பெங்களூரு: ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் இணைக்கப்பட்டுள்ள சொத்துக்களை ஏலம் விடும் பணியை நிறுத்தி வைக்க கோரிய தீபாவின் மனுவை தள்ளுபடி செய்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. ஜெயலலிதா சொத்துக்குவிப்பு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்டுள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை ஏலம் விட அனைத்து சொத்து பட்டியலை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி எச்.ஏ.மோகன் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில் கடந்த வாரம் வழக்கு விசாரணைக்கு வந்த போது ஏலம் விடப்பட வேண்டிய ஒட்டுமொத்த 65 சொத்துக்களின் பட்டியலை லஞ்ச ஒழிப்பு போலீசார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கு நேற்று நீதிபதி மோகன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது, நீதிபதி இந்த ஒட்டுமொத்த சொத்துக்களின் தற்போதைய மதிப்பீடு குறித்து லஞ்ச ஒழிப்பு போலீசார் அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு பிறப்பித்தார். இதற்காக 35 நாட்கள் கால அவகாசம் வழங்கி வழக்கை அக்டோபர் 6ம் தேதிக்கு ஒத்தி வைத்தார். இந்நிலையில், ஜெயலலிதா இறந்த காரணத்தினால் உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி அவர் விடுவிக்கப்பட்டுள்ளார். ஆகையால் அவரது சொத்துக்களை ஏலம் விடாமல் தங்களுக்கு வழங்க வேண்டும் என்று சிறப்பு நீதிமன்றத்தில் தீபா ஏற்கனவே மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. அவர் ஜெயலலிதா இறந்த காரணத்தினால் வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டாரே தவிர அவர் மீது விதிக்கப்பட்டிருந்த அபராதத்தை நீக்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்கவில்லை . அவரது சொத்துக்களை விற்று அந்த பணத்தை எடுத்துக்கொள்ள உச்சநீதிமன்றம் தெளிவாக உத்தரவு பிறப்பித்துள்ளது என குறிப்பிட்டார். தீபாவின் மனுவை சிறப்பு நீதிமன்றம் தள்ளுபடி செய்திருந்த நிலையில் இதை எதிர்த்து தாங்கள் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதால் சொத்துக்களை ஏலம் விடும் நடவடிக்கைகளை சிறப்பு நீதிமன்றம் நிறுத்தி வைக்க வேண்டும் என்று நேற்று வழக்கு விசாரணைக்கு வந்த போது தீபா தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அப்போது நீதிபதி தாங்கள் உயர்நீதிமன்றத்தில் தடை பெற்று வந்திருந்தால் தங்கள் கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொள்ள முடியும். தடை இல்லாத காரணத்தினால் இதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறி மனுவை தள்ளுபடி செய்தார்.