பவானி : பவானி அருகே உள்ள சன்னியாசிபட்டி, அம்மன் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குப்பண்ண கவுண்டர் மகன் நல்லமுத்து (65). விவசாயி. கால்நடைகள் வளர்த்து வரும் இவர், தனது வீட்டுக்கு முன்புறத்தில் திறந்தவெளியில் 2 எருமைகள், 4 பசுமாடுகள் கட்டி வந்திருந்தார்.இந்நிலையில், நேற்று மாலை சன்னியாசிபட்டி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. அப்போது, அப்பகுதியில் உள்ள மின்கம்பத்திலிருந்து கம்பி அறுந்து, பசு மாடுகள் கட்டப்பட்டிருந்த பகுதியில் விழுந்தது.
இதில், மின்சாரம் பாய்ந்ததில் 2 பசு மற்றும் 2 எருமை மாடுகள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. இதுகுறித்து தகவலின் பேரில் பவானி வருவாய் ஆய்வாளர் மாதேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் நித்யா ஆகியோர் விசாரணை நடத்தினர். சம்பவ இடத்துக்கு பவானி ஒன்றிய கவுன்சிலர் சதீஷ்குமார் நேரில் சென்று ஆறுதல் கூறினார். மின்சாரம் தாக்கி கால்நடைகள் உயிரிழப்புக்கு நிவாரணம் வழங்க வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தி உள்ளனர்.