Monday, April 15, 2024
Home » பரதக்கலையே எனது மூச்சு

பரதக்கலையே எனது மூச்சு

by Porselvi

தமிழகத்தின் பாரம்பரியமான கலையான பரதநாட்டியத்தில் முனைவர் பட்டம் பெற்று நாட்டியக் கலையை தனது உயிர் மூச்சாக கொண்டு “ முத்ராலயா” என்கிற நாட்டிய பள்ளியை நடத்தி வருபவர் சென்னையை சேர்ந்த பரதநாட்டிய கலைஞர் லஷ்மி ராமசாமி. பரத கலையில் கொண்ட அதீத ஆர்வத்தின் காரணமாக தனது ஏழாவது வயதிலிருந்தே சிரத்தையுடன் நாட்டியம் கற்றுக்கொள்ள ஆரம்பித்தவரின் கலைப் பயணம் இன்று வரை தடையற தொடர்கிறது என்றால் அது மிகையில்லை. இவர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தனிநபர் மற்றும் குழு நடனங்களை அதிக அளவில் நடத்தி நடனக் கலைக்கு பெருமை சேர்த்து வருகிறார். தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ விருது உட்பட பல்வேறு விருதுகளை பெற்றுள்ள லஷ்மி ராமசாமி அவர்கள் நாட்டியக் கலை குறித்து நம்மிடம் பகிர்ந்ததிலிருந்து…

தொன்மை வாய்ந்த பரதக்கலையில் ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

எனது அம்மாவிற்கு பரதம் என்றால் உயிர். மிகவும் கட்டுப்பாடான குடும்பத்தில் பிறந்த எனது தாயாரால் தீராத ஆசையிருப்பினும் பரதக்கலையை முறைப்படி கற்றுக் கொள்ள இயலவில்லை. அதனால் தனக்கு பெண் குழந்தை பிறந்தால் நிச்சயம் பரதம் கற்பிக்க வேண்டும் என்பது எனது அம்மாவின் அடிமன ஆசையாக இருந்தது பரதக்கலையின் மீதான மோகத்தின் காரணமாக.. அந்த தீராத ஆசையால் அவர் வயிற்றில் நான் இருக்கும்போதே துவங்கியது தான் எனது பரதக்கலை மீதான ஆர்வம் எனலாம். எனது ஏழாவது வயதில் தான் நான் பரதக் கலையை முறைப்படி கற்றுக்கொள்ள ஆரம்பித்தேன். தற்போது வரை இக்கலையே எனது உயிராகவும் , உலகமாகவும் இருந்து வருகிறது. தற்போது சென்னை கோட்டூர்புரத்தில் “ முத்ராலயா” என்கிற நாட்டியப் பள்ளியை துவங்கி சிறப்பாக நடத்தி வருகிறேன்.

பாரம்பரியமான இக்கலையை கற்பித்த உங்கள் குருமார்கள் பற்றி சொல்லுங்களேன்?

பொதுவாக ஏதேனும் ஒரு கலையை கற்றுத் தருபவர்களை ஆச்சாரியர் என்பது தான் வழக்கம். எனது மாணவிகளை கூட ஆச்சாரியர் என்றே அழைக்க சொல்வேன். கடவுளின் அனுக்கிரகத்தால்
எனக்கு அமைந்த ஆச்சாரியர்கள் எல்லோரும் மிகச்சிறப்பானவர்கள். எனது முதல் ஆச்சாரியர் திருநெல்வேலியில் இருந்த இந்திரா கிருஷ்ணமூர்த்தி அவர்கள். அடுத்ததாக எனது தலைமை
ஆச்சாரியர்களில் பத்ம சித்ரா விஸ்வேஸ்வரன் அவர்கள் நாட்டியகலையோடு எனக்கு வாழ்வியலையும் கற்று தந்தவர் எனலாம். நாட்டியத் துறையில் எனக்கு மிகவும் இன்ஸ்பிரேஷனாக இருந்தவர்கள் நிறைய பேர் அதில் பத்மா சுப்பிரமணியம், நந்தினி ரமணி, சொப்பன சுந்தரி அவர்கள், தனஞ்செயன் மாஸ்டர் என பலரையும் சொல்லலாம்.

உங்களது பிஎச்டி படிப்பு மற்றும் எழுத்தார்வம் குறித்து…

சென்னை பல்கலைக்கழகத்தில் இசைத்துறையில் பரதத்தில் முனைவர் பட்டம் பெற்ற முதல் மாணவி நான். அதற்கு முன்பு பரதத்தில் MA பட்டம் படித்ததும் சென்னை பல்கலைக்கழகத்தில் தான். எனக்கு இயல்பாகவே தமிழ் மீதும் நமது பாரம்பரிய பாரத கலாச்சாரத்தின் மீதும் அதீத மதிப்பும் மரியாதையும் உண்டு. அமெரிக்க அரசு அகில உலக ஃபுல்பிரைட் ஊக்கத்தொகை அளித்ததன் மூலம் சான் பிரான்சிஸ்கோவில் உள்ள கோல்டன் கேட் பல்கலைக்கழகத்தில் கலை மற்றும் கலாசார மேலாண்மை பயிலும் வாய்ப்பு கிடைத்தது. நான் எழுதிய ‘இந்திய பாரம்பரியத்தின் சுவை’ என்னும் நூல், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் மூலம் சிறந்த புத்தகமாகத் தேர்வு செய்யப்பட்டு ஊக்கத் தொகையும் பெற்றது எனக்கு மிகவும் பெருமையான விஷயம்.

