Tuesday, April 23, 2024
Home » சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்: 3ம் இடத்தில் சென்னை மாநில கல்லூரி

சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலில் சென்னை ஐஐடி முதலிடம்: 3ம் இடத்தில் சென்னை மாநில கல்லூரி

by Karthik Yash

சென்னை: சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான தேசிய தரவரிசை பட்டியலில், சிறந்த கல்வி நிறுவனங்களுக்கான பட்டியலில் முதல் இடத்தை சென்னை ஐ.ஐ.டி.,யும், கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 3-வது இடத்தை சென்னை மாநில கல்லூரியும் மீண்டும் தக்க வைத்துள்ளன. ஒன்றிய அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் மனித வள மேம்பாட்டு துறையின் கீழ் தேசிய நிறுவன தரவரிசை கட்டமைப்பு (என்.ஐ.ஆர்.எப்.) தொடங்கப்பட்டது. இந்த கட்டமைப்பானது நாடு முழுவதும் உள்ள கல்வி நிறுவனங்களின் கற்றல், கற்பித்தல், வளங்கள், ஆராய்ச்சி, தொழில் முறை நடைமுறைகள், பட்டப்படிப்பு முடிவுகள், உணர்வுகள் ஆகியவற்றை உள்ளடக்கி தரவரிசை பட்டியலை ஒவ்வொரு ஆண்டும் வெளியிட்டு வருகிறது.

மேலும், பல்கலைக்கழகம், கல்லூரி, ஆராய்ச்சி நிறுவனம், இன்ஜினியரிங், மேலாண்மை, பார்மசி, மருத்துவம், பல் மருத்துவம், சட்டம், கட்டிடம் என பல்வேறு பிரிவுகளில் சிறந்த நிறுவனங்களின் தரவரிசையை வெளியிடுகிறது. இந்நிலையில், ‘என்.ஐ.ஆர்.எப்-2023’ தரவரிசை பட்டியலை மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகம் நேற்று வெளியிட்டு இருக்கிறது. அதன்படி, ஒட்டுமொத்த தரவரிசையில் இடம்பெற்றுள்ள 100 கல்வி நிறுவனங்களில், சென்னை ஐ.ஐ.டி. முதல் இடத்தை பெற்று இருக்கிறது. 2-வது இடத்தில் பெங்களூருவில் உள்ள இந்திய அறிவியல் நிறுவனமும், 3-வது இடத்தில் டெல்லி ஐ.ஐ.டி.யும் உள்ளது.

இந்த தரவரிசையில் தமிழ்நாட்டில் உள்ள கோவை அம்ரிதா விஷ்வா வித்யபீடம் 15-வது இடத்திலும், வேலூர் தொழில்நுட்ப நிறுவனம்(வி.ஐ.டி.) 17-வது இடத்திலும், சென்னை அண்ணா பல்கலைக் கழகம் 18-வது இடத்திலும், திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 21-வது இடத்திலும், சென்னை எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில் நுட்ப நிறுவனம் 32-வது இடத்திலும், கோவை பாரதியார் பல்கலைக்கழகம் 36-வது இடத்திலும் இருக்கிறது. இந்த ஒட்டுமொத்த தரவரிசையில் சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 5-வது முறையாக ஒட்டு மொத்த தரவரிசையில் முதல் இடத்தை தக்க வைத்துள்ளது. 2018-ம் ஆண்டு 2-வது இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

* பல்கலை கழகம்
பல்கலைக்கழக பட்டியலை பொறுத்தவரையில், 100 பல்கலைக்கழக பட்டியலில் பெங்களூரு இந்திய அறிவியல் நிறுவனம் முதல் இடத்தை மீண்டும் தக்க வைத்துள்ளது. அந்த வரிசையில் தமிழ்நாட்டை சேர்ந்த அம்ரிதா விஷ்வா வித்யபீடம் 7-வது இடத்திலும், வி.ஐ.டி. 8வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 17வது இடத்திலும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 18-வது இடத்திலும் உள்ளது.

* கல்லூரிகள்
கல்லூரிகளின் தரவரிசையில் டெல்லி மிராண்டா ஹவுஸ் நிறுவனம், டெல்லி இந்து கல்லூரி, சென்னை மாநிலக் கல்லூரி ஆகியவை முதல் 3 இடங்களை மீண்டும் தக்க வைத்துள்ளன. சென்னை லயோலா கல்லூரி 7-வது இடத்திலும் இடம் பெற்றுள்ளன.

* ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் இன்ஜினியரிங்
ஆராய்ச்சி நிறுவன தரவரிசையில் தமிழ்நாட்டில் உள்ள சென்னை ஐ.ஐ.டி. 2-வது இடத்தையும், வி.ஐ.டி. 11-வது இடத்தையும், அண்ணா பல்கலைக்கழகம் 13-வது இடத்தையும் பெற்றுள்ளது. இன்ஜினியரிங் பட்டியலில், 100 கல்வி நிறுவனங்களில் முதல் இடத்தை சென்னை ஐ.ஐ.டி. தொடர்ந்து 8-வது முறையாக தக்க வைத்துள்ளது. இதில் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 9-வது இடத்திலும், வி.ஐ.டி. 11-வது இடத்திலும், அண்ணா பல்கலைக்கழகம் 13-வது இடத்திலும் உள்ளது.

* மருத்துவம் மற்றும் சட்டம்
மேலாண்மை பிரிவில் சென்னை ஐ.ஐ.டி. 2-வது இடத்திலும், பார்மசி பிரிவில் ஊட்டி ஜே.எஸ்.எஸ். பார்மசி கல்லூரி 4-வது இடத்திலும், கோவை அம்ரித விஸ்வ வித்யாபீடம் 10-வது இடத்திலும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 15-வது இடத்திலும், அண்ணாமலை பல்கலைக்கழகம் 26-வது இடத்திலும், பல் மருத்துவம் பிரிவில் சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 1-வது இடத்திலும், எஸ்.ஆர்.எம். பல் மருத்துவ கல்லூரி 6-வது இடத்திலும், சட்டப் பிரிவில் சவீதா மருத்துவம் மற்றும் தொழில்நுட்ப அறிவியல் நிறுவனம் 11-வது இடத்திலும், தஞ்சாவூர் சண்முகா கலை அறிவியல் தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி கல்வி 15-வது இடத்திலும், கட்டிடப்பிரிவில் திருச்சி தேசிய தொழில்நுட்ப நிறுவனம் 4-வது இடத்திலும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 14-வது இடத்திலும் தமிழ்நாட்டை சேர்ந்த கல்வி நிறுவனங்கள் இடம் பெற்றுள்ளன. மருத்துவம் சார்ந்த தரவரிசையில், வேலூர் கிறிஸ்தவ கல்லூரி 3-வது இடத்தையும், அம்ரிதா விஷ்வா வித்யபீடம் 6-வது இடத்தையும், சென்னை மருத்துவக் கல்லூரி 11-வது இடத்தையும், எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் 20-வது இடத்தையும், ஸ்ரீ ராமச்சந்திரா உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் 21-வது இடத்தையும், கடந்த ஆண்டு 12-வது இடத்தில் இருந்த சென்னை மருத்துவக் கல்லூரி கடந்த தற்போது 11-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

You may also like

Leave a Comment

five × four =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi