*சிசிடிவி காட்சி மூலம் சிக்கினார்
சத்தியமங்கலம் : பவானிசாகரில் உள்ள நகைக்கடையில் நகை திருடிய இளம்பெண் சிசிடிவி காட்சி மூலம் போலீசார் கண்டறிந்து அவரை கைது செய்து நகையை பறிமுதல் செய்தனர்.
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் பஸ் நிலையம் அருகே மார்க்கெட் சதுக்கத்தில் பாலாஜி என்பவர் ஜெயலட்சுமி ஜுவல்லரி என்ற பெயரில் நகைக்கடை நடத்தி வருகிறார். இவரது கடைக்கு மே 25ஆம் தேதி கைக்குழந்தையுடன் இளம் பெண் வந்தார். நகை வாங்குவதுவோல் நடித்து கவரிங்க நகையை வைத்து விட்டு 2 பவுன் நகையை திருடிச்சென்றார்.
கடந்த 3 நாளுக்கு முன்பு நகைளை சோதனை செய்தபோது கவரிங் நகை இருந்ததும் இதில் யாரோ கைவரிசை காட்டியுள்ளது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சியை சோதனை செய்தபோது சம்பவத்தன்று கைக்குழந்தையுடன் வந்த இளம்பெண் நகையை திருடி அதற்கு பதிலாக கவரிங் நகையை வைத்த காட்சி பதிவாகி இருந்தது. இது குறித்து பவானி சாகர் போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தேடி வந்தனர்.
தீவிர விசாரணையில் நகையை திருடியது பவானி சாகர் அடுத்துள்ள உத்தண்டியூரை சேர்ந்த ராஜசேகரின் மனைவி ராதிகா (30) என்பவர் என்று தெரியவந்தது. இதனையடுத்து அவரை பிடித்து விசாரித்தனர். அப்போது அவர் திருடிய நகையை அணிந்திருந்தார். நகையை பறிமுதல் செய்த போலீசார் ராதிகாவை கைது செய்தனர்.