Saturday, January 25, 2025
Home » ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 86 (பகவத்கீதை உரை)

ஸ்ரீ கிருஷ்ண அமுதம் – 86 (பகவத்கீதை உரை)

by Nithya

சுகம்வேறு,ஆனந்தம் வேறு!

“ஸர்வகர்மாணி மனஸா ஸ்ந்யஸ்யாஸ்தே ஸுகம் வசீ
நவத்வாரே புரே தேஹீ நைவ குர்வன்ன காரயன்’’ (5:13)

‘‘தன்னை வசப்படுத்தத் தெரிந்து கொண்ட ஒரு யோகியானவன், தான் இயற்றும் கர்மங்களில் எல்லாம் விவேகம் கொண்டவனாகிறான். அவன் ஒன்றும் செய்யாதும் இருக்கிறான்; செய்விக்காமலும் இருக்கிறான். இந்த நிலையிலேயே அவன் நவ வாசல்கள் கொண்ட வீட்டில் இன்புற்று வசித்து வருகிறான்.’’அவரவர் மனோபாவத்துக்கு ஏற்றாற்போல கர்மாக்கள் வெவ்வேறு வடிவங்கள் எடுக்கின்றன. ஒருவர் அலுவலகத்துக்குப் பேருந்தில் பயணிக்கிறார் என்றால், இன்னொருவர் காரில் செல்கிறார்.

அதேபோல சைக்கிளில், வாடகை வாகனத்தில், ரயிலில் என்றும் பயணித்து அலுவலகம் செல்கிறார்கள். அவரவருடைய மனோநிலை, வசதியைப் பொறுத்து இந்தப் பயணத்தை அவரவர் மேற்கொள்கிறார்கள். ஒருவருடைய வாழ்நாள் கர்மாக்களில் முக்கியமானது நித்திய கர்மம். உண்பது, நீராடுவது, உடுத்துவது, வழிபடுவது இவை போன்றவை நித்திய கர்மாக்களாகும். இவற்றைச் செய்வதால் புண்ணியம் ஏற்படாமல் போகலாம், ஆனால், நீராடாமல் இருப்பது, வழிபடாமல் இருப்பது போன்றவற்றால் பாபம் சேரலாம்.

நைமித்திக கர்மம் என்பது இன்னொன்று. சிவராத்திரி, ஏகாதசி மற்றும் கிரகண காலத்தில் மேற்கொள்ளப்படும் கர்மாக்கள். இதுவும் நித்திய கர்மா போன்றதுதான். நிறைவேற்றாவிடில் பாபம் ஏற்படும். மூன்றாவதாக காமிய கர்மம். ஏதேனும் ஒரு பலனை எதிர்பார்த்துச் செய்யப்படும் செயல். உதாரணமாக, மழை வேண்டி வருண ஜபம் செய்வது, யாகம் இயற்றுவது என்று சொல்லலாம். இந்த கர்மத்தை மேற்கொள்ளாவிட்டால் எந்தப் பாபமும் இல்லை. காரணம், எதிர்பார்ப்பது சிலசமயம் நிறைவேறலாம், சிலசமயம் நிறைவேறாமலும் போகலாம். அதோடு அது சமுதாயப் பொது நன்மைக்கானது என்பதாலும் அவ்வாறு பாபம் சேராது.

நாலாவது நிஷித்த கர்மம். அதாவது நம் முன்னோர்களால், சான்றோர்களால் செய்யத்தகாதது என்று ஒதுக்கி வைக்கப்பட்ட செயல்கள். இதனால் புண்ணியம் நிச்சயம் இல்லை, பாபம் கட்டாயம் உண்டு! ஒரு யோகி மேலே சொன்ன நான்கு வகை கர்மாக்களையும் நன்கு உணர்ந்தவனாக இருக்கிறான். ஆகவே, தான் ஈடுபடும் எந்தச் செயலிலும் தன் உணர்வை பிரதிபலிக்காதவனாக அவன் இருக்கிறான். நம் உடல் ஒன்பது வாசல்கள் கொண்ட ஓர் ஊர் என்று வர்ணிக்கிறார் கிருஷ்ணன். அந்த ஊரின் அரசன், ஆன்மா. இந்த ஆன்மா இயங்குவதில்லை; கர்மத்தின் வசம் தன்னை இழப்பதில்லை. ஐம்புலன்கள், மனம், புத்தி, அகங்காரம், சுவாசம் எல்லாமே அந்த அரசனின் மந்திரிகள், பிரதானிகள் ஆவார்கள். இவர்கள்தான் இயங்குகிறார்கள்; உணர்ச்சி வசப்படுகிறார்கள், பலனை எதிர்நோக்குகிறார்கள்.