உங்களுக்கு கிடைத்த விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள் குறித்து…

எனது தயாரிப்பான ‘சிற்பியின் கனவு’ சிறந்த படைப்பாக அகில உலக நடன ஐக்கிய சபையால் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறது என்பது எனது உழைப்பிற்கு கிடைத்த மிகச் சிறந்த அங்கீகாரம். எனது நாட்டிய சேவைக்காக ‘பால சரஸ்வதி’, ‘யுவகலா பாரதி’, ‘நாட்டிய கலா விபஞ்சி’ ஆகிய பட்டங்களையும், ‘வாணி கலா நிபுணர்’, ‘சாதனைப் பெண்மணி’, ‘நாட்டிய கலாமணி’, ‘நாட்டிய கலா சாரதி’, ‘கலா ஆச்சார்ய சிரோன்மணி’, தமிழ்நாடு அரசின் ‘கலைமாமணி’ போன்ற பல்வேறு விருதுகளையும் பெற்றது எனது பரதக் கலைக்கு கிடைத்த மிகப்பெரிய அங்கீகாரங்கள் எனலாம்.

உங்கள் நடன வகுப்புகள் குறித்து…

அமெரிக்கா, இலங்கை போன்ற நாடுகளிலும், கொல்கத்தா, சென்னை ஆகிய நகரங்களிலும் நேரடியாகவும், இணையவழியிலும் பயிற்சி வகுப்புக்களை நடத்தி வருகிறேன். நான் பலமுறை ஆடல்கலை பற்றிய பயிற்சிப் பட்டறைகளும், கலையின் இலக்கணம் மற்றும் அதை உபயோகிக்கும் முறைகள் சார்ந்த பயிற்சி பட்டறைகளையும் நடத்தி வருகிறேன்.

உங்கள் நாட்டியத்தின் தனிச்சிறப்பு குறித்து சொல்லுங்களேன்?

எனக்கு நாட்டியத்தில் நமது தமிழ் பாரம்பரியம் மற்றும் கலாச்சார குறித்த விஷயங்களை புகுத்தி வித்தியாசமான நாட்டியங்களை அமைக்க வேண்டும் என்கிற ஆசைகள் அதிகம். எனது நடனத்தில் வித்தியாசமான முயற்சிகளாக சைவ அடியார்கள் நால்வர் கதை, சைவ குரவர் நால்வர் பெருமை கூறும் நாட்டிய நிகழ்ச்சிகளை அமைத்திருக்கிறேன். சிலப்பதிகாரத்தின் குரவை மற்றும் வரிப்பாடல்கள், முத்தொள்ளாயிரம், சங்கம் மருவிய காலத்தின் இலக்கியங்களான தூது, கலம்பகம், குறவஞ்சி, பஞ்ச மரபு என்னும் இலக்கண நூல் காட்டும் ஜதி, புதிய தாளங்களில் அலாரிப்பு, நடன வடிவில் வராத புதிய கீர்த்தனைகள், புதிய கருத்துகளில் சப்தங்கள், வர்ணங்கள், சப்த குளாதி தாளங்களின் அடிப்படையில் அமைந்த ஜதிகளை தேவாரங்களோடு இணைத்து நாட்டிய நிகழ்ச்சிகள் தயாரித்திருக்கிறேன்.

பரதக் கலைக்கான வரவேற்பு தற்போது எப்படி இருக்கிறது?

பரதக்கலைக்கான வரவேற்பு எப்போதும் நன்றாகவே இருக்கிறது. நிறைய இளம் தலைமுறையினர் நாட்டியம் கற்றுக்கொள்ள ஆர்வமாகவே வருகின்றனர். ஆனாலும் இன்னும் நிறைய குடும்பங்களில் பரதக்கலை குறித்த புரிதல்கள் சரிவர இல்லை என்பது எனது ஆதங்கம். நமது தொன்மை வாய்ந்த பாரம்பரிய கலையை கற்றுக்கொள்ளும் ஆர்வம் இன்னும் நிறைய பேருக்கு வந்தால் இக்கலை அடுத்த தலைமுறைக்கும் நன்றாக கடத்தப்படும் என்பது எனது ஆசை என்கிறார் லஷ்மி ராமசாமி. நடனக்கலையையே தமது வாழ்க்கையாக நினைத்து அதையே உயிர் மூச்சென வாழ்ந்து அதனை இவ்வளவு சிரமத்திற்கிடையேயும் அடுத்த தலைமுறைக்கு கடத்தி வரும் நடனக் கலைஞர், நடன ஆராய்ச்சியாளர், நடன அமைப்பாளர், நடன ஆசிரியர் என்கிற பன்முகத்திறமை கொண்ட பரதக் கலைஞர் லட்சுமி ராமசாமி அவர்களை வாழ்த்தி வணங்கி விடைப்பெற்றோம்.
– தனுஜா ஜெயராமன்

You may also like

Leave a Comment

thirteen − thirteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi