பெங்களூரு: பெங்களூரு சி.கே. அச்சுக்கட்டு போலீஸ் சரகம் ஸ்கேட்டிங் மைதானம் அருகே நேற்று முன்தினம் இரவில் மாநகராட்சி குப்பை லாரியில் பெண் சடலம் கிடந்தது. சாக்கு மூட்டையில் சடலம் சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திய போலீசார் குற்றவாளியை நேற்று கைது செய்தனர். பெங்களூரு தெற்கு மண்டல துணை போலீஸ் கமிஷனர் லோகேஷ் பி ஜெகலாசர் இது குறித்து நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்கேட்டிங் மைதானம் அருகே மாநகராட்சி குப்பை லாரிகள் நிற்பது வழக்கமாகும். கடந்த 29ம் தேதி இரவில் அது போல் லாரி நின்று கொண்டிருந்த போது அவ்வழியாக வந்த நபர் மூட்டையை வீசி விட்டு சென்றுள்ளார். மறுநாள் காலையில் துப்புரவு பணியாளர்கள் இதை பார்த்த போது மூட்டையில் இருந்து ரத்தம் வழிந்துள்ளது. சந்தேகம் அடைந்த அவர்கள் அதை பிரித்த போது அதன் உள்ளே பெண் உடல் இருந்துள்ளது.
சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் அசாம் மாநிலத்தை சேர்ந்த சம்சுதீன்(33) என்பவரை கைது செய்துள்ளோம். இவர் ஏற்கனவே திருமணம் ஆனவர். 2 குழந்தைகள் உள்ளனர். அசாம் மாநிலத்தில் அவரின் குடும்பம் உள்ளது. பெங்களூருவில் காவலாளி பணி மேற்கொண்டு இந்த பகுதியில் வசித்துள்ளார். இதற்கிடையே ஆஷா(40) என்ற பெண்ணுக்கும் சும்சுதீனுக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. கணவனை இழந்த ஆஷா அவரின் 2 குழந்தைகளுடன் சம்சுதீனுடன் ஒன்றாக ஒரே வீட்டில் வசித்து வந்தார். சம்பவத்தன்று இரண்டு பேருக்கும் தகராறு ஏற்பட்ட போது ஆஷாவை சம்சுதீன் கொலை செய்து, சடலத்தை சாக்குப் பையில் கட்டி பைக்கில் கொண்டு வந்து குப்பை லாரியில் போட்டதை ஒப்புக்கொண்டுள்ளார், என்றார்.