இந்தச் செயல்கள் எல்லாம் பிராரப்த கர்மம் முடியும்வரை நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கும். இதே ஊரைத் தன் உடலாகக் கொண்ட ஒரு யோகி, ஆன்மாவாகவே திகழ்கிறான். அதாவது எந்தச் செயலிலும் அவன் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதேயில்லை! அதாவது அவன் எந்த உணர்வுக்கும் இரையாவதில்லை, எந்த எதிர்பார்த்தலுக்கும் அடிமையாவதில்லை.

அவன் எல்லாமே பரந்தாமன் செயல் என்று ‘தன்’னை ஒதுக்கிக் கொண்டு விடுகிறான். அங்கே அவன் இல்லை. அவன் நித்திய கர்மம், நைமித்திக கர்மம் என்று எதை மேற்கொண்டாலும் தன்னை அவன் அவற்றில் அடையாளம் காண்பதில்லை. எல்லாம் ஈசன் செயல் என்ற பூரணத்துவத்தை அவன் பெற்று விடுகிறான்.

கடலிலோ, ஆற்றிலோ, குளத்திலோ மீன்கள் வாழ்கின்றன. ஆனால், அவற்றுக்குத் தாம் வசிப்பது ஏதேனும் நீர்நிலை என்ற உண்மை தெரிவதில்லை. காரணம், அதன் சிருஷ்டி அப்படி. நீரில்தான் வாழ்ந்தாக வேண்டும் என்ற வாழ்க்கை நியதி. அதை எடுத்துக் கரையில் போட்டால், அது துடிக்கிறதே தவிர, தான் நீர்நிலையில் இப்போது இல்லை என்ற எண்ணம் அதற்கு ஏற்படுவதில்லை.

ஏனென்றால், தான் நீந்தவும், இனப்பெருக்கம் செய்யவும், உணவு உட்கொள்ளவும் எல்லாவற்றிற்கும் அந்த நீர்நிலைதான் ஆதாரமாக இருந்தது என்பதை ஒரு யோகியின் மனோநிலையில் அது உணராமலேயே இருக்கிறது. வெளியே கரையில் போடப்பட்டால் அங்கே தண்ணீர் இல்லை, துடிக்க வேண்டியிருக்கிறது, இறக்கவும் நேரிடுகிறது. மீண்டும் தண்ணீரை நாடிப் போக அதற்குத் தெரிவதில்லை, முடிவதில்லை. காரணம், அந்த அளவுக்கு அது, தான் வசித்து வந்த நீர்நிலையையே உணராதிருந்ததுதான்.

ஏனென்றால், எப்போதும் உடனேயே இருப்பது காட்சி வசப்படுவதில்லை – கூடவே இருக்கும் ஒருவரின் அருமையை நாம் உணர்ந்து கொள்ளாததுபோல. யோகியும் அப்படித்தான். அவன் உயிர் நீக்கும் காலம்வரை எதனுடனும் ஒட்டாமல் இருந்துவிட்டு, அந்த உணர்வுடனேயே இறப்பையும் ஏற்றுக் கொள்கிறான். அவனுக்குத் தெரியும், அவன் பரமாத்மாவில்தான் பிறக்கிறான், பரமாத்மாவில்தான் வாழ்கிறான், பரமாத்மாவால் செயல்களில் ஈடுபடுகிறான்.

‘இறைவன் எங்கே இருக்கிறார், காட்டு,’ என்று வெகு சுலபமாக ஒரு அஞ்ஞானியால் கேட்டுவிட முடியும். ஆனால் அவன் திருப்தியுறும் அளவுக்கு அவனுக்கு பதில்தான் கிடைக்காது – சமுத்திர மீன் மாதிரி. அங்கிங் கெனாதபடி எங்கும் வியாபித்திருக்கும் இறைவனை எப்படி, எதன் மூலம் அடையாளம் காட்டுவது? ‘எங்கும் நிறைந்தவனே இறைவன்’ என்று சொல்லப்படும் பதிலால் அஞ்ஞானி சமாதானமடைவானா?

