவாக்கம் நடந்துள்ளது.