மதுரை: பீகார் யூடியூபர் மீதான தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஐகோர்ட் கிளை ரத்து செய்தது. டில்லியைச் சேர்ந்த திரிபுவன் குமார் திவாரி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘என் சகோதரர் மனீஷ் காஷ்யப் (எ) திரிபுராரி குமார் திவாரி (32) பீகாரில் சச் தக் என்ற யூடியூப் சேனல் நடத்தினார். இவர் தமிழ்நாட்டில் பணியாற்றும் பீகார் உள்ளிட்ட வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாகவும், உயிருக்கு ஆபத்துள்ளதாகவும் வீடியோ வெளியிட்டுள்ளார்.
போலியாக வீடியோ வெளியிட்டு அச்சுறுத்தலை ஏற்படுத்தியதாக மதுரை சைபர் க்ரைம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். தற்போது அவர் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைதாகியுள்ளார். அதை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.இந்த மனுவை நீதிபதிகள் எம்.சுந்தர், ஆர்.சக்திவேல் ஆகியோர் நேற்று விசாரித்தனர். அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் திருவடிக்குமார் ஆஜராகி, ‘‘நாட்டையே அச்சுறுத்தும் வகையில் தவறான கருத்தை வேண்டுமென்றே பரப்பியுள்ளார். இவரது செயலால் மாநிலங்களுக்கு இடையே பிரச்னை ஏற்படும் சூழல் உருவானது.
இதனால் தான் அவர் மீது தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை ேமற்கொள்ளப்பட்டது. இதில், எந்த விதிமீறலும் இல்லை’’ என்றார்.மனுதாரர் வக்கீல் நிரஞ்ஜன்குமார் ஆஜராகி, ‘‘இந்த நடவடிக்கையை ரத்து செய்யக் கோரிய மனுவை, ஒன்றிய அரசுக்கு உரிய நேரத்தில் அனுப்பவில்லை. இதனால், மனுவை பரிசீலிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், ‘‘தேசிய பாதுகாப்பு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதில் விதிமீறல் உள்ளது. எனவே, அந்த நடவடிக்கை ரத்து செய்யப்படுகிறது’’ என உத்தரவிட்டனர்.