விவேகானந்தர் ஒரு முறை, மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் பேசச் சென்றார். எங்கும் இருப்பது போலவே அங்கும் குதர்க்கவாதிகள் இருந்தார்கள். அவர்கள் சுவாமி விவேகானந்தரை மனதால் காயப்படுத்த விரும்பினார்கள். ஆகவே அவர் வரும் வழியில், அவருடைய பார்வை படும்படியாக ‘GOD IS NOWHERE’ என்று எழுதி வைத்தார்கள். அவருடைய எதிர்வினை எப்படி இருக்கும் என்று ஆவலுடன், மறைந்திருந்து பார்த்தார்கள். சுவாமி அதைப் படிக்கத்தான் செய்தார். மெல்லப் புன்னகைத்தார், பக்கத்திலிருந்தவரிடம் ஒரு சாக்கட்டி எடுத்துவரச் சொன்னார். எழுதியிருந்த இடத்துக்குப் போய் அந்த சாக்கட்டியால் NOWக்கு அடுத்து ஒரு கோடு போட்டார். இப்போது GOD IS NOW HERE என்றாகிவிட்டது.

அவரை மடக்க நினைத்தவர்கள் மடங்கிப் போனார்கள். இறைவன் இங்கும் இருக்கிறார், எங்கும் இருக்கிறார், எப்போதும் இருக்கிறார் என்று அவர் அந்த குதர்க்கவாதிகளுக்கு மறைமுகமாக உணர்த்தினார். இறைவன் என்றாலே எங்கும் நிறைந்தவன் என்றுதான் பொருள். இன்னதுதான் என்று சுட்டிக் காட்டப்பட முடியாத ஒன்று, அவன்.அதனால்தான் இறைவனுக்குப் பல உருவங்கள் அல்லது மத குருமார்கள் என்று மேலான வழிபாடுகள் தோன்றின.

நம் கற்பனைக்கேற்ப ஒரு உருவத்தை வடிவமைத்துக் கொண்டு அதையே கடவுளாக பாவித்து வழிபடுகிறான் அஞ்ஞானி. கடவுள் இருப்பைப் பற்றி விவாதிக்க விரும்பாதவர்கள், அந்த சக்தியை அரூபமாகக் கருதுவதோடு, இறைத் தூதர்களாக தாம் பாவிப்பவர்களை வழிபடுகிறார்கள். இறைத் தூதர்கள் இறைவனின் நேரடிப் பிரதிநிதிகள் என்று அவர்கள் கருதுகிறார்கள். ஆகவே இவர்களை வழிபடுவதன் மூலம் இறைவனை வழிபடுவதாக நிறைவும் அடைகிறார்கள்.

வழிபாட்டின் மூலம்தான் இறைவனை உணர வேண்டும் என்பதில்லை; அந்தக்கரணம் சுத்தமாகி விட்டாலே போதும். இறைவனை உணர்ந்துவிட முடியும். அதாவது இன்று இருப்பது நாளை இல்லாமல் போய் விடுவதும், அல்லது உருமாற்றம் அடைவதுமான இலக்கணத்திற்கு உட்படாதவன் இறைவன். அவன் எங்கும் நிறைந்திருக்கிறான், எந்த வடிவிலும் தோன்றுகிறான், மனிதர்களுக்கு நிறைய அனுபவங்கள் தந்து தன் இருப்பை உணர்த்துகிறான். நாம் உள்ளே எதுவாக இருக்கிறோமோ, அதையே வெளியிலும் பார்க்கிறோம். தோன்றுவதெல்லாம் நம் மன பாதிப்புகளாகவே அமைந்து விடுகின்றன.

தருமன், துரியோதனனின் இயல்பு குணங்களை வெளிக்காட்ட பீஷ்மர் ஒரு சோதனை வைத்தார். அவர் தருமரிடம், ‘‘நீ இந்த நாட்டைச் சுற்றி வா, அயோக்கியன் ஒருவனைக் கண்டுபிடித்து அவனை இங்கே அழைத்து வா,’’ என்றார். தருமன் உடனே புறப்பட்டுச் சென்றான். இரண்டு, மூன்று நாட்கள் கழித்து வந்த அவன், ‘‘மன்னித்துக் கொள்ளுங்கள் பிதாமகரே, என்னால் ஒரு அயோக்கியனைக்கூட கண்டு பிடிக்க முடியவில்லை. எல்லோரும் நல்லவர்களாகவே இருக்கிறார்கள்,’’ என்று சொன்னான்.

