சென்னை: பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய ஆண்டு திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. லட்சக்கணக்கான மக்கள் திரண்டு நிகழ்ச்சியில் பங்கேற்றனர். ஒவ்வொரு ஆண்டும் நாகை அன்னை வேளாங்கண்ணி மாதாவுக்கு செப்டம்பர் 8ம் தேதி திருவிழா நடத்தப்படும். அதன்படி, இந்த ஆண்டு திருவிழாவின் தொடக்க விழா நேற்று மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் பங்கேற்றனர்.
இதேபோல் சென்னை பெசன்ட் நகர் வேளாங்கண்ணி தேவாலயத்தில் நேற்று சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமை தாங்கி கொடி ஏற்றி வைத்தார். விழாவில் அன்னை வேளாங்கண்ணி ஆலயத் தின் பங்கு தந்தை அருளப்பா, சந்தோம் பேரலாயம் அருட்தந்ைத வின்சென்ட் சின்னத்துரை உட்பட பலர் கலந்து கொண்டனர். மாலை 5 மணி அளவில் நடந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் லட்சக்கணக்கான மக்கள் கலந்துகொண்டனர். 10 நாட்கள் நடைபெறும் திருவிழா நிகழ்ச்சியில் தினமும் சிறப்பு பிராத்தனைகள், சிறப்பு ஆராதனைகள், திருப்பலி நடைபெறும்.
திருவிழாவையொட்டி குறிப்பிட்ட நாட்களுக்கு சென்னை பெசன்ட் நகர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்து சென்னை போக்குவரத்து காவல்துறை அறிவித்துள்ளது. நேற்று கொடியேற்றம் முடிந்தவுடன் நற்கருணை தேர் ஊர்வலம் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு, 6வது அவென்யூ பீச் ரோடு, 3வது மெயின் ரோடு, 2வது அவென்யூ, 7வது அவென்யூ வழியாக மீண்டும் தேவாலயத்தை அடைந்தது.
திருவிழாவை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தேவாலயத்திற்கும் நற்கருணை தேர் ஊர்வலத்திற்கும் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இதேபோன்ற நற்கருணை ஊர்வலம் செப்டம்பர் 1ம் தேதி அன்று மாலை 5.30 மணிக்கும், 7ம் தேதி அன்று மாலை 5.30 மணிக்கும் நடைபெறும். அங்கிருந்து பெரிய தேர் தேவாலயத்தில் இருந்து புறப்பட்டு 6வது அவென்யூ பீச் ரோடு, 4வது மெயின் ரோடு, 2வது அவென்யூ, 3வது அவென்யூ, 7வது அவென்யூ வழியாக மீண்டும் தேவாலயத்திற்கு திரும்பும். பெசன்ட் நகர் வேளாங்கண்ணி ஆலய திருவிழாவிற்கு சென்னை மட்டும் அல்லாமல் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், விழுப்புபுரம், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கான மக்கள் நடைபயணமாக வந்தனர்.
அவர்களுக்கு வழியில் பல இடங்களில் அன்னதானம், குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. கிறிஸ்தவர்கள் என்றில்லாமல் அனைத்து மதத்தினரும் பல்வேறு வேண்டுதல்களோடு பெசன்ட் நகர் தேவாலயத்திற்கு வருகிறார்கள். விழாவையொட்டி சிறப்பு பேருந்துகள் சென்னையில் பல்வேறு இடங்களில் இருந்து இயக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
* கூடுதல் பேருந்துகள் மாநகர போக்குவரத்துக் கழகம் வெளியிட்ட டிவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் திருவிழா கொடியேற்றத்துடன் நேற்று மாலை தொடங்கியது, செப்.8ம் தேதியுடன் விழா நிறைவடைகிறது. இதையொட்டி, மாநகர போக்குவரத்துக் கழகம் சார்பில் பயணிகளின் வசதிக்காக சென்னையின் பல்வேறு இடங்களிலிருந்து அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்துக்கு, செப்டம்பர் 8ம் தேதி வரை கூடுதல் பேருந்துகள் மாலை 4 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரை இயக்கப்பட உள்ளது. இந்நாட்களில் முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகள் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.