தர்பங்கா: பீகாரில் மிரட்டி பணம் பறித்த வழக்கில் பாஜ எம்எல்ஏ மிஸ்ரி லால் யாதவ் மற்றும் அவரது உதவியாளருக்கு 2 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பீகாரின் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள அலிநகர் சட்டமன்ற தொகுதியின் பாஜ எம்எல்ஏ மிஸ்ரி லால் யாதவ். கடந்த 2019ம் ஆண்டு உள்ளூரை சேர்ந்த ஒருவர் மிஸ்ரி லால் மற்றும் அவரது உதவியாளர் மீது போலீசில் புகார் கொடுத்தார். தன்னை மிரட்டி பணம் பறித்ததாக அதில் குற்றம்சாட்டப்பட்டு இருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு எம்பி,எம்எல்ஏ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் குற்றச்சாட்டு உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து எம்எல்ஏ மிஸ்ரி லால் மற்றும் அவரது உதவியாளருக்கு தலா இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ரூ.1லட்சம் அபராதம் விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த தீர்ப்புக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய எம்எல்ஏ, நீதிமன்றத்தின் தீர்ப்பை நான் மதிக்கிறேன். ஆனால் தீர்ப்புக்கு எதிராக பாட்னா உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்படும்\\” என்றார். எம்எல்ஏவுக்கு எதிரான நீதிமன்ற உத்தரவின் நகல் கிடைத்தவுடன் அவரை தகுதி நீக்கம் செய்வதற்கான செயல்முறை தொடங்கப்படும் என்று தெரிகின்றது.