மெல்ல நகைத்த பீஷ்மர், துரியோதனனிடம், ‘‘நம் நாட்டில் இருக்கக் கூடிய ஒரு நல்லவரை நம் சபைக்கு அழைத்து வா,’’ என்று சொல்லி அனுப்பினார். போன சுருக்கிலேயே திரும்பி வந்த துரியோதனன், ‘‘ஒரு நல்லவன்கூட இல்லை, எல்லோருமே அயோக்கியர்கள், அக்கிரமக்காரர்கள்,’’ என்று ஏகத்துக்குப் புலம்பினான். பீஷ்மர் மென்மையாகச் சொன்னார்: ‘‘அவரவர் மனநிலைப்படிதான் எதிர்ப்படுபவர் அமைவார். நம் குணாதிசய நோக்கிலேயே யாரைப் பார்த்தாலும் அவர் நம்மைப் போலத்தான் தோன்றுவார்.

தருமன் பல நாட்கள் தேடியலைந்தான். எங்குமே ஒரு அயோக்கியன் கூடக் கிடைக்கவில்லை, ஆனால் நான் சொல்லிவிட்டேனே என்று, என் ஆணைக்கு அடிபணிந்து எப்படியாவது ஒரு அயோக்கியனையாவது கண்டு பிடித்துவிட வேண்டும் என்று சில நாட்கள் செலவழித்தான். ஏமாற்றத்துடன் திரும்பி வந்தான். ஆனால், துரியோதனனோ போன சுருக்கிலேயே திரும்பி விட்டான். ஏனென்றால் இவன் கண்ணில் ஒரு நல்லவன்கூடப் படவில்லை. எல்லோருமே தீயவர்களாகவே அவனுக்குத் தெரிந்தார்கள்.

அதுமட்டுமல்ல, நான் கேட்டேனே என்பதற்காகவும் கூடுதல் முயற்சியை அவன் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை. போதும், இந்த முயற்சியிலேயே கிடைக்காத நல்லவனா எத்தனை நாள் தேடினாலும் கிடைக்கப் போகிறான், என்று தனக்குள்ளேயே ஒரு சமாதானத்தை உருவாக்கிக் கொண்டு, உடனேயே திரும்பி வந்து ‘நல்லவனே இந்த நாட்டில் இல்லை’ என்று
எளிதாகச் சொல்லிவிட்டான்.

துக்கம் குறைவதற்காக மதுபானம் அருந்துவது என்ற மடத்தனமான தத்துவமும், பழக்கமும் நம் நாட்டில் நிலவி வருகிறது. உண்மையில் மது அருந்துவதால், ஒருவனுடைய அடிமனதில் இருக்கும் துக்கம் பிரவாகமாகப் பொத்துக் கொண்டு வருகிறது. அவனால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை. அதனாலேயே அவனுடைய சந்தேகமும் பெருகி விடுகிறது. இந்தப் புதுப்புது சந்தேகங்கள் அவனுக்குப் புதுப்புது துக்கத்தை வளர்த்து விடுகின்றன. இந்த துக்கங்கள் அவனை மேலும் மேலும் குடிக்க வைக்கின்றன. அதாவது துக்கம் வளர வளர, சந்தேகமும் வளருகிறது, சந்தேகம் வளர, வளர, மது அருந்துதலும் நீடிக்கிறது, அதிகமும் ஆகிறது.

ஆகவே, இன்புற்றிருப்பது, ஆனந்தம் கொள்வது எல்லாமே பரந்தாமனை உணர்வதில்தான் இருக்கிறது. சுகித்திருப்பது வேறு, ஆனந்தமாக இருப்பது வேறு. சுகம் வெளிப்புற சக்திகளிலிருந்து நமக்குக் கிடைப்பது; ஆனால், ஆனந்தம் என்பது நாமே நமக்குள்ளேயே உணர்வது. அதாவது இறைவனை உணர்வதே ஆனந்தம். சுகமாக இருக்க பிறர் அல்லது பிற பொருட்களின் சம்பந்தம் தேவைப்படுகிறது; ஆனால், ஆனந்தத்தைத் தனிமையிலேயே நம்மால் அடைய முடியும். இதற்கு மூலகாரணம், இறைவன் எங்கும் நிறைந்திருக்கிறான் என்ற புரிதல்தான்.

(கீதை இசைக்கும்)

பிரபு சங்கர்

You may also like

Leave a Comment

twenty − three =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi