யோகங்கள் பல… அதில் முக்கியமானது சில… இப்படி இருந்தாலும், ஜாதகரை பொருளாதாரம், பதவி, நன்மதிப்பு என பல விஷயங்களை மேம்படுத்தி, வாரி வழங்கும் யோகமே சிறப்பு பெறுகிறது. சூரியன் என்ற ஆத்மகாரனை மையப்படுத்தி வரக் கூடிய யோகம் என்றும், ஆத்மக்காரகன் என்று சொல்லக் கூடிய சூரியன் தனித் தன்மையாக இருக்கும் யோகம் இதுவே. சூரியனுக்கு உதயன், ரவி, பகலவன், ராஜா, அசோகன், ஆதவன், ஆதித்யன், அருணன், வேந்தன், பரிதி, ஞாயிறு, அரிமா, கதிரவன், கோவன், கோ, அக்கினி என இன்னும் பல நாமங்களுடன் இருந்து, ஆத்மாவை மிளிரச் செய்பவன் சூரியனே. அப்படிப்பட்ட சூரியனின் யோகம் பெரும் ஆற்றலுடன் கூடிய ராஜயோகமாக பாஸ்கரா யோகத்தை ஜோதிடம் சொல்கிறது.
பாஸ்கரா யோகம் என்பது என்ன?
சூரியன் நின்ற பாவகத்திற்கு ன்னிரெண்டாம் பாவகத்தில் சந்திரனும், இரண்டாம் பாவகத்தில் புதனும் இருக்க வேண்டும். மேலும், சந்திரனுக்கு கேந்திரங்கள் என சொல்லக் கூடிய லக்ன பாவம் – 1ல்; சுகஸ்தானம் பாவகம் – 4ல்; களத்திர ஸ்தானம் என்ற பாவகத்தில் – 7ல்; கர்ம ஸ்தானம் என்ற பாவகத்தில் – 10ல் வியாழன் என்று இருப்பதும் சந்திரனுக்கு திரிகோணங்கள் என சொல்லக் கூடிய லக்ன பாவம் – 1ல்; பூர்வ புண்ணியம் பாவகம் – 5ல்; பாக்கிய பாவகம் – 9ல் வியாழன் இருப்பதும், பாஸ்கரா யோகமாகும்.
பாஸ்கரா யோகத்தின் சிறப்பு என்ன?
சூரியனை ஆத்மகாரகன் என்றும் பித்ருகாரகன் என்றும் சொல்கிறது ஜோதிட சாஸ்திரம். அதன்படி, சூரியன் சுபத்தன்மையுடைய கிரகங்களுக்கு மத்தியில் இருப்பதனால், சூரியன் பலம் பெறுகிறார். இதனால், ஜாதகருக்கு ஆத்ம தரிசனம் பெறுவதற்கான அமைப்புண்டு. இந்த யோகம் கொண்ட நபரின் தந்தை போற்றப்படுபவராக இருப்பார். சித்தர்களும், முனிவர்களும், பண்டிதர்களும், ஞானிகளும் செய்கின்ற யோக அப்பியாஸங்கள் யாவையும் இந்த ஆத்ம தரிசனத்திற்கே. இந்த பாஸ்கரா யோகம் கொண்டவர்கள் எளிதில் ஆத்ம தரிசனத்தை கைவரப் பெறுவதற்கான சிறப்பான அமைப்பாகும். சுபத்தன்மை கொண்ட கிரகங்களாகிய சந்திரன், புதன், வியாழன், சுக்கிரன், சூரியனை சூழும் அமைப்புகள் உள்ளதால் ஜாதகர் எதையும் பெறும் யோகம் கொண்டவராக இருக்கிறார். சந்திரன் தேய்பிறையாக இருந்தாலும் வியாழனால் பார்வை செய்யப்பட்டு சுபத்தன்மையாக மாறும் அமைப்பை பெறுகிறது.
பாஸ்கரா யோகத்தின் மேம்படும் அமைப்புகள்
இப்படி சூரியனை அசுப கிரகங்களான சனி, செவ்வாயின் பார்வை செய்யாமல் இருந்தால் யோகத்தின் பலன்கள் கூடுதலாக இருக்கும். மேலும், சாயா கிரகங்களான ராகு – கேதுவால் சூழப்படாமலும் இணையப்படாமலும் இருப்பது சூரியனின் சுபத்தன்மையை அதிகரிக்கச் செய்கிறது. பலன்கள் தடைபடாமல் மேம்படுத்தும் அமைப்பாக இருக்கும்.
