சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பாதசாரிகள் செல்லும் பாதையில் சைக்கிள் ஓட்டினால் ரூ.1.3 லட்சம் அபராதம்; 3 மாதம் சிறை தண்டனை விதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகளவில் கடுமையான சட்டங்களுக்கும், முறையான நகர திட்டமிடலுக்கும் பெயர் பெற்ற நாடான சிங்கப்பூரில், சமீப ஆண்டுகளாக சைக்கிள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்கள் போன்ற தனிநபர் பயண சாதனங்களின் பயன்பாடு அதிகரித்து வந்தது. இந்த வாகனங்கள் போக்குவரத்திற்கு வசதியாக இருந்தாலும், மறுபுறம் பாதசாரிகளுக்கான பாதுகாப்பில் பெரும் சவாலை ஏற்படுத்தியது. இதனைக் கருத்தில் கொண்ட சிங்கப்பூர் அரசு, பாதசாரிகளுக்கும், சைக்கிள் ஓட்டுபவர்களுக்கும் இடையே ஏற்படும் மோதல்களைத் தவிர்க்கும் வகையில், சைக்கிள் செல்வதற்காக பிரத்யேக பாதைகளை அமைப்பது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டது.
அடுத்தகட்டமாக, பாதசாரிகளின் பாதுகாப்பை மேலும் உறுதிசெய்யும் நோக்கில், சிங்கப்பூர் நிலப் போக்குவரத்து ஆணையம் தற்போது அதிரடியான புதிய சட்டத்தை அமல்படுத்தியுள்ளது. ஜூலை 1ம் தேதி (நேற்று) முதல் நடைமுறைக்கு வந்துள்ள புதிய சட்டத்தின்படி, பாதசாரிகளுக்காக மட்டுமே ஒதுக்கப்பட்ட நடைபாதைகளில் சைக்கிள் அல்லது மற்ற தனிநபர் பயண சாதனங்களை ஓட்டுவது குற்றமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விதியை மீறுவோருக்கு 2,000 சிங்கப்பூர் டாலர்கள் (சுமார் 1.30 லட்சம் ரூபாய்) வரை அபராதமோ, 3 மாதங்கள் வரை சிறைத் தண்டனையோ அல்லது இரண்டுமோ விதிக்கப்படலாம்.
இந்த நடைபாதைகள் தெளிவான சின்னங்களுடன் குறிக்கப்பட்டுள்ளன என்றும், அவசரமாகவோ அல்லது அஜாக்கிரதையாகவோ வாகனம் ஓட்டுபவர்கள் மீது எந்தவித சகிப்புத்தன்மையும் காட்டப்படாது என்றும் ஆணையம் எச்சரித்துள்ளது. எனினும், நடக்க சிரமப்படுபவர்கள் பயன்படுத்தும் பிரத்யேக உதவி சாதனங்களுக்கு இந்த விதியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.