புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டத்தில் ஆவின் நிறுவனம் மற்றும் ஆவின் குளிர் பதனக் கிடங்கு ஆகியவற்றை பார்வையிட்ட பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் அளித்த பேட்டி: ஆவினில் நிரந்தர பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. சில பணிகளுக்கு தற்காலிக பணியாளர்களை பணிக்கு எடுக்க போறோம். அவர்கள் ஆவின் பொருட்களை மார்க்கெட்டிங் செய்து மக்களிடம் கொண்டு செல்ல உள்ளோம்.
ஆவின் நிறுவனம் லாபத்தில் இயங்குகிறது. அமுல் வருகிறது என்ற பூச்சாண்டிக்கு எல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். ஆவின் பாலை மக்கள் நம்ப வேண்டும்.
கடந்த ஒரு வருடத்தில் ஆயிரம் கோடி ரூபாய் வரையில் விவசாயிகளுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளது.ஆவின் நிறுவனம் சார்பாக தற்போது 200 மேற்பட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கூடுதல் பொருட்கள் உற்பத்தி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஓரிரு மாதத்திற்குள் ஆவினில் மிகப்பெரிய மாற்றங்கள் வரவுள்ளது. அரசு எடுத்துள்ள பல்வேறு நடவடிக்கைகள் காரணமாக பல்வேறு கூட்டுறவு பால் சொசைட்டிகள் லாபத்தில் இயங்கி வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.