குன்றத்தூர்: பெங்களூருவில் இருந்து குன்றத்தூருக்கு காரில் ரூ.30 லட்சம் மதிப்புள்ள பிரவுன் சுகர், கஞ்சா பொருட்களை கடத்தி வந்த 2 வாலிபர்களை, போலீசார் செய்தனர். பெங்களூருவில் இருந்து காரில் பிரவுன் சுகர் மற்றும் கஞ்சா கடத்தி வருவதாக நேற்று தாம்பரம் மதுவிலக்கு ஆய்வாளர் ஸ்ரீதேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் விரைந்து சென்ற போலீசார் வண்டலூர்- மீஞ்சூர் வெளிவட்ட சாலையில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, குன்றத்தூர் அருகே சந்தேகத்திற்கிடமாக வந்த கார் ஒன்றை போலீசார் வழிமறித்து விசாரித்த போது, காரில் இருந்தவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர்.
இதனால், காரை சோதனை செய்தபோது, அதில் 200 கிராம் பிரவுன் சுகர் மற்றும் 5 கிலோ கஞ்சா போன்ற போதைப்பொருட்கள் இருப்பது தெரிந்தது. இதையடுத்து, காரை ஓட்டி வந்த 2 பேரை, போலீசார் கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், சிவகங்கை மாவட்டம், கோட்டையூர் கிராமத்தை சேர்ந்த சக்திவேல் (34), மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த சபீனா காடூன் (30) என்பதும், இவர்கள் பெங்களூருவில் இருந்து தடை செய்யப்பட்ட பிரவுன் சுகர் மற்றும் கஞ்சாவை கடத்தி வந்து, அதனை சென்னை புறநகர் பகுதிகளில் அதிக விலைக்கு விற்பனை செய்ய வந்ததும் தெரியவந்தது.
மேலும், அவர்களிடமிருந்து ஒரு கார், 200 கிராம் பிரவுன் சுகர் மற்றும் 5 கிலோ கஞ்சா ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இவ்வாறு, பறிமுதல் செய்யப்பட்ட 200 கிராம் பிரவுன் சுகரின் சர்வதேச மதிப்பு ரூ.30 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது. இதனையடுத்து, இந்த சம்பவத்தில் வேறு யாருக்கெல்லாம் தொடர்பு உள்ளது என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். குன்றத்தூர் அருகே காரில் பிரவுன் சுகர் கடத்தி வந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.