ராசி மண்டலத்தில் பாஸ்கரா யோக அமைப்புகள் சில
*கடகத்தில் சந்திரன் இருந்து சிம்மத்தில் சூரியன் அமர்ந்து கன்னியில் புதன், சுக்கிரன் இணைவாக நீச பங்கம் அடைந்து வியாழன் மீனத்தில் அமர்ந்து சந்திரனையும் புதனையும் பார்ப்பது சிறப்பு பாஸ்கரா யோகம் கொண்ட அமைப்பாகும்.
*மீனத்தில் சந்திரனும் அமர்ந்து ரிஷபத்தில் புதன், சுக்கிரன் இணைந்திருப்பது. கடகத்தில் வியாழன் இருப்பதும் சிறப்பான அமைப்பாகும். மேஷத்தில் உச்சம் பெற்ற சூரியன் அதீத பலன்களை வாரி வழங்குவார். உச்ச பலத்தை பெற்று பரிவர்த்தனையினால் சந்திரனும் பலம் பெறுகிறது. மேலும், வியாழனின் (9ம் பார்வை) பாக்கியப் பார்வை சந்திரனுக்கு கிடைக்கப் பெறுவதும் மஹாபாஸ்கரா யோகம் ஆகும்.
*கும்பத்தில் சூரியன் இருந்து. சூரியனுக்கு பன்னிரெண்டாம் பாவகத்தில் (12ல்) மகரத்தில் சந்திரன் அமர்ந்து, சூரியனுக்கு இரண்டாம் இடமான (2ல்) மீனத்தில் புதன் மற்றும் சுக்கிரன் இணைவு பெற்று, கடகத்தில் வியாழன் அமர்வதும் சிறப்பான மஹா பாஸ்கராயோகத்தின் அமைப்பாகும்.
*துலாத்தில் சூரியன், சுக்கிரன் இணைவு பெற்று, சூரியனுக்கு பன்னிரெண்டாம் பாவகத்தில் (12ல்) கன்னியில் சந்திரன் அமரப்பெற்று, விருச்சிகத்தில் புதன் இருக்கப்
பெறுவதும் நீச்ச பங்கம் பெற்ற பாஸ்கர யோகமாகும்.
பாஸ்கரா யோகத்தின் பலன்கள்
*பகைவர்களை வென்று வெற்றி பெறுபவனாக இருப்பார்.
*கூட்டத்தை தலைமை தாங்குபவனாக இருப்பார். கோயில் கட்டுதல் போன்ற பாக்கியங்களை பெற்றவனாக இருப்பார்.
*ஆரோக்கியமானவனாகவும், நீண்ட ஆயுள் கொண்டவனாகவும் இருப்பார்.
*எந்த சவாலையும் எதிர்கொண்டு, அதற்கு தீர்வுகாணும் திறமை படைத்தவனாக இருப்பார்.
*அரசியல் தலைவர்களுக்கு இந்த யோகம் இருக்கப் பெற்றால், சிறந்த பண்புடையவராகவும் ேநர்மை உடையவராகவும் இருப்பார்.
பாஸ்கரா யோகம் மேம்பட என்ன செய்யலாம்
*தினமும் சூரிய நமஸ்காரம் செய்தல் சிறப்பை தரும். சூரிய நமஸ்காரம் என்பது சூரியனை நோக்கி வணங்குதல் மட்டும் இல்லை. யோகப் பயிற்சியுடன் வணங்குதல். சூரிய ஒளி உடல் மீது விழும் வண்ணம் இருக்க வேண்டும்.
*ஆதித்ய ஹ்ருதயம் பாராயணம் செய்தல் சிறப்பை தரும்.
*அதிகமாக வெண்மை நிறங்களை பயன்படுத்துதல் சிறப்பு. கருப்பு வண்ணத்தை தவிர்த்தல் நலம் பயக்கும்.
*ஞாயிறு மற்றும் திங்கள் கிழமைகளில் சோமநாதரை வழிபடுதல் நலம் பயக்கும்.