பெர்லின்: பெர்லின் டென்னிஸ் ஓபன் போட்டியில் செக் வீராங்கனை மார்கெடா வோன்ட்ரசோவா அபார வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். ஜெர்மனின் பெர்லின் நகரில், பெர்லின் டென்னிஸ் ஓபன் மகளிர் போட்டிகள் நடந்து வருகின்றன. இப்போட்டிகளின் தொடர்ச்சியாக, அரை இறுதியில் பெலாரசை சேர்ந்த உலகின் 1ம் நிலை வீராங்கனை அரீனா சபலென்காவை வீழ்த்திய செக் வீராங்கனை வோன்ட்ரசோவா, ரஷ்ய வீராங்கனை சாம்சனோவாவை வீழ்த்திய சீன வீராங்கனை வாங் ஸிங்யு ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றனர்.
இவர்கள் இடையிலான இறுதிப் போட்டி நேற்று நடந்தது. இப்போட்டியின் முதல் செட்டில் இருவரும் விட்டுக் கொடுக்காமல் ஆக்ரோஷமாக மோதினர். இருவரும் சம புள்ளிகள் எடுத்ததால், டை பிரேக்கர் வரை சென்றது. கடைசியில், 7-6 (12-10) என்ற புள்ளிக் கணக்கில் அந்த செட்டை வோன்ட்ரசோவா கைப்பற்றினார். 2வது செட், 6-4 என்ற கணக்கில் வாங் வசம் வந்தது. கடைசியில், வெற்றியை தீர்மானிக்கும் 3வது செட்டை, 6-2 என்ற கணக்கில், வோன்ட்ரசோவா தனதாக்கினார். அதனால், 2-1 என்ற செட் கணக்கில் வென்ற வோன்ட்ரசோவா சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார்.