Wednesday, February 21, 2024
Home » ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு; அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு; அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல்

by Mahaprabhu

சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி: சிறந்த நடிகரும், அர்ப்பணிப்புள்ள தலைவர், சிறந்த மனிதநேயவாதியான விஜயகாந்த் மறைவு ஆழ்ந்த வேதனை அளிக்கிறது. சினிமா, அரசியல், சமூக சேவை ஆகியவற்றில் அவர் ஆற்றிய சிறப்பான பங்களிப்பு என்றும் நினைவுகூறப்படும்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்: தமிழ்த்திரையுலகின் தவிர்க்கவியலா நாயகராக திகழ்ந்தவர்,கலைஞர் மீது அவருக்கும், அவர் மீது கலைஞருக்கும் இருந்த பேரன்பை வார்த்தைகளால் சொல்லிவிட முடியாது. முதல்வரின் அன்புக்குரிய நண்பர். நடிகர் சங்கத் தலைவராகவும்-எதிர்க்கட்சி தலைவராகவும் திறம்பட செயல்பட்ட கேப்டனின் இழப்பு, தமிழ்த்திரையுலகிற்கும், அரசியல் உலகிற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பு.

ஜார்கண்ட் கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன்: எனது அன்பு நண்பர், மனிதநேயமிக்க சிறந்த மனிதர், சிறந்த கலைஞர், ஏழை எளிய மக்களின் நலனுக்காக தன்னை அர்ப்பணித்தவர், கேப்டன் விஜயகாந்த் காலமான செய்தி கேட்டு மிகுந்த மன வேதனைஅடைந்தேன்.

தெலங்கானா, புதுச்சேரி கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன்: விஜயகாந்த் நல்ல திரைப்படக்கலைஞர். நல்ல அரசியல் தலைவர். நல்ல மனிதர். நல்ல சகோதரர். ஒட்டுமொத்தமாக ஒரு நல்லவரை நாம் இழந்து இருக்கிறோம்.

புதுவை முதல்வர் ரங்கசாமி: திரைப்படங்கள் மூலம், புரட்சிகரமான கருத்துக்களையும் நாட்டுப் பற்றையும் மக்களிடையே கொண்டு சேர்த்தவர் விஜயகாந்த்.

ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்: பொதுவாழ்விலும், கலைத்துறையிலும் செயற்கரிய பல செயல்கள் செய்துள்ளவர், தமிழக மக்கள் அனைவராலும் அன்போடு கேப்டன் என்று அழைக்கப்பட்டவர்.

எடப்பாடி கே.பழனிசாமி(அதிமுக பொதுச்செயலாளர்): போற்றுதலுக்குரிய பண்பாளர் விஜயகாந்த்தை இழந்து மிகுந்த துயரத்தில் வாடும் அவரது மனைவியும், தேமுதிக பொதுச் செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த் மற்றும் இவர்களுடைய மகன்களுக்கும், தேமுதிகவினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.

ஓ.பன்னீர் செல்வம்(முன்னாள் முதல்வர்): திரையுலகிலும், அரசியலிலும் தனக்கென தனி முத்திரையைப் பதித்தவர் விஜயகாந்த். அவருடன் அரசியல் ரீதியாக நெருங்கிப் பழகிய அனுபவம் எனக்கு உண்டு. இவருடைய இடத்தை இனி யாராலும் நிரப்ப முடியாது.

கே.எஸ்.அழகிரி(காங்கிரஸ் தலைவர்): விஜயகாந்த். ஏழை,எளிய மக்கள் மீது அன்பும், பரிவும் கொண்டவர். பழகுவதற்கு இனிமையானவர், பண்பாளர்.

வைகோ(மதிமுக பொது செயலாளர்): தேமுதிக கட்சியைத் தொடங்கி அதனை தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சியாக வளர்த்து எடுத்தார். விஜயகாந்த் மறைவு தமிழ்நாட்டின் பொதுவாழ்விற்கு ஈடுசெய்ய முடியாத பேரிழப்பு.

அண்ணாமலை(பாஜ தலைவர்): கேப்டன் விஜயகாந்த் மறைவு, தமிழகத்திற்கும், தமிழ் மக்களுக்கும் பேரிழப்பு. அவரது புகழ் என்றும் அவர் பெயரை நிலைத்திருக்கச் செய்யும்.

திருமாவளவன்(விசிக தலைவர்): தனிப்பட்டமுறையில் என்மீதும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மீதும் தனது நல்லன்பைச் செலுத்தியவர். அவருக்கு எமது வீரவணக்கத்தைச் செலுத்துகிறோம்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன், மார்க்சிஸ்்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதுவை மாநில எதிர்க்கட்சி தலைவர் சிவா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், பாமக தலைவர் அன்புமணி, பொன்குமார்(விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சி தலைவர்), திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, மமக தலைவர் ஜவாஹிருல்லா எம்எல்ஏ, சமக தலைவர் சரத்குமார், முன்னாள் காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர், எஸ்டிபிஐ.கட்சி தலைவர் நெல்லை முபாரக், புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், அமமுக பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், வி.கே.சசிகலா, தமிழ்நாடு-புதுச்சேரி பார் கவுன்சில் தலைவர் பி.எஸ்.அமல்ராஜ், இந்திய ஹஜ் அசோசியேசன் தலைவர் பிரசிடெண்ட் அபூபக்கர், தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா, தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், சமத்துவ மக்கள் கழகம் தலைவர் எர்ணாவூர் நாராயணன், ஐஜேக தலைவர் பாரிவேந்தர் உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

You may also like

Leave a Comment

2 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2023 – Designed and Developed by Sortd.Mobi