சென்னை: பெசன்ட் நகரில் அமைந்துள்ள அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 52வது ஆண்டு திருவிழா, நாளை மறுநாள் கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் 8ம் தேதி வரை நடைபெறுகிறது. விழா தொடர்பான பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று திருத்தல வளாகத்தில் நடைபெற்றது. இதில் திருத்தலத்தின் அருட்தந்தை அருளப்பா நிருபர்களிடம் கூறியதாவது: பெசன்ட் நகர் அன்னை வேளாங்கண்ணி திருத்தலத்தின் 52வது ஆண்டு திருவிழா நாளை மறுநாள் (29ம் தேதி) மாலை 5.45 மணிக்கு தொடங்குகிறது.
இதையொட்டி, அன்னையின் திருவுருவம் தாங்கிய 12 அடி நீளம் உள்ள திருக்கொடி பவனியாக கொண்டு வரப்பட்டு, திருத்தல வளாகத்தில் அமைந்துள்ள 75 அடி உயர கொடிக் கம்பத்தில், சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமியால் ஏற்றி வைக்கப்பட உள்ளது. ஒவ்வொரு ஆண்டுக்கான மையக்கருத்தின் அடிப்படையில் இந்த ஆண்டு இறைவேண்டல் ஆண்டாகவும், யூபிலி ஆண்டின் நிறைவாகவும் கொண்டாடப்படுகிறது.
கொடிவிழாவில் தொடங்கி நலம் பெறும் விழா, பக்த சபைகள் விழா, நற்கருணை பெருவிழா, தேவ அழைத்தல் விழா, உழைப்பாளர்கள் விழா, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விழா, ஆசிரியர்கள் விழா, குடும்ப விழா, அன்னையின் பிறப்பு பெருவிழா என ஒவ்வொரு நாளும் சிறப்பு திருப்பலிகளும், ஜெப வழிபாடுகளும் காலையிலிருந்து மாலை வரை தொடர்ந்து நடைபெறும். சிறப்பு நாட்களில் திருப்பலி மற்றும் தேர் பவனியும் நடைபெறும்.
செப்டம்பர் 7ம் தேதி மாலை 5.30 மணிக்கு சென்னை மயிலை உயர் மறை மாவட்ட பேராயர் ஜார்ஜ் அந்தோணிசாமி தலைமையில் பல்வேறு உயர்மறை மாவட்ட குழுக்களோடு இணைந்து கூட்டுத் திருப்பலியும், அதனை தொடர்ந்து ஆரோக்கிய அன்னையின் ஆடம்பரத் தேர் பவனியும் நடைபெறும். செப்டம்பர் 8ம் தேதி அன்னையின் பிறந்த நாளும், திருத்தலத்தின் 53ம் ஆண்டு விழா தொடக்கமும் கொண்டாடப்படும். அன்று அதிகாலை 2 மணி முதல் 5 மணி வரை தொடர்ந்து திருப்பலிகள் நடைபெறும்.
காலை 7.45 மணிக்கு ஆங்கில திருப்பலியும், அதனை தொடர்ந்து 9.30 மணிக்கு தமிழ் திருப்பலியும், அன்னைக்கு முடிசூட்டு விழாவும் நடைபெறும். தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு திருப்பலியை தொடர்ந்து கொடி இறக்கம் நடைபெறும். இவ்விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பதை ஒட்டி சென்னை காவல்துறை மற்றும் மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து பொதுமக்கள் வருகை தர இருப்பதால், மாநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதேபோல், திருவிழாவுக்கு வருபவர்களின் வாகனங்களை நிறுத்த பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இவ்விழாவில் 400க்கும் மேற்பட்ட தன்னார்வலர்கள், தொண்டர்கள், பொதுமக்கள் என அனைவரும் இணைந்து சிறப்பான ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். இவ்வாறு அவர் தெரிவித்தார். இச்சந்திப்பின்போது, அருட்தந்தைகள் பிரான்சிஸ் சேவியர், சீமன், மைக்கேல் ஆகியோர் உடன் இருந்தனர்.