Wednesday, September 18, 2024
Home » பாவாணர் கொள்ளுப்பேத்தி மனோசாந்திக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை: அமைச்சர் வழங்கினார்

பாவாணர் கொள்ளுப்பேத்தி மனோசாந்திக்கு கருணை அடிப்படையில் பணி ஆணை: அமைச்சர் வழங்கினார்

by Karthik Yash

சென்னை: தேவநேய பாவாணர் கொள்ளுப்பேத்தி மனோசாந்திக்கு அலுவலக உதவியாளராக கருணை அடிப்படையில் பணி நியமன ஆணையை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் வழங்கினார். தமிழ் மொழியின் வேர்ச்சொல் ஆராய்ச்சி வித்தகர் தேவநேய பாவாணரை கலைஞர், 1974ல் தமிழ் அகர முதலி திட்ட இயக்குநராக நியமனம் செய்து பெருமைப்படுத்தினார். மேலும், மதுரை மாவட்டத்தில் தேவநேய பாவாணர் உருவச் சிலையுடன் கூடிய மணிமண்டபம் அமைத்து 30.10.2007 அன்று திறந்துவைத்து, அவரது வாரிசுதாரரான ஏ.டி.எம்.டி.பரிபூரணம் என்பவருக்கு செய்தி மக்கள் தொடர்பு துறையில் பணி நியமன ஆணையை வழங்கினார். பாவாணரின் நூல்களை அரசுடைமையாக்கி, அவரது மரபுரிமையர்க்கு ரூ.20 லட்சம் பரிவுத்தொகை வழங்கி சிறப்பித்தார்.

ஏ.டி.எம்.டி.பரிபூரணம், மதுரை மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் தேவநேயப் பாவாணர் மணிமண்டபத்தில் அலுவலக உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் உடல்நலம் குன்றி மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 20.11.2022 அன்று இயற்கை எய்தினார். ஏ.எம்.டி.பரிபூரணம் மகளும், மொழிஞாயிறு தேவநேய பாவாணர் கொள்ளு பேத்தியுமான க.மனோசாந்தி, கருணை அடிப்படையில் தமக்கு பணி நியமனம் கோரி முதல்வருக்கு விண்ணப்பம் அளித்திருந்தார்.

முதல்வர், தேவநேய பாவாணர் வாரிசுதாரர் க.மனோசாந்தி விண்ணப்பித்தினை ஏற்று, பரிவுடன் பரிசீலித்து, அவருக்கு மதுரை மாவட்ட மொழிஞாயிறு தேவநேய பாவாணர் மணிமண்டபத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர் பணியிடத்தில் கருணை அடிப்படையில், பணி நியமனம் செய்து ஆணையிட்டுள்ளார். இந்த ஆணையை தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், பாவாணர் கொள்ளுப்பேத்தி க.மனோசாந்திக்கு நேற்று வழங்கினார். இந்நிகழ்வின்போது, தமிழ் வளர்ச்சி (ம) செய்தித்துறை செயலாளர் ராஜாராமன், செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், கூடுதல் இயக்குநர்கள் செல்வராஜ், அன்புச்சோழன், ஆகியோர் உடனிருந்தனர்.

You may also like

Leave a Comment

two + 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi