Sunday, June 22, 2025
Home ஆன்மிகம் நம்மிடமே வித்தை இருக்கிறது!

நம்மிடமே வித்தை இருக்கிறது!

by Porselvi

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 96 (பகவத்கீதை உரை)

காம உணர்விலிருந்து விடுபட அறிவுறுத்திய கிருஷ்ணன், அடுத்து அவ்வாறு விடுபடுவது (கட்டுப்படுத்துவது அல்ல) எவ்வாறு என்பதை விவரிக்கிறார். சும்மாவானும் அறிவுரை சொல்வது அனைவருக்கும் சுலபம். ஆனால் அந்த அறிவுரையை மேற்கொள்ளும் ஒருவன் அதைக் கடைப்பிடிக்க வேண்டுமானால் என்ன பயிற்சியை அல்லது வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதும் முக்கியம்.

தீய வழியில் போகாதே என்று எளிதாகச் சொல்லிவிடலாம். ஆனால் அவ்வாறு போவதால் விளையக்கூடிய பாதகங்கள் என்னென்ன, அவ்வாறு பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்கள் என்ன என்பதையெல்லாம் விவரித்துச் சொன்னால்தான், அந்த அறிவுரைக்கு முழு மதிப்பும், மரியாதையும் கிடைக்கும். இல்லாவிட்டால், ‘இவர் இப்படித்தான் எதையாவது சொல்லிக் கொண்டிருப்பார்,‘ என்ற அலட்சியம்தான் மேலோங்கும். ஆனால், அறிவுறுத்து பவர் சொல்லக்கூடிய விளக்கங்களைக் கேட்கும் பொறுமையும் எதிராளிக்கு வேண்டும் என்பதும் முக்கியம்தான். அதே சமயம், எதிராளி ஆர்வத்துடன் கேட்கும் வகையில் சொல்ல வேண்டியதும் அறிவுறுத்துபவரின் கடமையாகும்.

காம உணர்வை எவ்வாறு விடுவது? கிருஷ்ணன் என்ன சொல்கிறார்?
ஸ்பர்சான்க்ருத்வா பஹிர்பாஹ்யான்ஸ் சக்ஷுஸ்சைவாந்தரே ப்ருவோ
ப்ராணாபானௌ ஸமௌ க்ருத்வா நாஸாப்யந்தர சாரிணௌ (5:27)
யதேந்த்ரியமனோபுத்திர் முனிர் மோக்ஷபராயண
விகதேச்சாபயோக்ரோதோ ய ஸதா முக்த ஏவ ஸ (5:28)

‘‘அர்ஜுனா, வெளி விஷயங்களில் நாட்டம் கொள்ளாதே. அவற்றை முற்றிலுமாக வெளியிலேயே நிறுத்திவிடு. எப்படி நிறுத்துவது? வெளி விஷயங்களில் கொஞ்சமும் கவனம் இழக்காமல், (மனப்)பார்வையை இரு புருவங்களுக்கிடையே நிறுத்தி, நாசியில் இழையோடும் பிராண மற்றும் அபான வாயுக்களை முறைப்படுத்தினால் (நிதானமாக சுவாசத்தை உள்ளுக்கும், வெளிக்குமாகச் செலுத்தினால்), இந்திரியங்கள், மனம், புத்தி ஆகியவற்றின் சலனக் குறிகள் மேலெழாது. அதனால் காமம், கோபம், பயம் ஆகிய உணர்வுகளிலிருந்து விடுபட முடியும். பரம்பொருளோடு (மோட்சத்திலேயே) ஐக்கியமாகிவிடவும் முடியும். ஒரு ஞானி இதைத்தான் செய்கிறான்.’’சுவாசத்தைக் கட்டுப்படுத்துவதைப் பற்றி கிருஷ்ணன் ஏற்கெனவே அத்தியாயம் 4, ஸ்லோகம் 29ல் குறிப்பிட்டிருக்கிறார்:

‘‘அபானே ஜுஹ்வதி ப்ராணம் ப்ரணே
பானம் ததாபரே
ப்ரணாபானகதீ ருத்த்வா ப்ராணாயாம
பராயணா’’

‘‘சில யோகிகள் தம் சுவாசத்தைக் கணிக்கத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். தம் மூக்கினால் உள்ளிழுக்கும் காற்றையும், வெளியிடும் காற்றையும் தம் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ளத் தெரிந்தவர்களாக இருக்கிறார்கள். அதாவது, உள்ளிழுக்கும் பிராண வாயு மற்றும் வெளியிடும் அபான (கரியமில) வாயு ஆகிய இரண்டின் போக்கை பிராணாயாமப் பயிற்சியால் கட்டுப்படுத்தி மனோதிடம் படைத்தவர்களாக விளங்குகிறார்கள்,’’ என்றார் கிருஷ்ணன்.

ஆக, நம்மிடமே வித்தையும் இருக்கிறது, வேதனையும் இருக்கிறது. வேண்டா இச்சையை முதலில் கட்டுப்படுத்தி, பிறகு அறவே நம்மிடமிருந்து அகற்றும் உபாயத்தையும் இறைவன் நமக்குள் வைத்திருக்கிறார். ஆனால் நம் மனம் அந்த இறைவனை ஏமாற்றுவதாக நினைத்துக்கொண்டு நம்மையே ஏமாற்றுகிறது என்பதுதான் யதார்த்தம்.

ஒரு முனிவர் ஆற்றங்கரையோரமாகத் தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது அந்த வழியாக ஒரு இளம் பெண் நடந்து சென்றாள். அவள் கூந்தலில் சூடியிருந்த மலர்களின் வாசம் அவரைக் கலைத்தது. தன் தவம் அவளால் கலைந்தது என்று கோபம் கொண்டார் அவர். கண் திறந்து, ‘‘இந்தா பெண்ணே, நீ யவ்வனமாகத்தான் இருக்கிறாய், அதற்காக வாச மலர்கள் சூடி, அந்த மணத்தால் என் தியானத்தைக் குலைக்க வேண்டுமா?” என்று வார்த்தைகளில் கடுமை இருந்தாலும், குரலில் இல்லாதபடி, கேட்டார்.

அந்தப் பெண் திடுக்கிட்டாள். அவரை அவள் அதுவரை கவனிக்கவே இல்லை. ஆனாலும், முனிவர் என்பதால், ‘‘மன்னிச்சுடுங்க சாமி, நான் தினமும் இந்த வழியாகத் தான் பால் வியாபாரம் பண்ணப் போய்வருவேன். உங்களை கவனிக்கலே. நாளையிலிருந்து பூ சூடாம வர்ரேன்,’’ என்று பணிவுடன் தெரிவித்தாள். மறுநாளும் முனிவர் தியானத்தில் ஆழ்ந்திருந்த சமயத்தில் அவள் வந்தாள். இப்போது கொலுசு சத்தம்! மறுபடி கண்விழிப்பு, மறுபடி கோபம் – அவள் கொலுசு தன்னைக் கலைத்தது என்று! மறுபடி அவள் மன்னிப்புக் கோரி, அப்போதே கொலுசுகளைக் கழற்றி தனியே வைத்துக் கொண்டாள்.

அடுத்த நாள். அதே முனிவர் அதே தியானம். ஆனால் அச்சமயத்தில் பேரமைதி. எந்த இடையூறும் இல்லை. ஆனாலும் முனிவர் மனசுக்குள் நினைத்துக்கொண்டார்: ‘இந்நேரம் அவள் என்னைக் கடந்து போயிருப்பாள்!’ஆக, அவருடைய தியானத்தை அடுத்தடுத்து கலைத்தது அந்தப் பெண் அல்ல; அவருடைய சொந்த மனசுதான்!

அதாவது கவனம் எங்கே குவிகிறதோ, அங்கே அந்தப் புலன் வேலை செய்கிறது. தெருவில் நடந்து போகிறோம். மருந்துக் கடைக்குப் போய் அவசரமாகத் தேவைப் படும் குறிப்பிட்ட மருந்தை வாங்க வேண்டும். எதிர்ப்படும் நபர்களை நாம் கவனிப்பதில்லை. நம் குறிக்கோள் மருந்து வாங்க வேண்டும் என்பதே. அது என்ன விலையாக இருக்கும் என்பதிலிருந்து ஒருவேளை அந்தக் கடையில் கிடைக்காவிட்டால் வேறு பக்கத்தில் எந்த மருந்துக் கடையிலிருந்து வாங்கிக் கொள்ள முடியும் என்ற யோசனையோடு நாம் செயல்படுகிறோம்.

‘‘என்ன சார், கண்டுக்காம போறீங்க?’’ என்று எதிர்ப்படும் நண்பர் கேட்கலாம். ‘‘சாரி, நான் கவனிக்கலே,’’ என்கிறோம்.‘‘என்ன சார், இப்படிச் சொல்றீங்க? அதான் நேருக்கு நேர் பார்த்தீங்களே!’’ நண்பர் விடமாட்டார். ‘‘யோவ், நான்தான் கவனிக்கலேன்னு சொன்னேன் இல்லே?’’ என்று அவர் மீது கோபப்படுகிறோம். கவனம் இல்லாத பட்சத்தில் எந்த இந்திரியமும் வேலை செய்யாது. கண் பார்க்காது, காது கேட்காது, மூக்கு நுகராது, வாய் சுவைக்காது, உடல் ஸ்பரிசிக்காது.

‘ஆகவே இரு கண்களுக்கு நடுவே உன் தியானத்தை அதாவது கவனத்தை நிலைக்கச் செய்’ என்கிறார், கிருஷ்ணன். யோக முறைப்படி, அந்த இடத்தில்தான் நம் ஆக்ஞா சக்கரம் நிலைபெற்றிருக்கிறது. இந்த சக்கரத்தின்மீது தியானம் செய்வதால், நம்முடைய இலக்கை அடைவது எளிதாகும் என்பது கிருஷ்ணனின் அறிவுரை.நம் சுவாசம் அனிச்சையாகவே நிகழ்ந்தாலும், அதை நம்மால் உணரமுடிகிறது. மூச்சு உள்ளே போவதும், வெளியே வருவதும் தெரிகிறது. ஆனால் உள்ளிழுக்கப்படும் மூச்சும், வெளியிடப்படும் மூச்சும் சமநிலையில் அமையும்போதுதான் ஆக்ஞா சக்கரத்தின் மீது தியானம் நிலைக்கும்; ஆகவே நீ அவ்வாறே தியானம் செய், என்கிறார் கிருஷ்ணன்.

ஒவ்வொருவருடைய தனித்தன்மையைப் பொறுத்து, அவருடைய உடலில் அமைந்திருக்கும் சக்கரங்களில், அவரவர் தியானம் செய்ய இயலும். அர்ஜுனனைப் பொறுத்தவரை அவன் மேற்கொண்ட இலக்கை எட்ட வேண்டும். அதற்கு ஆக்ஞா சக்கரத்தின் மீது அவனுடைய தியானம் லயிக்க வேண்டும். ஆனால், இப்படி தியானம் மூலமாக நம் இந்திரியங்களைக் கட்டுப்படுத்துவதால், அதனால் கோபத்தையும், காமத்தையும் விலக்க முடியுமானால், வாழ்வதன் அர்த்தம்தான் என்ன? கோபிக்காமலோ, காமவசப் படாமலோ முழு வாழ்க்கையை ஒருவரால் வாழ்ந்துவிட முடியுமா?

