பாட்னா: பீகாரில் 34 குழந்தைகளுடன் ஆற்றை கடந்து பள்ளிக்கு சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. ஆற்றில் மூழ்கி காணாமல் போன 18 குழந்தைகளை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. பீகார் மாநிலம் முசாபர்பூர் மாவட்டத்தில்ள்ள பாக்மதி ஆற்றில் 34 குழந்தைகளுடன் பள்ளிக்கு படகு இன்று சென்று கொண்டிருந்தது. அப்போது பெனியாபாத் பகுதியில் படகு சென்று கொண்டிருந்த போது திடீரென கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளை விரைந்து மேற்கொண்டனர். தற்போது வரை 20 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவர்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
அதேசமயம், மேலும் 18 குழந்தைகளின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. அவர்கள் நீரில் மூழ்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. சம்பவ இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடைபெற்று வருகின்றன. இச்சம்பவம் குறித்து பீகார் முதல்வர் நிதிஷ் குமார் கூறுகையில், மாவட்ட கலெக்டர் மற்றும் மூத்த அதிகாரிகள் விபத்து நடந்த இடத்திற்கு அனுப்பப்பட்டிருப்பதாகவும், மீட்பு பணி நடைபெறுவதாகவும் தெரிவித்தார். மேலும், இந்த விவகாரத்தை அவசரமாக கவனிக்குமாறு மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுக் கொண்டதாகவும், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும் என்று அவர் தெரிவித்தார்.