*5 நாள் பயிற்சி நிறைவு
சத்தியமங்கலம் : தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கும் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தில் மாநில ஊரக வாழ்வாதார இயக்ககம், ஹைதராபாத்தில் உள்ள வேளாண் விரிவாக்க மேலாண்மை தேசிய நிறுவனத்துடன் இணைந்து வேளாண் சமுதாய வள பயிற்றுநர்களுக்கு இயற்கை வேளாண்மை குறித்த 5 நாள் பயிற்சி வகுப்பு நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில், பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் முனைவர் உத்தராசு இயற்கை வேளாண்மையின் நோக்கம் மற்றும் இயற்கை வேளாண்மையில் கால்நடைகளின் பங்கு எனும் தலைப்பிலும், முனைவர்.
சத்தியசீலன் இயற்கை வேளாண்மையில் தேனீ வளர்ப்பு, பூச்சி மற்றும் நோய் கட்டுப்பாடு எனும் தலைப்பிலும், முனைவர் செந்தில்வளவன் மண் வள மேம்பாடு மற்றும் மேலாண்மை எனும் தலைப்பிலும், முனைவர் ரமா இயற்கை வேளாண்மையில் வேளாண் காடுகள் மற்றும் நீர் மேலாண்மை எனும் தலைப்பிலும், முனைவர்.
விக்னேஸ்வரி விதை பாதுகாப்பு, விதை வங்கி மற்றும் இயற்கை வழி விதை நேர்த்தி எனும் தலைப்பிலும், முனைவர். சிவசக்திவேலன் இயற்கை வேளாண்மையில் பணியாளர்களுக்கான நெறிமுறைகள் மற்றும் இயற்கை வேளாண் சார்ந்த சார்பு நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றுவது குறித்து பேசினர்.
முன்னோடி விவசாயிகள் ஈஸ்வரமூர்த்தி, கருப்பசாமி, பழனிசாமி, சுந்தரராமன் ஆகியோர் இயற்கை வேளாண்மையில் தங்களது அனுபவங்களையும் பாரம்பரிய பயிர் வகைகள் குறித்தும், வேளாண் இயற்கை இடுபொருட்களின் உற்பத்தி மற்றும் விற்பனை குறித்தும் ஒருங்கிணைந்த பண்ணைய முறையில் இயற்கை வேளாண் செயல்முறை குறித்து பேசினர். தமிழக அரசின் விதை மற்றும் அங்கக சான்றளிப்பு துறையின் ஆய்வாளர் மகாதேவன் இயற்கை வேளாண் பொருள்களுக்கான சான்றிதழ் மற்றும் விற்பனை குறித்து பேசினார்.
இந்த, 5 நாள் பயிற்சியின் நிறைவு விழாவில் பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர் மற்றும் தலைவர் சக்திவேல் பேசியதாவது: ஒருங்கிணைந்த பண்ணைய முறை, வேளாண் நிலத்தில் கால்நடைகளை ஒருங்கிணைத்து இயற்கை முறையில் பண்ணையம் செய்வது குறித்தும் இந்த 5 நாள் பயிற்சியில் கலந்து கொண்ட வேளாண் சமுதாய வள பயிற்றுநர்கள் தங்களது கிராமங்களில் உள்ள விவசாயிகளிடம் இயற்கை வேளாண்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களையும் இயற்கை வேளாண்மை நோக்கி அழைத்து வர வேண்டும்.
இவ்வாறு பேசினார்.மண் பரிசோதனைக்கான மாதிரி எடுத்தல், மண்புழு உரம் தயாரித்தல், இயற்கை உரக்கரைசல்கள் மற்றும் பூச்சி விரட்டி தயாரித்தல் போன்ற இயற்கை வழி வேளாண் தொழில் நுட்பங்களை செய்முறை செய்யப்பட்டது. ஈரோடு மற்றும் அதன் சுற்று வட்டார வேளாண் சமுதாய வள பயிற்றுநர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.இந்த பயிற்சிக்கான ஏற்பாடுகளை பவானிசாகர் வேளாண்மை ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் செய்திருந்தனர்.