முடியாதுதான் என்று கிருஷ்ணனும் இந்த வாதத்தை ஏற்றுக்கொள்கிறார். கோபம் வரலாம், ஆனால் கோபாந்தகனாக இருக்கக்கூடாது; அதேபோல காமம் வரலாம், ஆனால் காமாந்தகனாக இருக்கக் கூடாது என்கிறார் அவர். கோபத்தில் நியாயம் இருக்கும் பட்சத்தில், காமத்தில் தர்மம் இருக்கும் பட்சத்தில் அவற்றிற்குத் தற்காலிக இடமளிப்பதில் தவறில்லை. ஆனால் அவையே நிரந்தர குணங்களாகிவிடக்கூடாது.

போக்தாரம் யக்ஞதபஸாம் ஸர்வலோக மஹேச்வரம்
ஸுஹ்ருதம் ஸர்வபூதானாம் ஞாத்வா மாம் சாந்திம்ருச்சதி (5:29)

‘‘அர்ஜுனா, நான் தியானம், யாகம், தவம் என்ற செயல்களை அனுபவிப்ப வனாக இருக்கிறேன். உலகனைத்துக்குமான பரந்தாமன் நான், அனைத்து உயிர்களுக்கும் நண்பன் நான் என்று உணரும் மக்கள் அனைவரும் சாந்தியடைகிறார்கள்.’’‘தன்னை பரமாத்மாக்களுக்கெல்லாம் பரமாத்மாவாக பாவிப்பவன் ஆன்ம முக்தி அடைகிறான்’ என்று கிருஷ்ணன் கூறும்போது அதில் அகங்காரம் தொனிக்கிறதுதான். ஆனால் அதுதான் உண்மை, உலகியல் அனுபவம். ‘நான் இல்லாவிட்டால், விளக்கு எரியாது, மின்விசிறி சுற்றாது, ஏஸி இயங்காது, என் இருப்பால்தான் எல்லா இயந்திரங்களும் உயிர்க்கின்றன’ என்று மின்சாரம் சொல்வதைப் போன்றதுதான் இது. அதுதானே உண்மை?

ஆனால் கிருஷ்ணன் மனிதனாகத் தோன்றியவர். மனித இயல்பாக அகங்காரம் இருக்கலாம், தப்பில்லை என்று சமாதானமடைய முடியாது. ஏனென்றால் அவர் கவுரவம் பார்க்காமல் அர்ஜுனனுக்காக தேரைச் செலுத்துகிறார். தன் பரமாத்ம தன்மையை ஒதுக்கி வைத்துவிட்டு, தேர் இழுக்கும் குதிரைகளைப் பராமரிக்கிறார். அவற்றின் சோர்வு போக உடலை நன்கு தேய்த்துவிடுகிறார், உணவு கொடுக்கிறார், ஆதூரத்துடன் தட்டிக் கொடுத்து அணைத்துக் கொள்கிறார், அவற்றை உற்சாகப்படுத்துகிறார்.

அகங்காரம் கொண்ட ஒருவரால் இப்படி சேவைகளைப் புரிய முடியுமா? முடிகிறது. ஏனென்றால் அவர் பரமாத்மா. சாதாரண மக்களூடே பழகினாலும், அவர் தனித்துவமானவர்.
இதனாலேயே தத்துவ ஞானி ஜே. கிருஷ்ணமூர்த்தி, தன் சொற்பொழிவுகளால் மக்கள் மனம் தெளிவதை அறிந்து ஆனந்தம் கொண்டார். ஆனால் ஒருபோதும் தான் அவர்களுக்கு குருவாக விளங்க ஆசைப்பட்டதே இல்லை. அதை அவர் பலமுறை தெரிவித்திருக்கிறார். ‘‘நான் பரமாத்மா அல்ல, உங்களுடைய குரு அல்ல, உங்கள் ஆசிரியனும் அல்ல. நான் எதுவும் அல்ல,‘‘ என்று சொல்லியிருக்கிறார்.

மகான் ரமண மகரிஷி தன்னை ‘இது’ என்று சொல்லிக்கொண்டது போன்ற தத்துவம்தான் இது. ஆனாலும் தம் மனசுக்குள் அகங்காரத்தை வளர்த்துக் கொண்டவர்கள் ஜே.கேயின் கூற்றுகளை வக்கிரபுத்தியுடன் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் அவருடைய சொற்பொழிவுகளால் மனம் துடைக்கப்பட்டவர்கள், அவரைத் தங்களுடைய குருவாகவே மானசீகமாகக் கருதினார்கள். வெளிப்படையாகத் தங்களை அவருடைய சீடர்களாக விளம்பரப்படுத்திக் கொள்ளாவிட்டாலும், அவர் போதிக்கும் வாழ்க்கைத் தத்துவங்களை உள்வாங்கிக் கொண்டார்கள். தங்கள் வாழ்க்கையைத் திருத்திக் கொள்ள முயன்றார்கள் – சத்தமில்லாமல்!

கிருஷ்ணன் தன்னை பரமாத்மா என்று சொல்லிக்கொள்வதை அர்ஜுனன் ஆட்சேபிக்கவில்லை. கடைநிலை ஊழியமும் செய்யத் தயாராக இருக்கும் அவர் பரமாத்மாவாகத்தான் இருக்கமுடியும் என்று அவன் நம்பியிருக்கிறான். ஆனால் அதையே அவரது அகங்காரமாகக் கருதியிருப்பானானால், கீதோபதேசம் ஆரம்பித்த சமயத்திலேயே அவன் அதற்குத் தடை விதித்திருப்பான். ‘எனக்குத் தெரியும், போதிக்காதே, நிறுத்து,’ என்று சொல்லியிருப்பான். ஆனால் அவனும் அகங்காரம் பிடித்தவன் அல்ல என்பதால், கிருஷ்ணனின் போதனைகளைக் கேட்டுக் கொண்டே இருந்தான். தான் தெளிவடையவில்லை என்பதை அவன் உணர்ந்திருந்ததால்தான், கிருஷ்ணன் மூலமாக அது தனக்குக் கிடைக்கும் என்ற எதிர்பார்த்தலில் அவர் பேசப்பேச அவன் அமைதி காத்தான்.

கிருஷ்ணனும், இதற்கு முந்தைய ஸ்லோகத்தில் ‘‘இலக்கு நோக்கிய உன் லட்சியத்தை விரிவாக்கு. புருவ மத்தியில் ஆக்ஞா சக்கரத்தை எழுப்பு’’ என்று கூறினார். இப்போதோ ‘‘நான் பரமாத்மா என்பதை அறிந்துகொள்,’’ என்கிறார். அதாவது ஆக்ஞா சக்கரத்தை எழுப்பும் வித்தை கைவராவிட்டால், என்னைச் சரணடை, நான் உன்னைக் காக்கிறேன்,’ என்று அர்ஜுனன் சமாதானம் கொள்ளச்செய்யும் உத்தி அல்ல அது; ‘அவனிடமிருந்து ‘நானை’ அழிப்பதற்கான உத்தி.

சோர்ந்து அமர்ந்துவிட்ட அவனை நிமிர்ந்து நிற்கச்செய்ய வேண்டும்; காண்டீபம் பற்றச் செய்ய வேண்டும், தன் லட்சியத்தை அடைய வீறு கொண்டு எழச் செய்ய வேண்டும் என்பதற்கான கிருஷ்ணனின் முயற்சி அது. (பகவத் கீதை ஐந்தாம் அத்தியாயம் நிறைவு பெறுகிறது. அடுத்த இதழிலிருந்து ‘தியான யோகம்’ என்ற ஆறாவது அத்தியாயம் தொடங்குகிறது.)

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi