எப்போதும் போல், இப்போதும் அமெரிக்கா தனது பெரியண்ணன் தனத்தை காட்டத்தொடங்கியிருக்கிறது. உலகில் எங்கு மோதல் நடந்தாலும், அதில் தீ மூட்டி குளிர்காய்ந்து விட்டு, அதன் பின் அந்த தீயை நான் தான் அணைத்தேன் என்று உதார் விடுவது அமெரிக்காவின் போக்காக மாறிவிட்டது. அதிலும் அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவி ஏற்ற பிறகு இன்னும் அதிகமான வீம்புகளும், வம்புகளும் அதிகரித்து உள்ளன. டிரம்ப் தினம் தினம் உதிர்க்கும் ‘ பொன் மொழிகள்’ கண்டு உலகமே கொஞ்சம் ஜெர்க்காகித்தான் போய் இருக்கிறது. அத்தனை நாட்டு தலைவர்களிடமும் வம்பு பிடித்துக்கொண்டு இருக்கிறார் டிரம்ப்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை மேற்கொண்டதால் ஏற்பட்ட இந்தியா, பாகிஸ்தான் போரை நான் தான் நிறுத்தினேன் என்றார். ஒரு முறை, இரண்டு முறையல்ல 11 முறை கூறினார். ஜி 7 மாநாட்டிற்கு சென்ற பிரதமர் மோடி தொலைபேசியில் டிரம்ப்பிடம் பேசும் போது, இந்தியா, பாகிஸ்தான் போரில் எந்த நாட்டின் தலையீட்டையும் இந்தியா ஏற்றதில்லை என்று கூறியதை அடுத்து, இருநாட்டு தலைவர்களும் பேசித்தான் போரை நிறுத்தினார்கள் என்று டிரம்ப் பல்டி அடித்தார்.
அடுத்த நாளே இந்தியா, பாகிஸ்தான் போரை நிறுத்தியதற்காக உலக அமைதிக்கான நோபல் பரிசு இந்த முறை டிரம்ப்பிற்கு வழங்க வேண்டும் பாகிஸ்தான் பரிந்துரை செய்யவும், டிரம்ப்பின் உளறல் மேலும் அதிகரித்து விட்டது. உலகில் நடக்கும் அத்தனை போரையும், மோதல்களையும் நிறுத்த நான் தான் முயற்சி செய்கிறேன். ஆனால் எனக்கு நோபல் பரிசு மட்டும் கிடைக்காது என்று புலம்பினார்.
இப்போது இஸ்ரேல், ஈரான் போர். இந்த முறை ஈரான் மீது அமெரிக்காவே நேரடியாக தாக்குதல் நடத்தி மூன்றாம் உலகப்போருக்கான சூழலை ஏற்படுத்தியது. பதிலடியாக அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்த தீப்பற்றிக்கொண்டது மோதல் என்று உலகமே நினைத்துக்கொண்டு இருக்க திடீரென இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கிறார் டிரம்ப். அவர் உத்தரவிட்டு ஈரான் மீது அமெரிக்கா தாக்குகிறது. தற்போது அவர் உத்தரவிட்டு ஈரான், இஸ்ரேல் போர் நிறுத்தத்தை அறிவிக்கிறது. பெரியண்ணன் தனத்தை டிரம்ப் காட்டுகிறார் என்ற விமர்சனங்கள் எழுந்துள்ளன.
இஸ்ரேலும் ஈரானும் கிட்டத்தட்ட ஒரே நேரத்தில் என்னிடம் வந்து சமாதானம் செய்து வைக்கும்படி வேண்டி நின்றதாக அவர் கூறியுள்ளார். ஆனால் சண்டை நிறுத்தம் செய்யும்படி டிரம்ப் தங்களிடம் வந்து கெஞ்சியதாக ஈரான் தெரிவித்துள்ளது. எந்தவொரு சண்டை நிறுத்தம் அல்லது ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது குறித்து எந்த ஒப்பந்தமும் இல்லை என்று கூறியுள்ள ஈரான் வெளியுறவு அமைச்சர் சையத் அப்பாஸ், இஸ்ரேல் தாக்குதல்களை நிறுத்தினால் எங்களுக்கு பதிலடி கொடுக்கும் திட்டம் இல்லை என்று தெரிவித்துள்ளார்.
கத்தாரில் உள்ள அமெரிக்க ராணுவ தளத்தின் மீதான வெற்றிகரமான தாக்குதலைத் தொடர்ந்து இஸ்ரேல் மீது சண்டை நிறுத்தம் திணிக்கப்பட்டிருப்பதாகவும், ஈரானின் தாக்குதலைத் தொடர்ந்து டிரம்ப் சண்டை நிறுத்தத்துக்காக கெஞ்சினார் என்றும் ஈரான் தெரிவித்துள்ளது.
இருப்பினும் இப்போதிலிருந்து சுமார் ஆறு மணி நேரத்தில் சண்டை நிறுத்தம் தொடங்கும் என்று தெரிவித்த டிரம்ப் அடுத்த 24 வது மணி நேரத்தில் மோதல் அதிகாரப்பூர்வமாக முடிவடையும் என்று தெரிவித்துள்ளார். மொத்தத்தில் சண்டைக்கும் காரணம், சமாதானத்திற்கும் காரணம் என்ற வகையில் உலகின் ெபரியண்ணன் தனத்தை காட்டிக்கொண்டு இருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப்.