பெரியபாளையம்: பெரியபாளையம் பவானி அம்மன் ஆலயத்தில் 3வது ஆடித்திருவிழாவில் அம்மனுக்கு சீர்வரிசைகளுடன் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் ஆரணி ஆற்றங்கரையில் சுயம்புவாக எழுந்தருளிய புகழ்பெற்ற பவானி அம்மன் திருக்கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆடி மாத திருவிழா 14 வார காலம் வெகு விமர்சையாக நடைபெறுவது வழக்கம். மேலும், இந்த கோயிலுக்கு சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், தமிழகம் மட்டுமல்லாமல் ஆந்திரா, புதுச்சேரி, கர்நாடகா, தெலுங்கானா உள்ளிட்ட அண்டை மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சனிக்கிழமை பெரியபாளையம் வருவர்.
அன்று இரவு தங்கி ஞாயிற்றுக்கிழமை காலையில் பெண்கள், சிறுவர்கள், ஆண்கள், முதியோர்கள் என அனைத்து தரப்பு பக்தர்கள் மொட்டை அடித்து பொங்கல் மண்டபத்தில் வடை பொங்கலிட்டு, ஆடு, கோழி என பலியிட்டு ஆலய வளாகத்தில் உள்ள வேப்ப மரத்தடியில் அம்மனுக்கு படையல் இடுவர். மேலும், வேப்பஞ்சலை ஆடைகளை அணிந்து கையில் தேங்காய் ஏந்தி கோயில் சுற்றி வளம் வந்தும், அங்கப் பிரதட்சணம் செய்து இலவச தரிசனம், கட்டண தரிசனம் க்யூ வரிசையில் மணி கணக்கில் காத்திருந்து பவானி அம்மனை தரிசனம் செய்து நேர்த்திக் கடனை செலுத்தி வழிபடுவது வழக்கம்.
இந்நிலையில், நேற்றுமுன்தினம் மூன்றாவது ஆடி ஞாயிற்றுக்கிழமையை முன்னிட்டு பவானி அம்மனுக்கு அதிகாலை பல்வேறு நறுமண திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வண்ண மலர்களாலும், ஆபரணங்களாலும், அலங்காரம் செய்து தீப, தூப, ஆராதணை காண்பிக்கப்பட்டது. பின்னர் உற்சவர் சிறப்பு அலங்காரத்தில் கோயில் மாட வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாவித்தார், மாலை உற்சவருக்கு சிறப்பு அலங்காரம் செய்து நாக வாகனத்தில் ஆனந்த சயனத்தில் பெரியபாளையம் முக்கிய வீதிகளில் உலா வந்தன.
இதனை அடுத்து மூன்றாவது ஆடி திருவிழாவானது உள்ளூர் கிராம மக்கள் காலங்காலமாக வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் நேற்றுமுன்தினம் பெரியபாளையம் டாக்டர் அம்பேத்கார் நகர், தண்டு மாநகர், ராள்ளபாடி, அரியப்பாக்கம் உள்ளிட்ட 4 கிராம மக்கள் இந்த ஆடி மூன்றாவது திருவிழாவை முன்னிட்டு பல்வேறு வடிவங்களில் பவானி அம்மன் வடிவமைத்து அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் வைத்து மேள தாளங்கள் முழங்க, கரகாட்டம், ஆடியவாறு அந்தந்த கிராமத்திலிருந்து,
பொங்கல் பானை தலையில் சுமந்து, மஞ்சள், குங்குமம், புடவை, வளையல், பழ வகைகள் கொண்டு பவானி அம்மனுக்கு தாய் வீட்டு சீர்வரிசையுடன் பவானி அம்மன் கோயிலுக்கு ஊர்வலமாக வந்தனர். பிறகு அவர்கள் கொண்டு வந்த சீர்வரிசைகளை அம்மனுக்கு படைத்தனர். இதன் பின்னர் அம்மனுக்கு பல்வேறு வாசனை திரவியங்களால் அபிஷேகம் செய்து மகாதீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.
இந்தத் திருவிழாவை காண பெரியபாளையம் சுற்றி உள்ள சுமார் 30க்கும் மேற்பட்ட ஊர்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு பவானி அம்மன் தரிசனம் செய்து வழிபட்டனர்.