*இரவில் அடிதடியில் ஈடுபடுவதாக குற்றச்சாட்டு
பவானி : பவானி மேற்கு தெரு பகுதியில் இரு மைனர் சிறுவர்கள் ஒரு இளம் பெண்ணுடன் பழகி வந்துள்ளனர். இந்நிலையில், அப்பெண்ணுடன் பேசக்கூடாது என ஒரு சிறுவனை மற்றொரு சிறுவன் தனது நண்பர்களுடன் கும்பலாக வந்து மிரட்டி தாக்கியதோடு, அப்பெண்ணையும் தாக்கியதாகக் கூறப்படுகிறது.
இதைத் தட்டிக் கேட்க சென்ற அச்சிறுவனின் தந்தையான பட்டாபிராம் (51), அதே பகுதியை சேர்ந்த யுவராஜ், ராஜேந்திரன் ஆகியோரும் தாக்கப்பட்டனர். இச்சம்பவம் நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதுகுறித்து, பவானி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட போதிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், ஏமாற்றமடைந்த அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் நேற்று பவானி போலீஸ் நிலையம் முன்பு சாலை மறியலில் ஈடுபட்டதோடு, முற்றுகையிட்டு திடீர் போராட்டத்திலும் ஈடுபட்டனர். இதனால், அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
சம்பவ இடத்திற்கு வந்த பவானி டிஎஸ்பி ரத்தினகுமார் போராட்டத்தில் ஈடுபட்டோரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேற்கு தெரு பகுதியில் இரவு நேரங்களில் பெண்கள், பள்ளி மாணவிகள் நடமாட முடியாத நிலை உள்ளது.
அப்பகுதியை சேர்ந்த போதை வாலிபர்கள் பைக்கில் அதிவேகமாக செல்வது, பெண்களை கிண்டல் செய்வது என தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர். இதை கண்டிக்கும் பெண்களை வயதானவர்கள் என்று கூட பாராமல் தகாத வார்த்தைகளால் அவதூறாக பேசுகின்றனர்.
மேலும், குடிபோதையில் தெருக்களின் முனையில் நின்று கொண்டு இரவு நேரங்களில் வீடுகளின் மீது சரமாரியாக கற்களை வீசுகின்றனர். எனவே, பொது அமைதிக்கு கேடு விளைவிப்போர் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில், இவ்விவகாரம் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த ஒரு வாலிபரை பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், 4 பேரை தேடி வருகின்றனர்.பொதுமக்கள் திடீரென போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பவானியில் பரபரப்பை ஏற்படுத்தியது.