சிவான்: சட்ட மாமேதை அம்பேத்கரை அவமதிப்பதை பீகார் மக்கள் பொறுத்துக்கொள்ள மாட்டார்கள் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பீகார் மாநிலம் சிவான் மாவட்டத்தில் நடந்த அரசு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அங்கு ரூ.5900கோடிக்கும் மேல் மதிப்புள்ள பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். தொடர்ந்து வந்தே பாரத் ரயிலை கொடி அசைத்து பிரதமர் தொடங்கி வைத்தார். இதனை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி, ‘‘அம்பேத்கர் வம்ச அரசியலை எதிர்த்தார். ஆனால் அவர்களுக்கு (ஆர்ஜேடி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள்)அது பிடிக்கவில்லை. எனவே அவரது உருவப்படத்தை அவர்கள் தங்களது காலடியில் வைத்துள்ளனர். நான் வரும் வழியில் பாபாசாகேப்பை அவமதித்ததற்காக மன்னிப்பு கேட்கக் கோரும் போஸ்டர்களை கண்டேன். ஆனால் மன்னிப்பு கேட்கப்படவில்லை. ஏனென்றால் அவர்கள் தலித்துக்களை அவமதிக்கிறார்கள். இதற்கு நேர்மாறாக மோடி அம்பேத்கரை தனது இதயத்தில் கொண்டுள்ளர். அவரது உருவப்படத்தை தனது மார்புக்கு அருகில் வைத்திருக்க விரும்புகிறார். அம்பேத்கரின் உருவப்படம் நோய்வாய்ப்பட்ட எழுபது வயதினரின் கால்களுக்கு அருகில் வைக்கப்பட்டது.
அதற்காக அவர்(லாலு பிரசாத்) பாஜ தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விமர்சனங்களை பெற்று வருகிறார். ஆர்ஜேடி -காங்கிரஸ் தாழ்த்தப்பட்ட சாதியினர், தலித்துக்கள், பிற்படுத்தப்பட்டோர் மீது மரியாதை குறைவாகவே வைத்திருக்கிறார்கள். அவர்கள் தங்களை அம்பேத்கரை விட உயர்ந்தவர்களாக கருதுகிறார்கள். ஆனால் அம்பேத்கருக்கு அவமரியாதை செய்வதை பீகார் மக்கள் மன்னிக்க மாட்டார்கள் என்பதை அவர்கள் நினைவில் கொள்ள வேண்டும். இந்தியாவின் முன்னேற்றத்தால் உலகம் மிகவும் ஈர்க்கப்பட்டது. உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உருவெடுப்பதில் பீகாரின் பங்கு மிகப்பெரியது” என்றார்.