சென்னை: பாடபுத்தகங்களில் பாரத் பெயர் மாற்றத்திற்கு வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார். மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்ட அறிக்கை: இந்தியா என்ற பெயரை பாரத் என மாற்ற வேண்டும் என்றால், அவையில் 66 விழுக்காடு உறுப்பினர்களின் ஆதரவு தேவை.இரு அவைகளிலுமே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை இல்லை.நாடாளுமன்ற ஜனநாயகத்தை காலில் போட்டு மிதித்து வரும் ஒன்றிய பாஜக அரசு, நாடாளுமன்றத்தில் சட்ட திருத்தம் கொண்டு வராமலேயே இந்தியாவின் பெயரை பாரத் என்று நடைமுறைக்கு கொண்டு வருவதற்கு முயற்சிக்கிறது.இந்தியாவில் நடைமுறையில் உள்ள இந்திய தண்டனைச் சட்டம், குற்றவியல் நடைமுறைச் சட்டம் மற்றும் இந்திய சாட்சியச் சட்டம் ஆகியவற்றின் பெயர்களைமாற்றி திருத்த புதிய சட்ட முன்வரைவு ஒன்றை நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித் ஷா தாக்கல் செய்துள்ளார்.
அதன்படி இந்திய தண்டனைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய நியாய சன்ஹிதா, குற்றவியல் நடைமுறைச் சட்டத்திற்குப் பதிலாக பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா, இந்திய சாட்சியச் சட்டத்திற்குப் பதிலாக பாரதீய சாக்ஷ்யா என அழைக்கப்படும் என்று இந்த சட்ட திருத்த முன்வரைவில் கூறப்பட்டுள்ளது.இதன் தொடர்ச்சியாக தற்போது என் சி இ ஆர் டி ,பள்ளிப் பாட புத்தகங்களில் இந்தியாவின் பெயரை பாரத் என்று மாற்றுவதற்கு முயற்சிப்பது அதன் அதிகார வரம்பை மீறியது மட்டுமல்ல,சட்ட நெறிமுறைகளையும் மீறிய செயலாகும்.கடும் கண்டனத்திற்குரிய இந்தப் பரிந்துரையை ஏற்கக் கூடாது.